ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு படிப்பு வாசத்தை காட்டிய ஆசிரியர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் கல்வி என்றாலே பல அடி ஓடிய மாணவர்களை விரட்டிப் பிடித்து பள்ளிக்கு படிக்க அழைத்து வந்தவர் ஆசிரியர் மகாலட்சுமி. அவர் அப்படி செய்ய என்ன காரணம்?
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரைப்படமான ‘வாகை சூட வா’ பார்க்காதவர்களுக்கு மகாலட்சுமி ஆசிரியரின் செயல்பாடுகள் அதனை நினைவுபடுத்தும். திருவண்ணாமலை மாவட்டம் அருகே சிறிய கிராமத்தில் பிறந்த இவர் ஒரு பின்தங்கிய இன மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்து அவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியுள்ளார்.
பார்க்க சாரதாணமாக தோன்றும் இந்த மகாலட்சுமி அப்படி என்ன சாதித்து விட்டார் என்று கேட்கத் தோன்றும். அவர்களுக்கான பதில் இது தான், அனைத்து வசதிகளும் நிறைந்த பள்ளியில் நல்ல பின்னணியில் வளரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து அவர்களை முதல் மதிப்பெண் பெற வைப்பவர் மட்டும் சிறந்த ஆசிரியர் அல்ல. கல்வியின் வாசனையே தெரியாத ஆதிதிராவிட பழங்குடியின மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு அந்த கல்வியறிவை புகட்டுவதே சிறந்த ஆசிரியருக்கான அடையாளம். அப்படி ஒரு அடையாளமாக மாணவர்களுக்குத் திகழ்கிறார் மகாலட்சுமி.
மகாலட்சுமியின் குடும்பம் நல்ல பொருளாதாரமோ, கல்வியறிவு பெற்றதோ அல்ல. கடைக்குட்டியான மகாலட்சுமி படிப்பில் படு சுட்டி, விவசாயி தந்தைக்கு பார்வைத்திறன் குறைபாடு ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கிவிட தாய்க்கும் மனநிலை சரியில்லை. ஆண் வாரிசு இல்லாத வீடு என்பதால் அடுத்து படிப்பு என்னவாகுமோ என்று தயங்கி நின்ற மகாலட்சுமிக்கு அக்காள் ரமணி முன்நின்று மகாவை வழிநடத்திச் சென்றுள்ளார். கூலி வேலை செய்து, நிலத்தை அடமானம் வைத்து மகாலட்சுமியை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார் ரமணி.
பள்ளிக்கட்டணமும் பள்ளி சென்று வர சைக்கிளும் அக்கா வாங்கி கொடுத்தாலும் சீருடைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சீனியர் அக்காக்களின் பழைய சீருடைகளை வாங்கி உடுத்திச் சென்று படித்திருக்கிறார் மகாலட்சுமி.
இப்படியாக +2 முடித்து அக்கா விருப்பப்படி டீச்சர் டிரெயினிங் முடித்து தான் படித்த பள்ளியிலேயே 4 மாதங்கள் பணியாற்றியுள்ளார். இந்த சமயத்தில் தான் திருவண்ணாமலையை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் இருந்தது மகாலட்சுமியின் தோழி மூலம் தெரிய வந்தது.
“பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிக அளவில் இருந்ததால் மத்திய அரசு கஸ்தூரிபாய் காந்தி பாரத வித்யாலயா என்று பள்ளிகளைத் தொடங்கியது. ஜவ்வாது மலைப்பகுதியில் தொடங்கவுள்ள 4 பள்ளிகளில் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்று தோழி கூறிய நம்பிக்கையோடு சென்ற போது என் தோழிக்கு அரசுப் பணி கிடைக்கவே 2 மாதங்கள் அவர் பணியாற்றிய இடத்தில் நான் பணியாற்றினேன்,” என்கிறார் மகாலட்சுமி.
இந்த 2 மாதத்திற்குள்ளாகவே மகாலட்சுமிக்கும் அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு செயல்படுத்தும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்வதற்கான அழைப்பு ஆணை மகாலட்சுமிக்கு வந்தது. குடும்பத்தை விட்டு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்று அக்கா மறுப்பு தெரிவித்த போதும் நான் கல்விக்காக கஷ்டப்பட்ட போது பலர் உதவியது போல சமுதாயத்தில் பின்தங்கிய மலைவாழ் மக்களின் பிள்ளைகள் கல்விக்காக நான் உதவுவது தான் சரியானதாக இருக்கும் என்று புரியவைத்து பணியில் சேர்ந்தேன் என்று கூறுகிறார் மகாலட்சுமி.
கல்வியை தான் நாடி ஓடிய நினைவுகளோடு 2006 ஜனவரி மாதம் மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜமுனாமரத்தூரை அடுத்த அரசவெளியில் இருந்த அந்தப் பள்ளிக்கு பல கனவுகளுடன் சென்றேன். ஆனால் அங்கு நான் பார்த்த காட்சி என் கண்களை குளமாக்கியது.
அங்கு பள்ளி இருந்தது வகுப்பறைகள் இருந்தது ஆனால் மாணவர்கள் மட்டுமில்லை. பள்ளியில் இருந்த ஊழியர்களிடம் கேட்ட போது இங்கு இப்படித்தான் மாணவர்கள் 12 மணிக்கு சாப்பாடு வாங்குவார்கள் என்று கூறினர். இதனால் மாணவர்களுக்காக காத்திருந்த போது 12 மணிக்கு 2 மாணவர்கள் வந்து சாப்பாடு வாங்கிவிட்டு சிட்டாக பறந்து விட்டனர்.
என்ன செய்வதென்றே தெரியாமல் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஆசைஆசையாய் வாங்கி வந்த சாக்லேட், பென்சில் உள்ளிட்டவற்றை தரையில் போட்டுவிட்டு அங்கிருந்த அரசமரத்தடியில் அமர்ந்து மனபாறம் தீர அழுதுவிட்டு மாலை வீடு திரும்பினேன்.
அடுத்த நாள் 2 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தனர், அவர்களும் மதியத்திற்கு மேல் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்றுள்ளனர். இந்த மாணவர்கள் இப்படி இருப்பது அவர்களின் தவறல்ல நகரப் பகுதிகளில் இருக்கும் வளர்ச்சி அதிக அளவில் இல்லாத மலைப் பகுதி மக்களிடம் கல்வி உள்ளிட்ட முன்னேற்றம் காணும் விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது சமுதாயத்தின் குற்றம் என நினைத்தேன். இப்படியே நாட்கள் நகர்ந்தது இனியும் மகாலட்சுமியாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது தைரியலட்சுமியாக மாற வேண்டும் என்று மனதில் உறுதியேற்றேன்.
மலைவாழ் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் பெற்றோரிடம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கெஞ்சினேன். அதற்கு அவர்கள் நீ வந்து மாடுமேய்ப்பாயா குழந்தைகளை பார்த்துக் கொள்வாயா என்று சிடுசிடுத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் அவமானங்களைக் கடந்து இப்படியே அந்த மக்களை சந்தித்து வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்ட மகாலட்சுமி ஒரு கட்டத்தில் மாணவர்களை தூக்கிக் கொண்டு கூட பள்ளிக்கு ஓடிப்போயிருக்கிறார்.
வாக்குவாதத்திற்கு வரும் பெற்றோரிடம் பிள்ளைகளை படிக்கவிடுங்கள் விடுமுறை நாட்களில் வேண்டுமானால் நான் வந்து மாடு மேய்த்துத் தருகிறேன் என்று கூட கூறி இருக்கிறார் மகாலட்சுமி.
முதலில் 10 குழந்தைகளை அழைத்து வந்து போர்டில் சிலவற்றை எழுதிப்போட்டு அவர்களை படிக்கச் சொல்லிவிட்டு எஞ்சிய மாணவர்களை பிடிப்பதற்காக காட்டிற்கு சென்றுவிடுவாராம். “நான் வருவதை தெரிந்து கொண்டு மாணவர்கள் வீடுகளில் இருக்காமல் காடுகளில் பதுங்க ஆரம்பித்தனர், மற்ற பிள்ளைகளுக்கு ஐஸ் வைத்து அவர்களின் மறைவிடத்தை தெரிந்து கொண்டு காடு, மேடு தாண்டி ஓடி சகதிகளில் விழுந்து புரண்டு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தேன். என்னை அடித்தாலும் பரவாயில்லை என்று மலைவாழ் மக்களின் வீட்டிற்குள் புகுந்து பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தேன்,” என்கிறார் மகாலட்சுமி.
என்னுடைய 3 மாதங்கள் ஓட்டத்திற்கு பலன் கிடைத்தது என் மீது பாவம் பார்த்து சிலர் பிள்ளைகள் ஒளிந்து கொண்டிருக்கும் இடங்களை காண்பித்தனர், அவர்களே பிள்ளைகளை பிடித்து என்னிடம் கொடுத்தனர். முதன்முறையாக உணவை சாப்பிடும் குழந்தைக்கு எவ்வளவு ஆர்வம் இருக்குமோ அவ்வளவு ஆர்வத்துடன் மாணவர்கள் படிக்கத்தொடங்கினர். 10 வயதிற்கு மேல் இருந்தவர்களுக்குக் கூட ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை போட்டுள்ளேன்.
மதியம் வரை பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு சிறு பிள்ளைகளை மடியில் படுக்க வைத்து அவர்களுக்கு கதை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தேன், கதையை தொடர் போல சொல்லியதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதும் தொடர்ந்தது.
ஒரு சிலரைத் தவிர மற்ற மாணவர்கள் குளிக்காமலும் நல்ல உடை உடுத்தாமலுமே பள்ளிக்கு வருவார்கள், அவர்களை பள்ளியிலேயே குளிக்க வைத்து, தெரிந்தவர்களிடம் பெற்று வந்த பயன்படுத்தப்பட்ட ஆடைகளை உடுத்தி சுத்தத்தை முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். மாணவர்கள் முடி வெட்டாமல் கூட வந்ததால் நானே முடி வெட்டிவிட்டேன், அது சரியாக இல்லை என்று மாணவர்கள் எண்ணியதால் சலூனுக்கு சென்று முறையாக முடிவெட்டக் கற்றுக் கொண்டு பிறகு மாணவர்களுக்கு அழகாக முடிவெட்டி அவர்கள் கண்ணாடி பார்த்துப் பழகும் பழக்கத்தை கொண்டு வந்தேன் என்று அனைவரிடமும் தாயன்பு பாராட்டிய தருணங்களை அசைபோடுகிறார் மகாலட்சுமி.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் தொடர் ஓட்டத்தின் பலனாக பள்ளியில் 150 மாணவர்கள் சேர்ந்தனர். எப்போதெல்லாம் மாணவர்களின் வருகை குறைகிறதோ அப்போது காட்டை நோக்கி அவர்களைத் தேடி மகாவின் கால்கள் ஓடித் தொடங்கியது. ஒரு வழியாக பள்ளி வகுப்பறைகளை நிரப்பி பாடம் கற்பிக்கத் தொடங்கிய நிலையில் சுற்றுவட்டார கிராம மக்களும் ஆசிரியையின் சேவையை அறிந்து அவர்களின் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினர்.
வயதிற்கேற்ப வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் 2010ல் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பல மாணவர்களுக்கு இரட்டை உயர்வு கொடுத்து எட்டாம் வகுப்பு பாடம் எடுத்து, அவர்களை வேறு பள்ளியில் உயர்கல்விக்காக சேர்த்துள்ளார். 5ம் வகுப்பு கூட தாண்டாத மாணவர்களை தன்னுடைய முயற்சியால் அருகில் இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து அவர்கள் கல்லூரி வரை சென்று படிக்க முயற்சிகளை எடுத்துள்ளார் இந்த ஆசிரியர்.
தன்னார்வ அமைப்பு ஒன்றின் மூலம் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களை கல்லூரிச் சாலைக்கும் அனுப்பியுள்ளார் இவர். பெண்கள் கல்வி பெறுவதால் இந்தப் பகுதிகளில் நடந்து வந்த குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன. அதே போன்று மாணவர்கள் தங்களின் அப்பாக்களை செம்மரம் வெட்ட வெளி ஊர் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.
2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் மகாலட்சுமியால் நிர்வாகத்தினர் சிலருக்கு எரிச்சல் வர அவரை பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரை செய்ததன் பேரில் மகாலட்சுமிக்கு பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது. ஆனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடத்தி அந்த ஆணையை திரும்பப் பெற்றதாகக் கூறுகிறார் மகாலட்சுமி.
தன் பிறந்தநாளுக்கு நண்பர்கள் என்ன வேண்டும் என்று கேட்டால் விடுதிக்கு மிக்ஸி, கிரைண்டர் மாணவர்களுக்குத் தேவையானவற்றை பரிசாக கேட்டுப் பெறுகிறார் மகாலட்சுமி. அதோடு நின்றுவிடாமல் முகநூல் மூலமும் மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளார். பெண்ணியவாதியுமான மகாலட்சுமி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் சீருடையில் மாற்றம் வேண்டும் என்று சுடிதார் அணிந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். சில வருடங்களாகவே சேலை மீது ஓவர் கோட் அணிந்து வகுப்பு நடத்தியவர் இப்போது சுடிதாருக்கு மாறி இருக்கிறார்.
மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி கலை சார்ந்தவற்றிலும் ஆர்வம் இருப்பதால் அதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். பல மாணவர்களுக்கு சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது சரியான வழிகாட்டுதலோடு அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்து பார்த்துக் கொள்வதால் அவர்களின் கவனம் சிதறாமல் இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர் என்கிறார் மகாலட்சுமி.
“மாணவர்களை பட்டதாரிகளாக்குவதோடு சிறந்த சமூகநீதி தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். என்னிடம் இருப்பது அனைத்தும் விதைகள் அந்த விதைகளுக்கு எவ்வளவு சூரிய ஒளி, நீர் தேவை என்பதை அறிந்து அவற்றை நல்ல மரமாக்குவது எனது கடமை. ஆணாதிக்கம், சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளை தட்டிக் கேட்கும் சமூக நீதி பாதுகாவலர்களை உருவாக்கும் கலமாகவே ஆசிரியர் பணியை பார்க்கிறேன். இதை சேவை என்று சொல்வார்கள் ஆனால் யாரோ செய்யத்தவறிய கடமையை நான் இப்போது செய்கிறேன்,” என்கிறார் மகாலட்சுமி.
இடஒதுக்கீடு எனக்கான ஒரு வேலையை கொடுத்தது. குழந்தைகள் இல்லாவிட்டால் ஆசிரியர் என்ற ஒருவரே கிடையாது. பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடுகள் இன்னும் நிரப்பப்படாமலே இருப்பதற்கான முக்கியக் காரணம் அந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே, எனவே அவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை மாணவர்கள் அடையச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படுகிறார் மகாலட்சுமி.
மாணவர்களுக்கு சக மாணவன், தோழன், உணவு ஊட்டி கதை சொல்லி உறங்க வைக்கும் தாய், கல்வியறிவு புகட்டும் ஆசான் என பன்முகம் காட்டும் மகாலட்சுமி ஆசிரியை போல எல்லா ஆசிரியர்களும் இருந்துவிட்டால் கல்வி எட்டாக்கனி என்ற நிலை மாறி கல்வி நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழும்.