வருடத்திற்கு 9 லட்சம் பம்ப்களை தயாரிக்கும் பெண்கள் ஒன்லி கோவை தொழிற்சாலை!
சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட பெண்கள் மட்டுமே அடங்கிய குழு மற்ற நிறுவனங்கள் பின்பற்றத்தக்க மாதிரியாக மாறியுள்ளது. கிர்லோஸ்கர் பம்ப் தயாரிப்பு தொழிற்சாலை பெண்களுக்கு நிதி சார்ந்த நிலைத்தன்மையை வழங்கி மேலும் அதிக பெண்களை தொழிலாளர்களாக இணைத்துக்கொள்கிறது.
கோயமுத்தூருக்கு அருகே உள்ள கணியூர் கிராமத்தில் ‘கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் (Kirloskar Brothers Ltd - KBL) என்கிற பம்ப் தயாரிப்பு தொழிற்சாலையில் பெண்கள் தங்களது எதிர்காலத்தை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் மஹிலா மிஷன் 20 திட்டத்தின்கீழ் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் பெண்களே சிறிய பம்புகளை பயன்படுத்துவதால் அவர்களைக் கொண்டு இந்த பம்புகளைத் தயாரித்தால் இறுதி தயாரிப்பில் மதிப்புகூட்ட முடியும் என்பதே இத்தகைய தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் நோக்கம்.
200-க்கும் அதிகமான பெண்கள் அடங்கிய இந்தத் தொழிற்சாலை பம்புகளுக்கான அசெம்பிளி நேரத்தை 17 விநாடிகளாக குறைத்துள்ளது. அத்துடன் இந்த தொழிற்சாலையின் வெற்றியானது தொழிற்சாலையினுள் கொள்கை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவியது. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்ததால் கேபிஎல் அனைத்து பகுதிகளிலும் பெண்களை அதிகம் பணியிலமர்த்தத் துவங்கியது.
பெண்கள் மட்டுமே அடங்கிய குழு
4.14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 200 பெண்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 84 பேருக்கு தொழிற்சாலையின் முக்கிய செயல்பாடுகளில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திறன் குறைந்த தொழிலாளர்கள் சுமார் 105 பேர் உள்ளனர். கூடுதல் சேவையளிப்பதிலும் திறன் பெறாத தொழிலாளர்களாகவும் 12 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வலுவான குழுவாக செயல்படுகின்றனர்.
புன்னகையை பரிமாறியவாறே நான் இவர்களைக் கடந்து செல்கையில் இவர்கள் கவனம் சிதறாமல் பணியாற்றுவதே உற்பத்தித் திறனுக்கான முக்கியக் காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தொழிற்சாலையைப் பார்வையிட வருபவர்களைக் கண்டு இவர்களது கவனம் சிதறுவதில்லை.
ஒரு ஷிஃப்ட் செயல்பாடுகளுடன் துவங்கப்பட்டு இரண்டு ஷிஃப்டுகளாக இந்த தொழிற்சாலை இயங்குவதில் வியப்பேதும் இல்லை. ஆறு அல்லது ஏழு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளபோதும் பெரும்பாலான பெண்களும் அவர்களது குடும்பங்களும் இரண்டாம் ஷிஃப்ட் பணியை ஏற்றுக்கொண்டனர். உற்பத்தியும் அதிகரித்தது.
இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் 14 முதல் 17 வகையான சிறிய பம்ப்களை தயாரிக்கின்றனர். இவை இந்தியா முழுவதும் உள்நாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. 132 கோடி பங்களிக்கும் தயாரிப்பானது இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறு சதவீதம் பங்களிக்கிறது. இரண்டு ஷிஃப்டுகளில் இயங்கி இந்தப் பெண்கள் ஒராண்டிற்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் பம்ப்கள் தயாரிக்கின்றனர். அதாவது மாதத்திற்கு 70,000 முதல் 80,000 வரையிலான பம்ப்கள் தயாரிக்கப்படுகிறது.
கேபிஎல் நிறுவனத்தின் தரப்பில் இது நாடு முழுவதும் உள்ள மற்ற பணியாளர்களுக்கு உந்துதலளிக்க உதவுறது. அத்துடன் இங்கு பணியாற்றும் பெண்களும் அவர்களது குடும்பங்களும் பலனடைகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குடும்பத்தினர்களால் நேரடியாக பார்க்கமுடிகிறது.
இங்கு பணியாற்றும் பெரும்பாலான பெண்கள் 25-30 வயதைச் சேர்ந்தவர்கள். சில வயது முதிர்ந்த ஆப்பரேட்டர்களும் உள்ளனர். இந்தப் பெண்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அல்லது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு பணிபுரியத் தேவையான திறனோ பயிற்சியோ பெறாதவர்கள்.
கோயமுத்தூரைச் சேர்ந்த சாந்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொழிற்சாலையில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு 21 வயது. இங்கு இணைந்த பலரைப் போல இவரும் ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியில் இணைந்துள்ளார். இத்தனை ஆண்டுகால பயிற்சியும் அனுபவமும் நிரந்தர தொழிலாளியாக மாற உதவியது. லைன் உற்பத்தியில் பணிபுரியத் துவங்கினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்து வந்தவர் இன்று மற்ற சவால்களையும் எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்.
”பெண்கள் என்பதால் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடக்கூடாது என்றும் பெண்களுக்கு தங்களால் சாதிக்கமுடியாது என்கிற எண்ணம் ஏற்படக்கூடாது என்றும் சீனியர்கள் ஊக்கமளித்தனர்,” என்றார்.
ஒரு மகளுக்கு தாயான சாந்தி தனக்குக் கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டு தனது மகளின் லட்சியத்தை நிறைவேற்ற விரும்புகிறார்.
நிதி நிலைத்தன்மை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி
இங்குள்ள பெரும்பாலான பெண்கள் தொழிற்சாலையிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் வசிக்கின்றனர். 10 சதவீத பெண்கள் 20 கி.மீ சுற்றளவில் வசிக்கின்றனர். சிலர் கேரளாவில் இருந்து பயணம் செய்கின்றனர். சுமார் 13 பெண்கள் வேன் மூலம் தினமும் நான்கு மணி நேரம் பயணம் செய்து கேரளாவில் இருந்து பணிக்கு வருகின்றனர்.
ராஜி என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தொழிற்சாலையிலிருந்து பணியை விட்டு விலகினார். அவர் வேறு இடங்களில் சென்று பணிபுரிவதை அவரது கணவர் விரும்பாததால் இதே தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிறுவனத்தில் பணிபுரிவதில் அவருக்கு திருப்தி கிடைப்பதால் அவர் மகிழ்ச்சியாக நான்கு மணி நேரம் பயணம் செய்கிறார்.
”நான் வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொண்டேன். என் கணவருக்கும் கற்றுக்கொடுத்தேன். இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிவதால் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது. மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கு எந்தவித தடைகளும் இல்லை. எந்தவித தயக்கமும் இன்றி தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் நேரடியாகப் பேசலாம். நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இருக்கும் திறனைக் கொண்டு சிறந்த ஊழியராக விளங்கவேண்டும் என்று விரும்புகிறேன். வளர்ச்சியடையவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு உள்ளது,” என்றார்.
ராஜியைக் கண்டு கேரளாவைச் சேர்ந்த பெண்கள் பலர் தொழிற்சாலையில் இணைந்துள்ளனர். “பணியில் இணைந்து தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்க்கும்போது அவர்களும் சிறப்பாகவே உணர்கின்றனர்,” என்றார் ராஜி.
எல்லைகள் விரிவடைதல்
ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மதிய வேளையில் தேநீரும் வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க குழந்தை காப்பகம் உள்ளது. இங்கு குழந்தைகள் படிப்பது, மற்றக் குழந்தைகளுடன் விளையாடுவது, கார்டூன் பார்ப்பது என தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். சானிட்டரி நேப்கின்களை அப்புறப்படுத்த எரியூட்டி வசதியுடன்கூடிய சுத்தமான கழிவறைகள் உள்ளன.
குடும்ப தினம், ஆண்டு தினம் போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாலியல் வன்முறைகள், பொருட்களை வாங்குதல், டெலிவரி, தர பரிசோதனை, செக்யூரிட்டி போன்றவற்றை கையாள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பெண்ளுக்குக் கிடைக்கும் முழுமையான கற்றல் அனுபவமானது குழுவின் வெற்றிக்கும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் பங்களிக்கிறது. இந்தப் பெண்கள் பணி சார்ந்த பயிற்சி, பட்டறைகள், நிதி சுதந்திரம் போன்றவற்றுடன் நிதியை திட்டமிடுவதற்கான ஆலோசனை, சுகாதாரம், குடும்ப ஆரோக்கியம், வழிகாட்டல், சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் போன்றவற்றையும் பெறுகின்றனர்.
புற்றுநோய் விழிப்புணர்வு உள்ளிட்ட மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவை ஏற்படும்போது மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து இந்நிறுவனம் மருத்துவ உதவி வழங்குகிறது. இத்தனை ஆண்டுகளில் ஊழியர்கள் பணியை விட்டு விலகும் விகிதம் பாதியாக குறைந்துள்ளது. ஆரம்பத்தில் 21 சதவீதமாக இருந்து தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது.
பணிக்குச் செல்வதால் தனக்குக் கிடைத்துள்ள அனுபவம் இல்லத்தரசியாக இருந்திருந்தால் நிச்சயம் கிடைத்திருக்காது என்கிறார் ஐந்தாண்டுகளாக இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் வளர்மதி
”நான் பலரை சந்திக்கிறேன். அவர்களுடன் உரையாடுகிறேன். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். மற்றவர்களுடன் விவாதிக்கிறேன். போட்டிகளில் பங்கேற்கிறேன்,” என்றார்.
அவருக்குக் கிடைத்துள்ள நிதிச் சுதந்திரம் காரணமாக அவரால் இருசக்கர வாகனம் வாங்க முடிந்தது. கடன் முறையில் சிறிய வீடு ஒன்றில் முதலீடு செய்துள்ளார். அவரது திருமணச் செலவிற்குக்கூட அவரது சேமிப்பையே பயன்படுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் தலைமையத்தைக் கொண்ட ‘க்வாலிட்டி சர்க்கிள் ஃபோரம் ஆஃப் இண்டியா’வில் இந்தப் பெண்கள் தொடர்ந்து பங்கேற்கின்றனர். இங்கு விவாதங்கள் நடைபெறுகின்றன.
”பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவாக பணிபுரிந்து மிகப்பெரிய நிறுவனத்தில் பங்களிப்பது சிறப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. இத்தகைய நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் வளர்மதி.
இவர் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பயணம் செய்கிறார். போட்டிகளில் பங்கேற்கிறார். இது இவருக்கு கூடுதல் நம்பிக்கையளிக்கிறது. இவரது பணி காரணமாகவே இவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
தலைமைப் பொறுப்பு
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் 200-க்கும் அதிகமான பெண்களுக்கு லஷ்மி யூ தலைமை தாங்குகிறார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குழுவிற்கு பொறுப்பேற்றார். இருபதாண்டுகள் அனுபவம் கொண்டவர். தனிநபராக தொழிற்சாலையை வழிநடத்தி வருகிறார். தொழிற்சாலையில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் இவர் பெண்கள் சிறப்பாக பணிபுரியவும் ஊக்குவிக்கிறார். அர்ப்பணிப்புடன் பணிபுரிவதே குழுவின் வெற்றிக்கு முக்கியம் என்னும் இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வழிநடத்த விரும்புகிறார்.
லஷ்மி காலை 4.30 மணிக்கு தியானத்துடன் தனது நாளைத் துவங்குகிறார். அதன் பிறகு தனது மகனுக்கு சமைக்கிறார். காலை 8 மணிக்கு அன்றைய தினம் செய்து முடிக்க வேண்டிய பணிகளின் பட்டியல் தயாராக இருக்கும். காலை 9 மணிக்கு தொழிற்சாலையில் இருக்கிறார். தினமும் அனைத்து செயல்பாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார். மின் பயன்பாடு, எனர்ஜி மேலாண்மை, கொள்முதல், டெலிவரி, அடுத்த மூன்று நாட்களின் உற்பத்தி திட்டம் போன்றவற்றை கண்காணிக்கிறார்.
”புதிய தயாரிப்புகள் சார்ந்த பணியிலும் கவனம் செலுத்தி பொருட்கள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறேன். அத்துடன் என்னுடைய பங்களிப்பு தேவைப்படும் அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்கிறேன்,” என்றார்.
பெண்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த சற்றே ஊக்கமளித்தால் போதும் என்று தெரிவிக்கிறார் பெண்கள் மட்டுமே அடங்கிய தொழிற்சாலையின் தலைவரான இவர். “நான் கடந்த இருபதாண்டுகளாக இங்கு பணிபுரிகிறேன். இத்தனை ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. பெண்கள் தங்கள் மனதளவில் தீர்மானித்துவிட்டால் எந்த ஒரு பணியிலும் இணைந்துகொள்ளத் தயாராகி விடுகின்றனர். அதில் தொடர்புடைய உழைப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்கள் அச்சப்படக்கூடாது. தங்கள் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்,” என்றார்.
குழு குறித்தும் தொழிற்சாலை குறித்தும் லஷ்மி நன்கறிவார். எதுவும் அவரது கவனத்தில் இருந்து தவறுவதில்லை. அவரது அலுவலகத்தில் உள்ள ஒரு பலகையில் காணப்படும் வரிகள்:
“எதிர்காலம் குறித்து கவலைகொள்ளக்கூடாது. அதை உருவாக்கவேண்டும்”
இதைத்தான் கேபிஎல் தொழிற்சாலை உணர்த்துகிறது. வெவ்வேறு திறன் கொண்ட பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சக்தியளிக்கப்பட்டால் அவர்களது நிலையை மாற்றிக்கொண்டு அவர்களது எதிர்காலத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள்.
தொழிற்சாலையில் பணிபுரியும் இந்தப் பெண்களின் மன உறுதியைக் கண்டு நான் வியந்துபோனேன்.
இவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டும் குழந்தைகளை சிறப்பாகப் பராமரிக்க இவர்களது நிதிச் சுதந்திரம் உதவுவதை நினைத்தும் மகிழ்கின்றனர். அருகில் வசிப்பவர்களுக்கும் இவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவர்கள் முன்மாதிரியாக மாறி வருகின்றனர்.
”அனைவரும் ஒன்றிணைந்தால் சாத்தியமில்லாதவற்றையும் வசப்படுத்தலாம்,” என்கிறார் லஷ்மி.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா