சிறுநகர ஸ்டார்ட்-அப்'களுக்கு ரூ.1 கோடி வரை நிதியுதவி- STPI அறிவிப்பு!
மத்திய அரசின் கீழ் செயல்படும் சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா (STPI), தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்`களுக்கு ஆரம்பகட்ட நிதியாக ரூ.25 லட்சமும், பிறகு இன்னொரு ரூ.25 லட்சத்தையும் முதலீடாக வழங்குகிறது.
சிறு நகர்களில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை நிதியுதவி வழங்கத் திட்டமிட்டிருப்பதாக ‘இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள்’ அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா' என்பது சுருக்கமாக எஸ்.டி.பி.ஐ. (STPI) என்று அழைக்கப்படுகிறது, இதில் ஆரம்பகட்ட நிதியாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். பிறகு இதனைத் தொடர்ந்து இன்னொரு ரூ.25 லட்சமும் வழங்கப்படும். பிறகு தொடர் செயல்பாட்டின் அடிப்படையில் மேலும் ரூ,50 லட்சம் வழங்கப்படும்.
எஸ்.டி.பி.ஐ தலைமை இயக்குநர் அரவிந்த் குமார் இது தொடர்பாகக் கூறும்போது,
“நாங்கள் ரூ.1 கோடி வரை முதலீட்டை உறுதிப் படுத்துவோம், அங்கு எஸ்டிபிஐ ஆரம்ப நிதியாக ரூ. 25 லட்சத்தையும், அதன் பின் தொடர்ந்து ரூ.25 லட்சம் வரை நிதியையும் வழங்கும். நிதியுதவி தவிர, ஸ்டார்ட்அப்கள் வழிகாட்டுதல் உட்பட பல ஆதரவுகளை வழங்குவோம்.
‘லீப் அஹெட் 1.0’-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்`களுக்கு ஏற்கனவே ரூ.78 கோடிக்கான உறுதிமொழி வழங்கப்பெற்றுள்ளன, மேலும், 17 ஸ்டார்ட்அப்கள் ரூ.38 கோடி வரை முதலீட்டைப் பெற்றுள்ளன. TiE சிலிக்கான் வேலிக்கு சென்ற 25 ஸ்டார்ட்அப்களில் மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளன,” என்றார்.
இந்த டெக் பார்க்ஸ், மத்திய அரசின் கீழ் 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தன்னாட்சி அமைப்பு. மென்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ்-2024ல் ஸ்மார்ட் ஃபார்ம் கிராண்ட் சேலஞ்ச் திட்டத்தின் கீழ் கரும்பு அறுவடையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க தீர்வு வழங்கிய கர்நாடகாவின் சத்யுக்த் அனலிடிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் தயாரிப்பு மேம்பாட்டு மானியமாக ரூ.50 லட்சத்தை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கியது.