அஞ்சேல் 2 | கலையில் விதி மீறு! - 'உறியடி' விஜயகுமார் [பகுதி 2]
'உறியடி' படத்தின் இயக்குநர் - நடிகர் - தயாரிப்பாளர் விஜயகுமார் பகிரும் அனுபவக் குறிப்புகளின் தொடர்ச்சி...
(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)
சினிமா எனும் கூட்டுக் கலை மூலம் என் சமூகத்தைப் பிரதிபலிப்பதில் உறுதியாக இருந்ததால், திரைப்படத்தில் இயல்புத் தன்மையை நிறுவுவதற்கு எந்தச் சாவலையும் எதிர்கொள்ளத் துணிந்தேன்.
'உறியடி'யில் சண்டைக் காட்சிகள் இயல்பு மீறாமல் வந்திருக்கும். அப்படி இயல்பாக உருவாக்குவதற்கு மிகப் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாலையோரம் காட்சிகளை வைக்கும்போது பொதுமக்கள் சாதாரணமாக நடந்துபோவதையும், வாகனங்கள் கடப்பதையும் சேர்த்தே பதிவு செய்யவேண்டும். கன்டினியூட்டியைத் தவறவிடக் கூடாது என்பது மட்டுமல்ல; கதை நிகழும் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே ஃபிரேமில் காட்டவேண்டும். இவற்றுக்கு மெனக்கெடுவது ஒரு பக்கம் என்றால், நடிகர்களும் கச்சிதமாக நடிக்கவேண்டும். இவை அனைத்துமே சரியாக அமைவதற்கு நிதானமும் துல்லியத்தன்மையும் மிக முக்கியம். எனக்கு நான் நேர்மையாக இருந்தேன். எங்கும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காக, கண்ணுக்குத் தெரியாத விஷயங்களுக்கும் போராடி வந்தேன்.
நான் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல; தீவிரமாக எதிர்ப்பவன். எனவே, வன்முறையை வன்முறையாகத்தான் காட்டவேண்டும். அதை ரொமான்ட்டிசைஸ் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடித்தால், பார்வையாளர்களுக்கு வலிக்கவேண்டும். நிஜ வன்முறையின் அச்சுறுத்தலை உணரவைக்க வேண்டும். அதுதான் எனக்கு சரியாகப்பட்டது.
ஒரு படத்தில் பணிபுரியும் சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் மகத்தானவர்களாக இருந்தாலும், இயக்குநர் தனது பங்களிப்பையும் நேர்த்தியாக செலுத்தவில்லை என்றால் திருப்தியாக அமையாது. நான் எடுக்கும் சினிமாவில் இயல்புத்தன்மை அவசியம் என்பதில் உறுதியாக இருந்ததால், நான் உட்பட நடிகர்கள் பலரும் நிஜமாகவே அடிவாங்கும்படி காட்சிகளை வைக்க நேர்ந்தது. படப்பிடிப்புத் தளத்துக்கு மூன்று முறை ஆம்புலன்ஸ் வரும் அளவுக்குப் போனது. இது சினிமா எடுக்கும் முறையா? என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் என் பதில். ஆனால், நான் என் மக்களின் வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்க விரும்பினேன். அதற்கு, இந்த உத்திதான் எனக்கு கைகொடுத்தது. சண்டைக் காட்சிகளில் வரும் அனைத்து நடிகர்களின் ஒப்புதலோடுதான் இந்த முறையைப் பின்பற்றினேன். அவர்களும் என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
ஒரு காட்சியில், தன் நண்பனை அடித்த ஒருவரைத் தேடி கல்லூரி மாணவர்கள் போவார்கள். சாலையோரம் அவரைக் கண்டுபிடித்து அடிப்பார்கள். அப்போது, என்னிடம் கொடுக்கப்பட்ட ஹாக்கி ஸ்டிக்கில் டம்மித் தன்மை குறைவாக இருந்துவிட்டது. நான் அடித்தபோது, அவர் தன் தலையை தவறுதலாக உள்ளே கொடுத்துவிட்டார். அடித்த அடியில் ரத்தம் தெறித்தது. நாங்கள் அலறிவிட்டோம். உடனடியாக ஆம்புலன்ஸ் வரழவைக்கப்பட்டது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வீர்கள்?
அந்தக் காட்சியை அப்போது முடிக்கவில்லை என்றால், ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பு உறுதி. அதேநேரத்தில், அடிபட்டவரைக் காக்கவேண்டும். அவரை ஆம்புலன்ஸில் அனுப்பும்போது அவரது சட்டையை மட்டும் கழட்டிவிட்டு வேறு சட்டை போட்டு, படக்குழுவில் சிலரை அவருடன் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டேன். அந்தச் சட்டையை வேறு ஒருவருக்குப் போட்டு, அந்தக் காட்சியை முடித்து மேட்ச் செய்துவிட்டேன். இதுபோல் மூன்று, நான்கு முறை நடந்தன. தாபா சண்டைக் காட்சியில் செயற்கைத் தூசிகளைத் தூவிவிட்டு காட்சிப்படுத்தினோம். அதனால், எனக்கு ஒருமாத காலம் மூச்சுப் பிரச்சினை நீடித்தது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடித்துவிட்டு நள்ளிரவில் ஒரு மருத்துவமனைக்குச் சென்று நெபுலைஸர் வைப்பதை வழக்கமாகக் கொண்டேன். இயக்குநரும் நடிகனும் நானேதான் என்பதால், ஒருநாள் முடங்கினால் கூட பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே, எதையும் தாங்கித்தான் ஆகவேண்டும். இப்படியாக, அசலான சினிமாவைத் தர முயற்சிப்பதற்கு, பட்ஜெட்டில் மட்டுமின்றி படக் கலைஞர்களின் பாதுகாப்பிலும் ஒருசேர கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மனவெழுச்சியை கட்டுக்குள் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
என் உதவி இயக்குநர்கள் அனைவருமே புது இளைஞர்கள்; ஒருவர்கூட அதுவரை சினிமா படிப்பிடிப்புத் தளத்தைப் பார்த்திடாதவர்கள். இருவர் விஸ்காம் படித்தவர்கள், இருவர் வாய்ப்புத் தேடியவர்கள். ஒருவர் மட்டும் இயக்குநர் அமீரிடம் ஒரு படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷனில் வேலை பார்த்தவர். இவர்கள் மட்டுமல்ல, நானே எந்தப் படத்திலும் பணிபுரிந்த அனுபவமில்லை. இவர்களை பக்கபலமாக வைத்துதான் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். அனுபவம் இல்லை என்றாலும் கூட, சினிமா மீது இவர்களுக்கு இருந்தது பெருங்காதல். அதுதான் அர்ப்பணிப்புடன் பணிபுரியத் தூண்டுதலாக இருந்தது. இதைச் சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
நான் பின்பற்ற நினைத்துச் செய்தது 'கொரில்லா ஃபிலிம் மேக்கிங்'தான். எந்த விதிமுறைகள் குறித்தும் கவலைப்படவே இல்லை. சினிமா எனும் கூட்டுக் கலையில் விதிகளை உடைப்பதில் விவரிக்க முடியாத தனி மகிழ்ச்சியும் கூட.
ஒரு படம் நேர்த்தியாக இருப்பதற்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பும் மிக முக்கியம். வெளிச்சம் பாய்ந்த நடிப்புக் கலைஞர்கள் போலவே திறமைவாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சிலரும் பாரபட்சம் காட்டுதல் என்ற தவறானப் போக்கு இருப்பதைக் கண்டுகொண்டது மேலும் போராட்டத்தைக் கூட்டியது. பிரபலமான தயாரிப்பு நிறுவனம், பிரபலமான இயக்குநரின் படம் என்றால் மட்டுமே 'தனக்குத் தொடர்ச்சியாக நல்ல வாய்ப்பு வரும்' என்று கருதி, தொழில்நுட்பக் கலைஞர்கள் சிலர் புதியவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. நான் அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாகத் தர முன்வந்தால்கூட அவர்கள் செய்ய மறுத்ததுதான் இன்னொரு அதிர்ச்சி. ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டவில்லை; சிலர் அப்படி இருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களைக் கையாளும் விஷயத்தில் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களால் நான் திட்டமிட்டிருந்த பட்ஜெட் மேலும் மேலும் எகிறத் தொடங்கியது. உடனடியாக, என்னிடம் இருந்த சொத்து ஒன்றை விற்றுவிட்டு படவேலைகளைத் தீவிரப்படுத்தினேன்.
படப்பிடிப்பு நடந்து முடிந்தவுடன்தான் இசை வேலையைத் தொடங்கினேன். ஏற்கெனவே ரூ.5.5 லட்சம் வாங்கிய ஒரு இசையமைப்பாளர் இழுத்தடிக்க ஆரம்பித்தார். இசை அமைத்துத் தருவதற்கான அறிகுறியே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், அவரிடம் முழுமையாக ஏமாந்துவிட்டேன். முன்பணம் கொடுத்துவிட்டோம் என்பதற்காக, ஈடுபாடு இல்லாத ஒருவரை இசையமைக்க வைப்பதில் விருப்பம் இல்லை.
சில நேரங்களில் தரம் என்ற ஒரே விஷயத்துக்காக பல இடங்களில் ஏமாற்றப்படுவதைத் தாங்கிக்கொள்ள வேண்டியது கட்டாயம்.
நானும் விரும்பியே ஏமாந்தேன். பிடிக்காத இணையரைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை அதோகதிதான். எனவே, ஐந்தரை லட்ச ரூபாய் இழப்பை விரும்பி ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு இன்னொரு இசையமைப்பாளரும் ஏமாற்றினார். அவரது காரை விட எனது கார் விலை குறைந்த சாதாரணமானது என்பதால் என்னைப் பார்த்த அலட்சியமான பார்வை அப்படியே கண்முன் நிற்கிறது.
சினிமாவில் சீன் போடுதலும் கட்டாயம் போலும் என்பதை உரைத்தது. ஆனால், அது எனக்கு எப்போதும் வரவே வராது.
அப்படி ஒரு வறட்டு மரியாதை தேவையற்றது. இன்னொரு புது இசையமைப்பாளரை நாடினேன். அவருடனே ரெக்கார்டிங்கில் மூன்று மாதங்கள் இருந்தேன். அவரோ வேறு சில படங்கள் கமிட் ஆகி தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டால். நொந்துபோனேன். ஆனால் அசரவில்லை.
ஒரு படத்துக்கு ஒலி அமைப்பு மிக முக்கியம் என்பதால் 'உறியடி'க்காக சவுண்ட் எஞ்சினியரிங் கற்றுக்கொண்டேன். அதை அடிப்படையாக வைத்து பின்னணி இசையை நாமே செய்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பிளேயர்களிடம் ஃபீல் மட்டும் சொல்லி, 30 நிமிடங்களுக்கு ட்ராக்குகளை வாங்கினேன். மல்டி லேயர்களாக பெற்ற ட்ராக்குகளில் ஒவ்வொரு லேயராகக் கேட்டு, பின்னணி இசையைக் கோர்க்க ஆரம்பித்தேன். நான்கு மாதங்களுக்கு சிறை வாழ்க்கை போல் அலுவலகத்துக்குள்ளேயே இரவு பகலாக பின்னணி இசையை முடித்தேன். அதன்பின் ஒருவழியாக மிக்ஸிங் செய்து இசையால் ஏற்பட்ட சவாலை சமாளித்தேன். பின்னர்தான் 'மசாலா கஃபே' உள்ளே வந்தார்கள். படத்தின் பாடல்களை அவர்களிடம் இருந்து பெற்றேன்.
இசைக்குப் பிறகு எடிட்டிங்கில் போராட்டம் தொடர்ந்தது. உறியடிக்கு ஒப்பந்தமான எடிட்டர் வேறொரு ஸ்டார் வேல்யூ படம் ஒன்றில் முழுமையாக தன்னை 'அர்ப்பணித்து'க் கொண்டார். பின்னணி இசையையே ஒரு வழியாக முடித்துவிட்டேன்; எடிட்டிங்கையும் கற்றுக்கொள்வோம் என்று முடிவெடுத்து, அதையும் செய்தேன். என் படத்தை ஏற்கெனவே மனக்கண்ணில் ஷாட் பை ஷாட் காட்சிப்படுத்திப் பார்த்துவிட்டதால், எடிட்டிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கடுமையான முயற்சிக்குப் பிறகு ஒரு வழியாக சென்சார் வெர்ஷனை எடிட் செய்துவிட்டேன். பிறகு, எடிட்டிங்கில் அபினவ் வந்தார்.
இசையிலும் எடிட்டிங்கிலும் சமரசம் செய்துகொள்ளாமல் பணமும் நேரமும் வீணானாலும் பரவாயில்லை என்று பிடிவாதமாக இருந்ததால், உறியடியைத் திரையில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரமுடிந்தது.
இசையிலும் எடிட்டிங்கிலும் போராடி படத்தை முடித்த பிறகு சென்சாரில் காத்திருந்தது பேரிடி. அந்தச் செயற்கைப் பேரழிவு மட்டுமா... சென்னை மழையால் இயற்கைப் பேரிடரிலும் சிக்க நேர்ந்தது.
***இன்னும் பகிர்வேன்***
முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 1 | கவ்வியதை விடேல்! -'உறியடி' விஜயகுமார் [பகுதி 1]