குறைந்த செலவு; அதிக ரீச்: ‘கொரில்லா மார்கெட்டிங்’ என்றால் என்ன?
அதிகமான கஸ்டமர்களைப் பெறுவது மட்டுமல்ல, அதிகமான பார்வையாளர்களைப் பெறுவதும் பிசினஸில் ஜெயிப்பதற்கான ஈஸி வழிதான்.
ஒரு பொருளை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் அதன் விற்பனை அதிகமாகும் என்பது சிம்பிள் லாஜிக். என்னுடைய பிசினஸ், மினிமல் பட்ஜெட் பிளானிங் கொண்டது. என்னால் நிறைய தொகையை விளம்பரத்திற்காக ஒதுக்க முடியாது என்பவர்களுக்குக் குறைந்த செலவில் அதிகமான வாடிக்கையாளர்களை பெற ‘கொரில்லா மார்கெட்டிங்’ ‘Geurilla Marketing' முறை நிச்சயம் கை கொடுக்கும்.
கொரில்லா மார்கெட்டிங் என்பது தமிழகத்தில் ஒரு புது கான்செப்ட் தான். ஆனால் பிசினஸில் அது கொடுக்கும் அசுர மாற்றம் பற்றி விரிவாக காண்போம்.
டிவி, ரேடியோ, பேனர்கள் என விளம்பரத்திற்கான எந்த அடிப்படை மீடியாக்களும் இல்லாமல் புதுமையான முறையில் பிராண்டிங் செய்து நிறைய மக்களை ரீச் செய்வதே 'கொரில்லா மார்க்கெட்டிங்' டெக்னிக். இந்த மார்கெட்டிங் டெக்னிக்கை நிச்சயம் எந்த வியாபாரத்திற்கும் எல்லா பொருளுக்கும், எல்லா ஊரிலும் நடைமுறைப்படுத்த முடியும்.
'என் பொருளை வாங்குங்கள்' என பொருளை அல்லது உங்கள் பிராண்டை விற்பனை செய்யாமல் மக்களை ஆச்சரியப்படுத்தியோ, ஈர்த்தோ, ஸ்டன்னிங் அடையச் செய்தோ, சர்ப்ரைஸ்கள் மூலமாகவோ அவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களுக்கு உங்கள் பிராண்ட் பற்றிய அவேர்னஸ்ஸை அளிக்க எப்படி மார்கெட்டிங் செய்யலாம் என்பது பற்றிக் காண்போம்.
மும்பையில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மாலில் விலையில்லா கடை (ஃப்ரீ ஸ்டோர்) ஒன்று தொடங்கப்பட்டது. அங்கிருக்கும் பொருளை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிப்புகள் விடப்பட்டது. மக்கள் அந்த இலவசப் பொருட்களில் இருந்து பொருள்களை எடுக்கக் குவிந்தனர். ஆனாலும், ஒருவராலும் அந்தப் பொருளை எடுக்க முடியவில்லை. காரணம், அந்தப் பொருள்கள் எல்லாம் அலமாரியில் ஓட்டப்பட்டு இருந்தது தெரிந்தது.
பொருளை உடைக்காமல் எடுக்க முடியாது என்று மக்கள் உணர்ந்த போது தான், அது ஃபெவிக்கால் விளம்பரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். குறைந்த செலவில் மும்பையில் இருந்த பெரும்பாலான மக்களின் கவனத்தை Fevicol நிறுவனம் பெற்றது.
எனவே கொரில்லா மார்கெட்டிங் டெக்னிக்கை பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என யார் வேண்டுமானலும் நடைமுறைப்படுத்த முடியும் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இதே போன்று ஒரு டிஸ்யூ பேப்பர் நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆள் உயர டீ கப் ஒன்றினை தயார் செய்து அதிலிருந்து டீ கொட்டிக் கொண்டிருப்பது போன்று விளம்பரம் செய்தார்கள்.
மக்கள் எல்லாரும் நடுரோட்டில் ஆள் உயர டீ கப் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை யோசிக்கும் போது,
எங்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் அதனால் எப்போதும் டிஸ்யூ பேப்பர்கள் பயன்படுத்துங்கள் என விளம்பரம் செய்தார்கள்.
இப்படியாக் மக்களை யோசிக்க வைத்து பொருள்களை விற்பனை செய்வதே கொரில்லா மார்கெட்டிங். இது போன்ற வித்தியாசமான கான்செஃப்ட்களை உங்களுடைய பிராண்டிலும் நடைமுறைப்படுத்தி மக்களை ஈர்த்து விற்பனை செய்ய இயலும்.
கொரில்லா மார்கெட்டிங் டெக்னிக்கை உங்களின் பிசினஸில் நடைமுறைப்படுத்த முடிவு எடுத்த பிறகு என்னென்ன செய்யவேண்டும்?
- கொரில்லா மார்கெட்டிங்கிற்கு என்று கான்செப்ட்களை யோசிக்காதீங்க. எப்போதும் போல பெரிய அளவிலான விளம்பரத்திற்கு பிளான் பண்ணுங்க.
- அந்த பிளானிங்கிற்கான பட்ஜெட் தொகையை கணக்கிடுங்கள். இப்போது நீங்கள் விளம்பரம் செய்ய ஒதுக்க முடியும் தொகையையையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்களுடைய பிளானிங் தொகையிலிருந்து, உங்கள் பட்ஜெட் தொகைக்கு ஏற்ப செலவுகளைக் குறைத்துக்கொண்டே வந்தால் சூப்பரான கொரில்லா மார்கெட்டிங் மாடலை உங்களாலும் உருவாக்க முடியும்.
பிளான் பண்ணி பண்ணணும் :
கொரில்லா மார்கெட்டிங்க் செய்ய யோசிக்கும் போது உங்களுடைய ஐடியா யூனிக்காக, புதுமையாக இருக்கணும். கிரியேட்டிவா யோசிப்பதை விட லேட்டரலா யோசிக்கப் பழகுங்க. செலவைக் குறைப்பதோடு ஈஸியா சக்சஸ் பண்ணவும் முடியும்.
பணம் இல்லையெனும் சூழல் உருவாகும் போது தான் செலவைக் குறைக்க நிறைய மாற்று வழிகளைத் தேட ஆரம்பிப்போம். அதனால் உங்களுடைய பிசினஸில் பணநெருக்கடி இருப்பது போன்ற சூழலை உருவாக்கி, மார்கெட்டிங்கிறான பட்ஜெட்டை குறைத்து மார்கெட்டிங் டெக்னிக்கை பிளான் பண்ணுங்க.
ஷோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களால் எந்த விஷயம் அதிகம் பரப்பப்படுகிறதோ அதை மார்கெட்டிங் கான்செப்ட்டாக யோசிக்கலாம்.
மார்கெட்டிங் என்றதும் வெளியில் சென்று நடுரோட்டில் நின்று தான் செய்யணும்னு கிடையாது. டிரெண்ட்டில் இருப்பதை பேஸ் செய்து அதை உங்களின் பிசினசுக்கு ஏற்ப மாற்றி மீமீஸ் போடுவதும் கூட ஒரு வகையான கொரில்லா மார்கெட்டிங் டெக்னிக் தான்.
சமீபத்தில் 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் கண்ணம்மா என்ற பெண், வீட்டை விட்டு வெளியே வந்து நடந்து கொண்டே இருப்பது போன்று சீன் வந்தது. அதை சார்ந்து நெட்டிசன்கள் நிறைய் மீம்ஸ்களை பறக்க விட்டார்கள்.
நீங்கள் ஒரு காலணி தயாரிப்பு நிறுவனம் என வைத்துக்கொள்வோம்.
'கண்ணாமாவின் புகைப்படத்தை வைத்து, எவ்வளவு நடந்தாலும் தேயாது என்பது போல் மீம்ஸ் ஒன்று ரெடி பண்ணி உங்கள் சார்பாக ஷோசியல் மீடியாவில் உலவ விட்டால் அது தான் கொரில்லா மார்கெட்டிங்.”
உங்களிடம் இருக்கும் பொருளை எப்படியெல்லாம் மாற்றி வேறு வேறு கோணத்தில் விற்பனை செய்ய இயலும் என்பதை பிளான் செய்யுங்கள்.
நீங்கள் ஏற்கனவே ஒரு மார்கெட்டிங் டெக்னிக்கை கடைப்பிடித்து வந்தால், உடனடியாக அதை நிறுத்தி விட்டு கொரில்லா மார்கெட்டிங் டெக்னிக்கில் இறங்க வேண்டாம்,. சில முறை ட்ரையல் செய்யுங்கள். கஸ்டமர்களின் எண்ணிக்கை உயரும் போது தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாம்.
கொரில்லா மார்கெட்டிங்கில் நீங்கள் அல்லது உங்கள் பிராண்ட் கவரும் எல்லாரும் உங்களின் வாடிக்கையாளர்கள் கிடையாது. பார்வையாளர்கள் தான். அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற தொடர்ந்து விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கொரில்லா மார்கெட்டிங்கை உங்களுடைய பிசினஸிற்கு ஏற்ப எப்படி பிளான் செய்வது, பார்வையாளர்களை எப்படி வாடிக்கையாளர்களாக மாற்றுவது, என்னென்ன டெக்னிக்களை எல்லாம் கையாளலாம் என்பது பற்றி அடுத்தடுத்து வரும் வாரங்களில் பார்ப்போம்.
(கட்டுரையாளர்: சக்திவேல் பன்னீர்செல்வம். இவர் ஒரு மார்கெட்டிங் வல்லுனர் மற்றும் the6.in நிறுவனர். இவரைப் பற்றி மேலும் அறிய, தொடர்பு கொள்ள: Sakthivel Pannerselvam)