அஞ்சேல் 1 | கவ்வியதை விடேல்! -'உறியடி' விஜயகுமார் [பகுதி 1]
'உறியடி' மூலம் கவனத்துக்குரிய நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை அழுத்தமாகப் பதிவு செய்த விஜயகுமார் பகிர்பவை.
(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)
'சினிமாவில்தான் வாழவேண்டும். சினிமா போடும் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும்' - இந்த நோக்கத்தை நோக்கிதான் என் பயணம் தொடங்கியது...
நேரடியாக சினிமாவில் காலடியெடுத்து வைப்பதற்கு முன்பு மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்தேன். இன்ஃபோசிஸில் வேலை. வாழ்வாதாரப் பிரச்சினை இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் நடுத்தர நிலை. சினிமாதான் இலக்கு என்ற முடிவைத் தொடங்குவதற்காக மென்பொருள் துறைக்கு முற்றிலும் முழுக்குப் போட்டேன். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினேன்.
அமெரிக்காவில் இருந்தபோது 'உறியடி' படத்தை எழுதினேன். சாப்பிடுவதற்கும் வசிப்பதற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியான சூழலில் ஒன்றரை ஆண்டுகளாக எழுதினேன். முதலில் ஒரு வெர்ஷன் எழுதி முடித்தேன். அதற்கு ரூ.4 கோடி பட்ஜெட் தேவைப்பட்டது. நானும், என் நெருங்கிய நண்பரும் சேர்ந்து படத்தைத் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். அப்போது அவர் இந்தியாவில் இருந்தார். நம்பிக்கையுடன் இருந்தவேளையில், அவர் என் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றார். நான் எழுதிய கதையைக் கூட அவர் கேட்கவில்லை. குடும்ப நிலை காரணமாக அவரைத் தொடர்புகொண்டு பேசக்கூட முடியாமல் போய்விட்டது. தொலைபேசியிலும் மெயிலிலும் எத்தனை முறை தொடர்புகொண்டாலும் பதிலே இல்லை. அவரை நம்பிதான் எழுதவே ஆரம்பித்தேன். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுதான் 'உறியடி'க்காக நான் சந்தித்த முதல் சவால்.
நான் அதுவரை எழுதிவைத்த திரைக்கதையில் மாற்றம் செய்யத் தொடங்கினேன். படத்தில் இரண்டு ட்ராக்குகள் இருக்கும். ஒன்று, அரசியல்வாதி - வில்லனைச் சுற்றி நடப்பவை; மற்றொன்று, கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடப்பவை. இதில், வில்லன் ட்ராக்கை அப்படியே மாற்றிவிட்டேன். முதலில் அந்தப் பகுதியில் வைத்திருந்த அரசியல் பிரச்சினையே வேறு. அதைப் படமாக்குவதற்கு நிறைய பொருட்செலவு தேவை. எனவே, இப்போது படத்தில் இருக்கும் போர்ஷனை வைத்தேன்.
முதலில் யோசித்த திரைக்கதைப் பகுதியை அப்படியே மனத்துக்குள் பத்திரப்படுத்திக்கொண்டேன். அதை இன்னும் சில ஆண்டுகள் கழித்து தனியாக ஒரு படம் எடுக்கும் அளவுக்கு 'வெயிட்டான சப்ஜெக்ட்' இருக்கிறது.
அதேவேளையில், கல்லூரி மாணவர்கள் பகுதியில் கை வைக்கவில்லை. திரைக்கதையை முழுமையாகத் திருத்தி இரண்டாவது வெர்ஷன் எழுதி முடிப்பதற்குள் மேலும் 9 மாதங்கள் ஓடிவிட்டன.
காலம் வீணாகிறதே என்று தளரவில்லை. அதைப் படைப்பாற்றலுக்கான முதலீடாகக் கருதிக்கொண்டு எழுதினேன். ஒரு கதாபாத்திரமோ, ஒரு திரைக்கதை வடிவமோ எதுவும் எங்கிருந்தும் இன்ஸ்பையர் ஆகக் கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன். 'உறியடி'யின் குமார் கதாபாத்திரத்துடன் இல்யூஷனில் இரவுகளில் பேசிய அனுபவமும் உண்டு. அசலான சினிமாவைத் தருவதற்கு அந்த அளவுக்கு ஆழமாகச் சென்றுவிட்டதை பின்னர்தான் உணர்ந்தேன். ஒருவழியாக ஏற்கெனவே இட்டிருந்த திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்து அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினேன்.
மதிப்பின் மதிப்பு
சென்னைக்கு வந்ததும் உடனடியாக அலுவலகம் அமைத்தேன். நம் படத்தில் புதிய கலைஞர்களுக்கு வாய்ப்புத் தருவது என்று முடிவு செய்தேன். இதனால், சம்பளம் குறைவாகும் என்று உங்களில் சிலர் நினைக்கக் கூடும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. அனுபவம் இல்லாத காரணத்தால் படப்பிடிப்பில் நமக்கே தெரியாமல் பட்ஜெட் இழுக்கப்பட்டுவிடும். எனினும், திறமை மிக்க புதியவர்களை என் குழுவில் சேர்ப்பது என்ற முடிவுடன் ஆடிஷன் உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டேன். அதேவேளையில், ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் மட்டும் சற்றே பிரபலமானவர்களை நாடலாம் என்று தீர்மானித்தேன். நல்ல சம்பளம் தரத் தயாராக இருந்தாலும் ஹீரோ - ப்ரொட்யூஸர் புதிது என்பதால் எவருமே என்னையும் என் அலுவலகத்தையும் மதிக்கவே இல்லை. சினிமாவில் நிலை நிறுத்திக்கொண்டவர்களால் மட்டுமே விருப்பமான எதையும் செய்வது சாத்தியம் என்பது உரைத்தது.
'தமிழகத்தில் பெண் நடிகர்களே இல்லையா? ஏன் கேரளாவுக்குப் போய் அங்கிருந்து ஹீரோயின்களைக் கொண்டுவருகிறார்கள்?' என்று பரவலாக கேள்வி எழுதுண்டு. ஆனால், அவர்கள் எவருக்குமே தெரியாது, இங்கு பிரபலமாக இல்லையென்றால் எந்த நிலையில் இருக்கின்ற பெண் நடிகர்களும் நம்மை மதிப்பது இல்லை என்று. எனக்கு அதிர்ச்சித் தந்த அனுபவம் இது. ஆனால், 'உறியடி' பேசப்பட்ட பிறகு நிறைய பேர் முன்வந்தது வேறு கதை.
படப்பிடிப்புச் சிக்கல்கள்
மதிப்பு, மரியாதை சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி, படப்பிடிப்புக்குப் போகும்போது வேறு விதமான பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. அவைதான் நான் ஆரம்ப நிலையில் எதிர்கொண்ட மிக முக்கிய சவால்கள்.
பெரிய கம்பெனி - பிராண்ட் என்றால் படிப்பிடிப்பு நடத்துவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது. ஆனால், நாமோ புதியவர்கள் - சின்னவர்கள். இதனால், பொது இடங்களிலோ அல்லது ஏதாவது ஒரு ஊரிலோ படமெடுப்பது என்பது மிகப் பெரிய சிரமம். எங்கிருந்து எப்படி தலையீடும் பிரச்சினையும் வரும் என்று கணிக்கவே முடியாது. உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒருநாள் சாலை ஓரமாக கிரேன் முதலானவற்றுடன் படப்பிடிப்புக்குத் தயாரானோம். இரவு படப்பிடிப்பு. அந்த ஊர் கவுன்சிலர் வந்தார். 'இங்கு ஷூட்டிங் நடத்தக்கூடாது; நிறுத்து' என்று சொல்கிறார். காரணம், அவர் கேட்ட பணத்தை மேனேஜர் கொடுக்கவில்லை என்பதே பிரச்சினை. சரியாக படிப்பிடிப்புத் தொடங்கும்போது பிரச்சினை வெடிக்கிறது. அப்போது படப்பிடிப்பை நிறுத்தினால் எனக்கு அந்த ஒரே இரவில் ரூ.2 லட்சம் இழப்பு ஏற்படும். இரவு படிப்பிடிப்பு நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம். என்ன செய்வது?
சினிமாவில் நம் போன்ற முதல் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூட வாய்ப்பு இருக்காது. எந்தச் சூழலிலும் மன உறுதியுடன் அணுக வேண்டும்.
நான் எதைச் செய்தாலும், மாற்றுத் திட்டம் ஒன்றை வைத்திருப்பேன். அதுதான் எனக்கு அந்த இடத்தில் உதவியது. கவுன்சிலர் பிரச்சினை செய்த இடத்தில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏற்கெனவே பார்த்து வைத்த இன்னொரு இடத்துக்குச் சென்று வேலையை செய்து முடித்தேன். இதனால், எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நஷ்டத்தில் ரூ.1 லட்சம் குறைந்தது. இது ஒரு சம்பவம்தான். இதுபோல் வெவ்வேறு தரப்பிடம் இருந்து வெவ்வேறு பிரச்சினைகளுடன் சிக்கல்மிகு புறச்சூழல்களுடன் 52 நாட்கள் படப்பிடிப்பில் சந்தித்தேன். இதனால் தயாரிப்புச் செலவு, ஏற்கெனவே திட்டமிட்டதை விட மிக அதிகமானது.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ அல்லது பிரபலமான திரைப்படக் குழுவாகவோ இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்கு இந்த அளவுக்கு அதிகமாக இருக்காது என்று நம்புகிறேன். உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முதல் ரவுடிகள் வரை பல தரப்பையும் கடக்க வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் சினிமாக்காரர்கள் என்றாலே பணம் கொட்டுகிறது என்ற நினைப்பு இருக்கிறது. எவ்வளவு கொடுத்தாலும் தாங்கக் கூடியவர்கள் என்று அவர்களாக கணித்துக்கொள்கின்றனர். இதனால், ஒரு படத்தின் பட்ஜெட் இரண்டு - மூன்று மடங்குகளாக எகிறும்.
'அங்கமாலிஸ் டைரீஸ்' படத்தில் 80% சதவீதத்தினருக்கும் மேற்போட்டோர் புதியவர்கள் எனச் சொல்லிப் பிரபலப்படுத்தியிருப்பார்கள். 'உறியடி'யைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள்தான். மெட்ராஸ் படத்துக்கு முன்பே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததால் 'மைம்' கோபியும் புதியவர்தான்.
என் படத்தில் நடித்தவர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளித்த பிறகே படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். என்னதான் நடிப்பில் தேர்ந்தவர்களாக உருவானாலும், பொதுமக்கள் சூழ நடிக்கும்போதும், கேமராவைப் பார்க்கும்போதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். இதனால், ஒரு காட்சி எடுத்து முடிக்க அதிகநேரம் பிடித்துவிடும். இப்படி நேரம் கரைந்துபோனதில் சுமார் 30 சதவீத பட்ஜெட் அதிகரித்தது.
இதுபோன்ற சவால்களை பணத்தைவைத்துதான் சமாளிக்க முடியும். தரத்தில் சமரசம் செய்துகொள்ளாததால் வேறு வழியே இல்லாமல் பணத்தை அதிகம் செலவிட வேண்டிவந்தது. அதைச் செய்தேன்.
நான் சினிமாவுக்குப் புதிது. என்னோடு திறமையும் ஈடுபாட்டில் வெறியும் கொண்டவர்களைச் சேர்த்துக் கொண்டு மக்களுக்கு புது அனுபவம் தர விரும்பினேன். நான் விரும்பிய சினிமாவில் கவ்வியதை விடுவதற்கு விரும்பவில்லை. அதுவே எனக்கு அடுத்தடுத்து உத்வேகம் தந்தது.
'உறியடி'யில் சண்டைக்காட்சிகள் லைவ் ஆகவும் சிறப்பாகவும் வந்திருப்பதாக விமர்சகர்களும் ரசிகர்களும் கூறினர். அந்தக் காட்சிகளை நேர்த்தியாக படம்பிடிக்க எதிர்கொண்ட சவால்களும் போராட்டங்களும் சாதாரணமானவை அல்ல.
***இன்னும் பகிர்வேன்***
அடுத்த பகுதிகள்: அஞ்சேல் 2 | கலையில் விதி மீறு! - 'உறியடி' விஜயகுமார் [பகுதி 2]
அஞ்சேல் 3 | - அறம் தரும் தெம்பு - 'உறியடி' விஜயகுமார் [பகுதி 3]