வீரதீர செயலுக்கான விருது பெற்ற 22 சிறார்கள்!
10 சிறுமிகள், 12 சிறுவர்கள் உள்ளிட்ட 22 பேர் தேசிய வீரதீர விருது பெற, குழந்தைகள் நலனுக்கான தேசிய கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
10 சிறுமிகள், 12 சிறுவர்கள் உள்ளிட்ட 22 பேர் தேசிய வீரதீர விருது பெற குழந்தைகள் நலனுக்கான தேசிய கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் இந்தியாவின் 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீர தீர விருது பெறும் சிறார்களில் ஒருவரான 15 வயது ஆதித்யா கே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். 2019 மே மாதம் அவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்று நேபாளத்தில் தீ பிடித்துக்கொண்ட போது, ஆதித்யா 40 பேர் உயிரைக் காப்பாற்றினார். இந்திய எல்லையை அடைய 40 கிமீ இருந்த போது பஸ் தீ பிடித்துக்கொண்டது.
டிரைவர் தப்பி ஓடிய நிலையில், ஆதித்யா பின் பக்க கண்ணாடியை சுத்தியால் உடைத்து பயணிகள் தப்பிக்க வழி செய்தார். அதன் பிறகு பெட்ரோல் டாங்க் வெடித்து பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது.
விருது வழங்கும் விழாவில்,
“ நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். இந்த ஊக்கத்தொகையை படிக்க பயன்படுத்திக்கொள்வேன்,” என்று ஆதித்யா புன்னகையுடன் கூறினார்.
கேரளாவைச் சேர்ந்த முகமது முஷின், ’அபிமன்யூ விருது’ பெறுகிறார். இவருக்கு மட்டும் தான் இறந்த பிறகு இவ்விருது வழங்கப்படுகிறது.
கோழிக்கோடுவைச் சேர்ந்த முகமது, தன் உயிரை பொருட்படுத்தாமல் கடலில் மூழ்க இருந்த தனது மூன்று நண்பர்கள் உயிரைக் காப்பாற்றினார். முகமதுவின் பெற்றோர் கண்ணிருடன் நெகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
”என் பிள்ளை துணிச்சலான மரணத்தை தழுவினார். இந்த விருது அனைத்து வீர குழந்தைகளுக்கானது,” என முகமதுவின் தந்தை கண்ணீர் மல்கக் கூறினார்.
ஜம்மூ காஷ்மிரைச் சேர்ந்த முகல் மற்றும் முதாசர் அஷரப் ஆகியோர் விருது பெற்றதை பாதுகாப்புப் படையினர் அவர்கள் வீட்டிற்குச் சென்று தெரிவித்தனர். முகல், தனது குடும்பத்தை பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றினார். முகல் குடும்பம் எல்லைக்கோடு அருகே வசிக்கிறது. முதாசர், விமானப்படை விமானம் விழுந்து நொருங்கிய போது, விமானப் படையினருக்கு உதவினார்.
13 வயதான அலைகா, தங்கள் கார் விபத்துக்குள்ளான போது, குடும்பத்தைக் காப்பாற்றினார்.
“அலைகா எங்கள் ஒரே குழந்தை. அவர் தான் எங்கள் மகன், மகள். சிறுமிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என உணர்த்தியிருக்கிறார்,” என அவரது பெற்றோர் உற்சாகமாக கூறுகின்றனர்.
உத்தர்காண்ட் மாநிலத்தில் 4 வயது சகோதரரை சிறுத்தை பிடியில் இருந்து காப்பாற்றிய 10 வயது ராக்கிக்கு ’மார்கண்டேயன் விருது’ வழங்கப்பட்டது. இந்த மீட்பில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த குழந்தைகள் 150 நேரடி விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டதாக கவுன்சிலின் தலைவர் கீதா சித்தார்த்தா கூறுகிறார்.
முதலைகள் நிறைந்த ஆற்றில் படகு கவிழந்த போது 12 பேர் உயிரைக் காப்பாற்றிய ஒடிஷாவின் பூர்ணிமா கிரி மற்றும் சபிதா கிரி ஆகியோர் ’துருவ் விருது’ பெறுகின்றனர்.
அசாமின் கமல் கிருஷணா, சத்தீஷ்கரின் கந்தி பைக்ரா, பரனேஸ்வரி நிர்மல்கர், கர்நாடகாவின் வெங்கடேஷ், ஆர்த்தி கிரண், மகாராஷ்டிராவின் ஜென் சதவர்தே, ஆகாஷ், மணிப்பூரின் லோரம்பம் மன்கங், மேகலயாவின் எவர்புலும் நோங்குரம் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர்.
தொகுப்பு: சைபர்சிம்மன்