2 ஆண்டுகளில் 7 கோடி வருவாய் ஈட்டிய இயற்கை அழகுச்சாதன ப்ராண்ட் கதை!
100% இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வளர்ச்சி அடைந்தது எப்படி?
குஜராத்தின் காந்திநகரில் வளர்ந்தவர் சூரஜ், இந்தியாவில் மின்வணிகம் கவனம் பெறத் தொடங்கிய சமயம் அது. இவர் பிராண்டட் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக செயல்படும் ஆன்லைன் சந்தைப்பகுதிகளிலும் மின்வணிக தளங்களிலும் பணிபுரிந்து வந்தார். இந்த செயல்முறையில் வணிக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
2014-ம் ஆண்டு இ-காமர்ஸ் பரவலாக அறிமுகமாகி இந்தியாவில் வணிக செயல்பாட்டு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்த்தது. 2026-ம் ஆண்டில் இந்தத் துறை 200 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பு 2017-ம் ஆண்டில் 38.5 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி ஐந்து மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக IBEF தரவுகள் தெரிவிக்கின்றன.
மின்வணிகத்தின் எதிர்காலமே தனியார் லேபிளில்தான் உள்ளது என்பது சூரஜின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த காலகட்டத்தில் துறையில் ஏற்பட்ட சூரஜின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
“சொந்தமாக வணிகத்தையும், பிராண்டையும் உருவாக்க விரும்பினேன். Beardo பிராண்ட் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் உதவிய பின்னர் 2018-ம் ஆண்டு அகமதாபாத்தில் The Beauty Co என்கிற சொந்த தனியார் லேபிளை அறிமுகப்படுத்தினேன்,” என்றார் சூரஜ்.
சார்கோல் பல்பொடி, காபி ஸ்கிரப் ஆகிய தயாரிப்புகளுடன் இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தயாரிப்புகள் அமேசானில் அறிமுகமான உடனேயே நல்ல வரவேற்பைப் பெற்றது.
விரைவிலேயே இந்நிறுவனம் முழுமையான சருமம் மற்றும் கூந்தல் பராபரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. நைகா, ஃப்ளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கெட், பேடிஎம் போன்ற தளங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கியது. இந்தத் தளங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தன.
முதல் ஆண்டில் 2.46 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய இந்நிறுவனம், கடந்த ஆண்டு 7 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக சூரஜ் தெரிவிக்கிறார்.
எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் சூரஜ் தனது வணிக மாதிரி குறித்தும் பிராண்டின் நோக்கம் குறித்தும் விரிவாக விவரித்தார். அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: ஆரம்ப நாட்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
சூரஜ்: அழகு தயாரிப்புகள் சந்தையில் எத்தனையோ பிராண்டுகள் செயல்பட்டாலும் பெண்களுக்கான அழகு தயாரிப்புகள் பிரிவில் அதிகம் ஆராயப்படாத பகுதிகள் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.
ஆனால் முதலீடு செய்வது சவாலாக இருந்தது. என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 65 லட்ச ரூபாய் நிதி திரட்டி வணிகத்தில் முதலீடு செய்தேன். பற்களை வெண்மையாக்கும் கரி பல்பொடி, காபி ஸ்கிரப் ஆகிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினேன்.
இந்தத் தயாரிப்புகள் அமேசானில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பின்னர் நானும் என் குழுவினரும் வளர்ச்சிப்பணிகளைத் திட்டமிட்டோம். இருப்பினும் பல பெண்கள் பாரம்பரியமான, நம்பகத்தன்மைமிக்க அழகுப் பொருட்களையே பயன்படுத்தினார்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யத் தயக்கம் காட்டினார்கள். இதை நாங்கள் கவனித்தோம்.
எனவே சமூக வலைதளங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினோம். நாங்கள் இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை சரியான உள்ளடக்கங்களைக் கொண்டு அணுகினோம். இன்றைய பெண்களின் தேவைகளை புரிந்துகொண்டோம். படிப்படியாக அவற்றைப் பூர்த்திசெய்ய முயற்சிகள் மேற்கொண்டோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் தயாரிப்புகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன?
சூரஜ்: 100 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கவேண்டும் என்பதே The Beauty Co பிராண்டின் நோக்கம். எங்களது தயாரிப்புகள் 99 முதல் 100 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவை. எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப தயாரிப்புகள் கவனமாக வடிவமைக்கப்படுகின்றன.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட எங்கள் பொருட்களை எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் கையடக்க பேக்காக வருவதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.
கோகனட் ஷெல் ஆக்டிவேடட் சார்கோல் பல்பொடி, உலர் காபி ஸ்கிரப், ஆக்டிவேடட் சார்கோல் கிலிட்டர் க்ளோ மாஸ்க், ரோஸ் கோல்ட் ஆயில் போன்ற தயாரிப்புகளை நாங்கள் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.
இந்தத் தயாரிப்புகள் 150 ரூபாய் முதல் 1,450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை எங்களது பிராண்ட் ஒட்டுமொத்த சந்தைக்கும் ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிக மாதிரி என்ன? எத்தகைய தனித்துவமான வணிக உத்திகளைப் பின்பற்றுகிறீர்கள்?
சூரஜ்: ஒரு வகையில் Beauty Co வணிகம் பி2பி, பி2சி வணிகம் இரண்டிலும் ஈடுபட்டுள்ளது எனலாம். கார்ப்பரேட் கிஃப்ட் விற்பனை பி2பி விற்பனையின்கீழ் வரும். அதேபோல் ஃப்ளிப்கார்ட், அமேசான், நைகா போன்ற மின்வணிக நிறுவனங்கள் எங்களிடம் நேரடியாக வாங்கும்போதும் அது பி2பி விற்பனையாகிறது.
இந்த ஆன்லைன் பார்ட்னர்களுடனான செயல்பாடுகளை பி2பி என வகைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் இறுதியாக எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் எங்கள் பிராண்டின்கீழ் விற்பனை செய்வதால் பி2சி வணிகமாகவே மாறிவிடுகிறது.
எங்கள் ஆரம்பகட்ட தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வெற்றியடைந்த பிறகு சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு சார்ந்த பல்வேறு தயாரிப்புகளுடன் விரிவுபடுத்தினோம்.
இயற்கையான தயாரிப்புகளை பயனர்கள் விரும்பி வாங்கியதால் பல்வேறு தயாரிப்புகளை இணைத்துக்கொண்டோம். ரோஸ் கோல்ட் ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர், அர்கன், பாபாப் ஹேர் கேர் வகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தினோம்.
எஸ்எம்பிஸ்டோரி: தயாரிப்புப் பணிகள் எங்கு மேற்கொள்ளப்படுகிறது? உங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்குகிறதா?
சூரஜ்: எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவில், பெரும்பாலும் குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது. எங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. வெளியில் செயல்படும் தயாரிப்பாளர்களைக் கொண்டே தயாரிக்கிறோம். மூலப்பொருட்கள் மற்றும் இறுதித் தயாரிப்பு முறையான தரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: நீங்கள் இலக்காகக் கொண்டு செயல்படும் வாடிக்கையாளர்கள் யார்? அவர்களைச் சென்றடைய எத்தகைய உத்திகளைப் பின்பற்றுகிறீர்கள்?
சூரஜ்: 18 முதல் 45 வயது வரையிலான பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். சமூக ஊடக விளம்பரங்கள் போன்ற டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறோம். தயாரிப்பைப் பயன்படுத்தும் விதம், அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன் ஆகியவற்றை வீடியோக்களாகத் தொகுத்து வழங்குகிறோம்.
நைகா, ஃப்ளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கெட், பேடிஎம் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் Nail Spa என்கிற எங்களது ஆஃப்லைன் கிளையண்ட் மூலமாகவும் வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: UnType பிரச்சாரம் எதைப் பற்றியது?
சூரஜ்: கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் UnType என்கிற பிரச்சாரத்தை மேற்கொண்டோம். பாலின பேதமின்றி அனைவரையும் சென்றடைவதே எங்களது நோக்கம். இது நம் சிந்தனையை வெகுவாகத் தூண்டக்கூடிய ஒரு பிரச்சாரம்.
நம் பாலினம், நிறம், அளவு போன்றவையே நம்மை அடையாளப் படுத்துகிறது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறோம். இதுபோன்ற சிந்தனைகளை உருவாக்குவதில் அழகுப் பொருட்களுக்கான பிராண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற ஒரே மாதிரியான சிந்தனைகளுக்கு எதிராக எங்கள் பிராண்ட் செயல்பட விரும்புகிறது.
நாம் நம்மைப் பற்றி எப்படி உணர்கிறோம் என்பதில்தான் அழகு உள்ளது. இதையே நாங்கள் தெரியப்படுத்த விரும்புகிறோம். மக்கள் இதுபோன்ற கற்பிதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தங்களைப் போற்றிக் கொண்டாடவேண்டும் என்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.
இந்த முயற்சி வெற்றியடைந்தது. வெறும் 12 நாட்களிலேயே 10.3 மில்லியன் பேரைச் சென்றடைந்தோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் நிறுவனம் எத்தகைய கடினமான சூழல்களை சந்தித்துள்ளது?
சூரஜ்: சுயநிதியில் இயங்கும் பிராண்ட் என்பதால் மூலதனம் தொடர்பான சிக்கல்கள் எப்போதும் இருக்கும். ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலும் தனியார் லேபிளை உருவாக்கும்போது வளர்ச்சிக்கு பல்வேறு வளங்கள் அவசியம். எங்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறை தாமதமாகிறது. எங்களிடம் உபரி நிதி இருந்திருந்தால் எங்கள் பிராண்டின் வளர்ச்சி இன்றைய நிலையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் போட்டியாளர்கள் யார்? அவர்களைக் காட்டிலும் நீங்கள் எவ்வாறு தனித்துவமாக சிறந்து விளங்குகிறீர்கள்?
சூரஜ்: எங்களது தயாரிப்புகள் போன்ற அதே தயாரிப்புகளை வழங்குபவர்களும் சரும பராமரிப்பு பிரிவில் செயல்படும் பிராண்டுகளும் எங்களது முக்கியப் போட்டியாளர்கள். எங்கள் குழுவினர் துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் நிறுவனத்திற்குள் செயல்படும் தொழில்நுட்ப மற்றும் மார்கெட்டிங் குழுவின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் சிக்கல்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் புரிந்துகொள்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: கொரோனா வைரஸ் உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை எவ்வாறு பாதித்துள்ளது? இந்தச் சூழலில் உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
சூரஜ்: எங்கள் தயாரிப்புகள் அத்தியாவசியமற்றப் பொருட்கள் பிரிவின்கீழ் பட்டியலப்படாது. எனவே எங்களால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. சரும பராமரிப்பு குறித்த டிஜிட்டல் பிரச்சாரங்கள் தொடர்பாக பணியாற்றி வருகிறோம். வீட்டிலேயே சருமத்தைப் பராமரித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் முறைகள் இதில் இடம்பெற்றிருக்கும். தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளைப் பொறுத்தவரை அவற்றிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாணத் தேவையான நேரம் கிடைத்துள்ளது.
விரைவில் எங்கள் செயல்பாடுகள் மீண்டும் தொடங்க உள்ளது. புதிய பிரச்சாரங்கள் மற்றும் தயாரிப்புகளுடன் அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சென்றடைய விரும்புகிறோம். அடுத்த மூன்றாண்டுகளில் இந்தப் பிரிவில் முன்னணி வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
100 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுடன் ஆன்லைனில் அழகுப் பிரிவில் வளர்ச்சியடைவதே எங்களது நோக்கம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா