அஞ்சேல் 6 | பரிதாபம் தவிர் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 1]
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிரும் அனுபவக் குறிப்புகள்.
(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)
சினிமாவுக்காக நிறைய கதைகள் கேட்பேன். அப்போதெல்லாம் நினைத்ததுண்டு, நம் சொந்தக் கதையிலும் ஒரு படம் எடுத்துச் சொல்வதற்கு உரிய நிறைய விஷயங்கள் இருக்கிறதே என்று...
சரி, என் இளம் வயதில் இருந்தே என் பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். நான் குழந்தையாக இருக்கும்போது அப்பா ராஜேஷ் 40-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்தவர். பின்னாளில் நொடிந்து போகவேண்டிய சூழல்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தி.நகரில் உள்ள பிரேம் நகர் காலனியின் ஹவுசிங்போர்டு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு. அம்மா, அப்பா, மூன்று அண்ணன்களுடன் வளர்ந்தேன். எங்களுடன் அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டியும் இருந்தார். எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் நடுத்தர நிலையில் இருந்தது. அதேவேளையில், ஹவுஸிங்போர்டு பகுதிக்கே உரிய சுவாரசியங்களும் கொண்டாட்டங்களும் உள்ளடக்கிய வாழ்க்கைமுறையில் வளர்ந்தது, இன்றளவும் மகிழ்வுக்குரிய நினைவுகளைத் தரக்கூடியது.
எனக்குச் சின்ன வயதில் ரொம்பவே பசிக்கும். சாப்பிடுவது என்றால் அவ்வளவு பிடித்தமான ஒன்று. காலையில் ஆறு மணிக்கெல்லாம் பசி வயிற்றைக் கிள்ளும். எங்கள் வீட்டுப் பகுதியில் உள்ள ஆயா கடையில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் ருசித்து சாப்பிடுவேன். அதேபோல், அருகிலுள்ள குடிசைப் பகுதியில் தேன்மிட்டாய், உப்பு போட்ட மாங்காய் வாங்கிச் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடித்தமானது. என் அண்ணன்கள் மூன்று பேரையும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். எனக்கு அண்ணன்கள் மீது பாசம் அதிகம். நானும் அடம்பிடித்து அவர்களுடன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன்.
அந்தக் காலக்கட்டத்தில் இரண்டு மிகப் பெரிய சோகத்தை அனுபவிக்க நேர்ந்தது. நான் மிகவும் நேசித்த பாட்டி மறைந்துவிட்டார். நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அப்பாவும் இறந்துவிட்டார். இருவரின் இழப்பும் என் வாழ்க்கையில் முதல் சோகத்தை அனுபவிக்கவைத்தது.
நான் அப்பா செல்லம். ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதற்காகவே மூன்று ஆண்குழந்தைகளைப் பெற்றவர். என் மீது அவருக்கு அளவுகடந்த பாசம். என்னால் அப்பாவின் இழப்பை எளிதில் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்பா இல்லாமல் எங்களை வளர்த்தெடுக்க அம்மா மிகவும் சிரமப்பட்டார். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வேலைக்குப் போகும் அம்மாவின் போராட்டங்கள் சொல்லி மாளாது. சென்னையில் எந்த உறுதுணையும் இல்லாமல் நான்கு குழந்தைகளை வளர்ப்பது சாதாரணமானது அல்ல. எங்களுக்கு அவர் எந்தக் குறையுமே வைத்தது இல்லை.
அப்போது அவர் கடினமான வாழ்க்கையை எதிர்கொண்ட விதம்தான், எனக்கு எந்தச் சவால்களையும் எளிதில் சமாளிக்கக் கூடிய உத்வேகத்தை இன்றுவரைத் தருகிறது.
அப்பா மறைவுக்குப் பிறகு சென்னையிலேயே ஷ்ரைன் வேளாங்கண்ணி பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படித்தேன். தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சலில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படித்தேன். நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் குடும்பத்துக்கு இன்னொரு பேரதிர்ச்சி. என் முதல் அண்ணன் இறந்துவிட்டார். அம்மா ரொம்பவே நிலைகுலைந்து போனார். உளவியல் ரீதியிலும் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.
அம்மாவின் பாரத்தைத் துளியேனும் குறைக்க வேண்டும் என்பதற்காக, நான் ப்ளஸ் 1 படிக்கும்போது அடையாறில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பகுதிநேரம் வேலைபார்த்தேன். அதுதான் என் முதல் வேலை. அதன்பின், டைடல் பார்க்கில் டேடா பேஸ் திரட்டும் வேலை செய்தேன். சனி, ஞாயிறுகளில் இப்படி வெவ்வேறு பகுதிநேர வேலைகள் செய்தேன்.
எனக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பள்ளி நிகழ்ச்சிகளில் என் நடனம் நிச்சயம் இடம்பெறும். நுங்கம்பாக்கத்தில் நடன வகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். பள்ளிக் காலத்தில் நிறைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். படிப்பு, பகுதிநேர வேலைகளுக்கு இடையே நடனத்திலும் கவனம் செலுத்தியதன் பலனாக, ப்ளஸ் டூ-விற்குப் பிறகு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பு தொடங்கியதும் 'மானாட மயிலாட' போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே என்னை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது.
இரண்டு அண்ணன்களும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். நானும் கல்லூரியுடன் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினேன். குடும்பத்தில் ஓரளவு நல்ல சூழல் நிலவத் தொடங்கிவிட்டது என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பேரதிர்ச்சி. என் இரண்டாவது அண்ணன் சாலை விபத்தில் மரணமடைந்தார். எங்களால் மீளமுடியாத துயரம் ஆகிவிட்டது. அதன்பின், மனரீதியாகவும் பணரீதியாகவும் பெரும் கஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களை இதுநாள் வரை எவரிடமும் பகிர்ந்தது இல்லை. ஏனெனில், சோகமானப் பின்னணியைச் சொல்வதன் மூலம் பரிதாபம் ஏற்பட்டு வாய்ப்புகளைப் பெறுவதற்கு முயல்கிறாரோ என்ற எண்ணம் பலருக்கும் தோன்றலாம். சினிமா உலகம் அப்படிப்பட்டதுதான். எனக்கு எந்த வாய்ப்புகளும் பரிதாபத்தால் பெறுவது பிடிக்காது. எனவே, இதுவரை என் சொந்த வாழ்க்கையைப் பற்றி எதையும் பகிர்ந்தது இல்லை. இப்போது என்னால் எந்தத் தயக்கமும் இன்றிப் பகிர்வதற்கு காரணம் இருக்கிறது. ஆம், எவரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இப்போது நான் இல்லை. எனவே, இவற்றைச் சொல்வதற்கு எந்த மனத்தடையும் எனக்கு இல்லை. இன்னொரு காரணம்:
நம் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தகைய பேரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தாலும், மனரீதியான பாதிப்புகளில் இருந்து மீண்டு, நாம் விரும்பிப் பார்க்கும் தொழில் மீது ஈடுபாட்டுடன் இயங்க வேண்டும். அதுதான் நம்மை அடுத்த லெவலுக்குக் கொண்டுச் செல்லும் என்பதை என் அனுபவம் மூலம் சொல்வதற்குத்தான் இவற்றையெல்லாம் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
ம்... அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்த நிலையில், அம்மா - அண்ணன் - நான் என எங்கள் குடும்பம் சுருங்கியது. அப்போதும் எப்போதும் சொந்தக் காலிலேயே நிற்க வேண்டிய நிலை. இயல்பிலேயே யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு வாழக் கூடாது என்ற படிப்பினை கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தோடங்கினோம். எனக்கும் பொறுப்பு கூடியது. நிறைய பகுதிநேர வேலைகள் செய்யத் தொடங்கினேன்.
எனக்குப் பேச்சுத் திறமை ஓரளவு உண்டு என்பதால், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட காம்பியரிங் பணி செய்ய ஆரம்பித்தேன். அப்போது, ஒரு ஷோவுக்கு ரூ.500 கிடைக்கும். இப்படியாக ரூ.1000, 2,000 என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ரூ.5,000 வரை வருவாய் ஈட்டத் தொடங்கினேன். 'மானாட மயிலாட' நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்தேன். அதில், ரூ.10,000-ல் இருந்து ரூ.25,000 வரை வருவாய் கிடைத்தது.
அம்மாவுக்கு இனியும் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்பதால் முழுநேரம் வேலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். நடனத்திலும் நடிப்பிலும் இயல்பிலேயே ஆர்வம் இருந்தது. எனவே, இதையொட்டியே நம் தொழிலைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அப்படி யோசிக்கும்போதுதான், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தால் தினமும் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாய்ப்புத் தேடினேன். வாய்ப்புகளும் கிடைத்தன.
ஒருநாளுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2,000 வரை சம்பளம் கிடைத்தது. காலை ஒன்பது மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை வேலை. சினிமாவில் நடித்துவிட்டு சீரியலுக்கு வருபவர்களுக்கு தினமும் ரூ.15,000-ல் இருந்து ரூ.20,000 வரை சம்பளம் கொடுத்தார்கள். எனவே, நாமும் சில படங்கள் நடித்துவிட்டு சீரியலுக்கு வந்தால் இதுபோல் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற திட்டத்தில்தான் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. அது வேறு உலகம் என்பது அடியெடுத்து வைத்தபின் தெரிந்தது.
சினிமா வாய்ப்புக்காக அலைந்த தருணங்கள், வாய்ப்புக்குப் பிந்தைய புரிதல்கள், நானும் நம் சினிமாவும்...
இன்னும் பகிர்வேன்...
[நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்: தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு அடியெடுத்து வைத்து, 2012-ல் வெளியான 'அட்டகத்தி'யில் அமுதா எனும் கதாபாத்திரம் மூலம் கவனிக்கவைத்தார். 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' மூலம் ஈர்த்தார். 'காக்க முட்டை'யில் இரு சிறுவர்களின் தாயாக நடித்து வியப்பில் ஆழ்த்தினார். நாயகியாக மட்டுமின்றி உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் தயங்காமல் நடித்து முத்திரைப் பதித்து வருபவர். மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'சகாவு' படத்தில் அசத்தினார். இந்தியிலும் 'டாடி' மூலம் தடம் பதித்தார். 16 வயது டீன் முதல் 60 வயது ஆளுமை வரை எந்தக் கதாபாத்திரத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் வல்லமை கொண்டவர். குடிசைவாசியாக இருந்தாலும் சரி, அமெரிக்கா ரிட்டர்னாக இருந்தாலும் சரி, கச்சிதமான நடிப்பாற்றலால் அப்படியே தன்னைப் பொருத்திக்கொள்பவர். இப்போது 'துருவ நட்சத்திரம்', 'வடசென்னை', மணிரத்னத்தின் அடுத்த படம் என முக்கியமான படைப்புகளில் தீவிரம் காட்டி வருபவர்.]
முந்தைய பகுதிகள்:
> அஞ்சேல் 1 | கவ்வியதை விடேல்! -'உறியடி' விஜயகுமார் [பகுதி 1]
> அஞ்சேல் 2 | கலையில் விதி மீறு! - 'உறியடி' விஜயகுமார் [பகுதி 2]
> அஞ்சேல் 3 | - அறம் தரும் தெம்பு - 'உறியடி' விஜயகுமார் [பகுதி 3]
> அஞ்சேல் 4 | காத்திருக்கப் பழகு! - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 1]
> அஞ்சேல் 5 | வரம் ஆகும் சாபம் - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 2]