WhatsApp-க்கு மாற்றா சிக்னல்? டஃப் கொடுக்கும் ஆப்கள், சிறப்புகள் என்ன?
மாற்று மெசேஜிங் செயலிகளின் பாதுகாப்பு அம்சங்கள்!
Whatsapp-பில் பிரைவேசி பாலிசி தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளதையடுத்து, பலரும் அச்சத்தில் உள்ளனர். அதிலிருந்து வெளியேறி மற்ற ஆப்களை பயன்படுத்தவும் பலர் தயாராகிவிட்டனர். மாற்று மெசேஜிங் செயலிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்...
Telegram: ரஷ்யாவைச் சேர்ந்த டுரோவ் (Nikolai, Pavel Durov) சகோதரர்களால் இந்த சேவை துவக்கப்பட்டது. 'வாட்ஸ்அப்'புக்கு மாற்றாக முன்வைக்கப்படும் செயலிகளில் முக்கியமானது டெலிகிராம். இது ஒன்றும் புதியதல்ல.
இந்தியர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். பாதுகாப்பு நோக்கில் பார்த்தாலும் சரி, சேவை அம்சங்கள் நோக்கில் அணுகினாலும் சரி, 'Telegram' ஏற்றதாக அமைகிறது.

இது முழுவதும் வாட்ஸ்அப் போலத்தான். அதில் உபயோகிக்கும் அனைத்து வசதிகளையும் இதிலும் பயன்படுத்த முடியும். நண்பர்களுடன் உரையாடலாம், குழு உரையாடலை மேற்கொள்ளலாம். தனி சேனல்களை அமைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் வாட்ஸ்அப்'பைக் காட்டிலும் இதில் கூடுதலாக சிறப்பு வசதி ஒன்றுள்ளது. அதாவது,
'வாட்ஸ்அப்' குழுவில் 256 உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்க முடியாது. டெலிகிராமில் 2 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம். 'பாட்’ எனப்படும் பல்வேறு இணைய மென்பொருள்களை வழங்குவது டெலிகிராமின் தனித்தன்மை.
டெலிகிராமில் 1.5 ஜிபி அளவு கோப்புகளை பகிர முடியும். இதனால் எக்கச்சக்கமான பிடிஎஃப் மற்றும் வீடியோக்கள் டெலிகிராமில் பரவுகின்றன. டெலிகிராம் 'என்கிப்ரிஷன்' வசதி அளிப்பதால் பாதுகாப்பானது. உறுப்பினர்களிடையே ரகசிய உரையாடல் மேற்கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது.
டெலிகிராம் சர்வர்கள் உலகம் முழுக்க இருக்கிறது. இதனால் சர்வர் பிரச்னை வராது. தகவல்களை மூன்றாம் தரப்பு அணுகும் விஷயத்தில் டெலிகிராம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. அரசு அமைப்புகள் கூட, இதனிடம் இருந்து தகவல் பெறுவது அத்தனை சுலபம் இல்லை. சில நேரங்களில் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் உண்டு.
Signal: வாட்ஸ்அப்'பில் பிரைவேசி சர்ச்சை காரணமாக அதிகமாக உச்சரிக்கப்பட்ட செயலியின் பெயர் சிக்னல். இந்த செயலி பாதுகாப்பு மற்றும் பிரைவசி நோக்கில் சிறந்தது என நம்பப்படுகிறது. ஓபன் சோர்ஸான இந்த செயலி லாப நோக்கில்லாத 'சிக்னல்' பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் என்கிரிப்ஷன் அமைப்பைதான் 'வாட்ஸ் அப்' பயன்படுத்துகிறது.
பயனாளிகள் பிரைவசியை மதிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. போன் எண் தவிர எந்த தகவல்களையும் சேகரிப்பதில்லை. முக்கியமாக வர்த்தக நோக்கில் பயனாளிகள் தகவல்களை பயன்படுத்துவதில்லை.

பயனாளிகள் குறிப்பெழுதி தங்களுக்குத் தாங்களே அனுப்பிக்கொள்ளும் வசதி இதன் தனிச்சிறப்பு. அமெரிக்க கிளர்ச்சியாளர் எட்வர்டு ஸ்னோடனே இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது என சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
Hike: ஸ்டிக்கர்கள் மூலம் பிரபலமானது ஹைக் செயலி. மற்ற செயலிகளைக்காட்டிலும் கொட்டிக்கிடக்கும் ஸ்டிக்கர்களால் பயனாளர்களை ஈர்த்தது. கவின் பார்தி மிட்டலால் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் ஹைக். மற்ற மெசேஜிங் செயலிகளைப்போல் அல்லாமல், எஸ்.எம்.எஸ் மூலம் ஆப்லைனிலும் செயல்படக்கூடியது இதன் சிறப்புகளில் ஒன்று.
அண்மையில் ஹைக்லாந்து என்ற வீடியோ சந்திப்பு வசதியை அறிமுகப்படுத்தியது ஹைக். இதில் உருவாக்கப்படும் குழுக்களில் 500 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ள முடியும். உரையாடல்களை ரகசியமாக மேற்கொள்ள ஹிடன் மோடு வசதியும் உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி இது என்பது குறிப்பிடத்தக்கது.