2021: உலகிலே மிகவும் போற்றப்படும் பிரபலங்கள் யார் தெரியுமா?
YouGov இன் சர்வதேச சர்வேயில், உலகின் மிகவும் போற்றப்படும் முதல் 20 ஆண்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் டாப் 20 பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஜஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
YouGov.com-இன் சர்வதேச சர்வேயில், உலகின் மிகவும் போற்றப்படும் முதல் 20 ஆண்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் டாப் 20 பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஜஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் YouGov நிறுவனம் உலக அளவில் மிகவும் போற்றப்பட்ட 20 ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலக அளவில் பாராட்டப்பட்ட இந்த ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், K-pop இசைக்குழுவான Blackpink இன் லிசா உட்பட 17 ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு 38 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 42,000க்கும் அதிகமானோர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்த நபர்களே இந்த ஆண்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலில் நீடித்துள்ளனர்.
உலகில் மிகவும் போற்றப்படும் 20 ஆண்கள்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் உலகப் பணக்காரரான பரோபகாரர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தையும், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

4வது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த ரொனால்டோ, 2020-2021 சீசன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியதன் மூலமாக தலைப்புச் செய்திகளில் அவரது பெயர் அடிப்பட்டத்தை அடுத்து, 2 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான், கடந்த முறையைப் போலவே இந்த ஆண்டும் 5வது இடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்த தரவரிசைப் பட்டியலில், உலகின் நம்பர் 1 பணக்காரர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வான எலான் மஸ்க், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் முன்னேற்றம் கண்டு முறையே ஆறாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது இடங்களை எட்டியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 4 இடங்களை இழந்து எட்டாவது இடத்தையும், அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த ஆண்டை விட மூன்று இடங்கள் சரிந்து பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
YouGov இன் உலகின் மிகவும் போற்றப்படும் 2021 பட்டியலில் புதியவர்களாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 12வது இடத்திலும், நடிகர் ஆண்டி லா 19வது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 20வது இடத்திலும் உள்ளனர். அதே நேரத்தில் இந்த பட்டியலில் தொழிலதிபர் வாரன் பஃபெட் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இந்த ஆண்டு முதல் மீண்டும் வந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்திய பிரபலங்களான ஷாருக்கான் 14வது இடத்திலும், அமிதாப் பச்சன் 15வது இடத்திலும், விராட் கோலி 19வது இடத்திலும் உள்ளனர். போப் பிரான்சிஸ் 16வது இடத்திலும் உள்ளனர்.
உலகில் மிகவும் போற்றப்படும் 20 பெண்கள்:
YouGov இன் உலகின் மிகவும் போற்றப்படும் பெண்கள் பட்டியலில், மிச்செல் ஒபாமா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறார். 2வது இடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலியும், 3வது இடத்தில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் உள்ளனர். இவர்கள் மூவரும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குப் பிறகு 4வது இடத்தில் ஓப்ரா வின்ஃப்ரே, 5வது இடத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ பட புகழ் ஸ்கார்லெட் ஜோஹன்சன், 6வது இடத்தில் ‘ஹாரி பாட்டர்’ பட நடிகை எம்மா வாட்சன், 7வது இடத்தில் டெய்லர் ஸ்விஃப்ட், 8வது இடத்தில் ஏஞ்சலா மெர்க்கல், 9வது இடத்தில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆர்வலரான மலாலா யூசுப்சாய் மற்றும் 10வது இடத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ள அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் 11வது இடத்தில் உள்ளார். ஹிலாரி கிளிண்டன் 12வது இடத்திலும், பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் 13வது இடத்திலும் உள்ளனர்.
இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி 14வது இடத்திலும், சுவீடனைச் சேர்ந்த உலகின் பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் 15 வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க் 15வது இடத்திலும் உள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப் 16வது இடத்திலும், தாய்லாந்து ரேப் இசைக்குழுவான ‘பிளாக் பிங்க்’ புகழ் லிசா 17வது இடத்திலும் உள்ளனர்.
சீன நடிகையான லியு யிஃபி 18வது இடத்திலும், சீன நடிகை மற்றும் பாடகியான யாங் மி 19வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பெற்றுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 20வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: Yourgov.com