வீதிகளில் சுற்றித் திரியும் 300க்கும் மேற்பட்ட மனநலம் பாதித்தவர்களை ஆதரிக்கும் விழுப்புரம் தம்பதியினர்!
விழுப்புரம் புலியூர் கிராமத்தில், கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது ’ஆனந்த ஜோதி’ ஆசிரமம், சாலையோரங்களில் சுற்றி திரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அவர்களை கண்டறிந்து ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வந்து அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து, உடலை சுத்தம் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர்.
நாம் தினந்தோறும் வீதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் பலரை பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. வேகமான வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அவர்களை பார்த்து பரிதாபப்பட்டுவிட்டு செல்ல மட்டுமே நேரம் இருக்கிறது.
ஆனால், வெறும் பச்சாதாபம் மட்டும் இவர்களுக்கு உதவாது என்று அறிந்த விழுப்புரம்
தம்பதிகள், இப்படி சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடித் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உதவிக்கரம் நீட்டும் தம்பதிகள்
விழுப்புரம் அருகே செஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குண்டல புலியூர் கிராமத்தில் ’ஆனந்த ஜோதி’ ஆசிரமம். கடந்த 2005 ம்ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ஆசிரமம் சாலையோரங்களில் சுற்றி திரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அவர்களை கண்டறிந்து ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வந்து அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து, உடலை சுத்தம் செய்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர்.
பின்னர், சரியான மனநிலையில் இருக்கின்ற போது அவர்களுடைய முகவரியை தெரிந்து அவர்களின் உறவினர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர் ஜுபின் மரியா தம்பதியினர்.
2005ம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நபர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் 2000 நபர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்த தம்பதியினர்.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து விடுகின்ற மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 1500 நபர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அப்நாகர் (நம்ம வீடு) என்கிற தன்னார்வ அமைப்பில் சென்னை தமிழகம் உள்ளிட்ட காவல்துறையினர் முன்னிலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது பற்றி மரியா சொல்வதை கேட்போம்...
எங்களுக்கு பூர்வீகம் கேரளா மாநிலம், எர்ணாகுளம் பக்கத்துல 'மூவாட்டுபுழா' நானும் என் கணவரும் புதுச்சேரியில் ஒரு ஹோம்ல வேலை செஞ்சிட்டு இருந்தோம். அப்பதான் எங்களுக்குள்ள ஏன் நாமளே தனியா இதுபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு வந்து சிகிச்சை அளித்து திருத்தி அவர்களை இயல்பு நிலைக்கு வரவழைத்து அவங்க வீட்டுக்கு அனுப்பக் கூடாது? என்று தோன்றியது.
அந்த வகையில தான், இந்த ’அன்பு ஜோதி’ ஆசிரமத்தை துவங்கினோம். இங்கே இருக்கிறவங்க ஒவ்வொரு நாளைக்கு ஒரு மாதிரி இருப்பாங்க வந்த கொஞ்ச நாள்ல சரியாயிடுவாங்க சரியாயிடுவாங்கன்னா இங்க இருக்கிற மத்தவங்க போல நிலைமைக்கு வந்துருவாங்க.
”சிலருக்கு ஒரு வாரம் ரெண்டு வாரத்துல சுயநினைவு திரும்பிடும் சிலருக்கு பல வருஷம் ஆனாலும் சுயநலவு திரும்பாது. ஆனால் நம்ம கூட பழகி பழகி அவங்க ரோடு ஓரத்துல செய்கிற எல்லா செயலையும் மறந்து விடுவார்கள். எல்லாரும் போல சாப்பிடுவாங்க, எல்லாரும் போல தூங்குவாங்க, எல்லாரும் போல குளிப்பாங்க, எல்லாரும் போல டிரஸ் பண்ணுவாங்க அப்படியா தங்களை மாத்திக்குவாங்க. அதுவே எங்களுக்கு சந்தோஷத்தை தரும்.”
எங்களுக்கு ராத்திரி பகல் அப்படின்னு எதுவும் கிடையாது எந்த நேரத்தில் எங்கிருந்து போன் வந்தாலும் உடனே ஆம்புலன்ஸ் எடுத்துக்கிட்டு அங்க போயிடுவோம் பெரும்பாலும் அவங்க யாரும் கூப்பிட்ட உடனே உட்கார மாட்டாங்க கொஞ்சம் கொஞ்சம் அடங்காம தான் இருப்பாங்க அவங்கள பொறுமையாக பக்குவமா அடக்கிக் கொண்டு வந்து இல்லத்தில் வைத்து விடுவோம்.
அப்புறம் நாள் ஆக ஆக அவங்க சகஜ நிலைக்கு திரும்புவார்கள். இங்க 15 வருஷத்துக்கு முன்னாடி செஞ்சி என்கிற ஊருக்கு பக்கத்துல சுடுகாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஒருத்தர கூட்டிட்டு வந்தோம் அவர் பேரு ’வேலு’ என்ன ஊரு எதுன்னு சொல்லத் தெரியல, அவரைத் தேடி எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் யாரும் புகார் கொடுக்கல.
எங்களுக்கும் அவர் தெரியல அதனால நாங்களும் அவரை எங்களுடைய ஆசிரமத்துல வச்சிருந்தோம்.
“14 வருஷம் கழிச்சு ஒரு நாள் திடீர்னு அவருக்கு சுயநினைவு திரும்பிச்சி அப்புறம் தான் அவருடைய ஊரு செஞ்சி அப்படின்னு சொன்னாரு. பிறகு நினைவு திரும்பி எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா சொல்ல ஆரம்பிச்சுட்டார். சரின்னு அவரை கூப்பிட்டு அவங்க வீட்டுக்கு போனோம். போனா குடும்பத்தில் ஒரே ஆச்சரியம் எல்லாரும் கட்டிப்பிடித்து அழுக ஆரம்பிச்சிட்டாங்க. சரின்னு வேலு அவங்க குடும்பத்துடன் ஒப்படச்சிட்டு நாங்க புறப்பட்டோம். கொஞ்ச நேரத்துல வேலு எங்க கூடவே வந்துட்டாரு. கேட்டா உங்களுடைய வந்துடறேன் எனக்கு இங்கு இருக்க பிடிக்கல அப்படின்னு சொல்லிட்டாரு.”
சொந்த வீடு எதுன்னு தெரிஞ்சும் கூட போகாம இருக்கிற அளவுக்கு எங்கள் ஆசிரமத்துல பணியாளர்கள் பழகுவாங்க, என்றார்.
இது மட்டும் இல்லாம, ஜூபின் மரியா இரண்டு பேரும் சேர்ந்து இந்த பகுதியில் யாராவது ஆதரவற்றவர்கள் இறந்துட்டாங்கனா அவங்கள அடக்கம் பண்ற வேலைகளையும் செய்றாங்க. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த சுமார் 331 பேர் ஆதரவற்ற பிணங்கள், போலீஸ் எவ்வளவு தேடியும் அங்கு உறவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களுக்கு யாரும் இல்லை அப்படிங்கிற நிலைமையில் அவர்கள் உடலை இந்த தம்பதியினர் தாங்களே அடக்கம் செய்தார்கள். அவர்கள் இறந்து போனவங்க எந்த மதம் ஏதுன்னு தெரியாது இருந்தாலும் எல்லாரையும் இந்து மத சடங்கோட தான் அடக்கம் செஞ்சிருக்காங்க.
சாதாரணமா நம்ம வீட்டிலுள்ள உறவுக்காரங்க யாராவது இறந்து போயிட்டாங்கனா இறுதி சடங்கு செய்வதற்குள் ஒரு பெரிய குழப்பமே நடந்து முடிஞ்சிடும். ஆனா முன்னூருக்கும் மேற்பட்டவங்கள எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த தம்பதியர் உடலை அடக்கம் செஞ்சு இருக்காங்கன்னா ரொம்பவும் வியக்கத்தக்க தகவல்தான் இருக்கு.
இன்னமும் கூட எவ்வளவு பேர் மனநலம் பாதிக்கப்பட்டு வந்தாலும் கூட அவங்கள பாதுகாக்கவும், சிகிச்சளிக்கவும் நாங்க தயாரா இருக்கோம் அப்படின்னு தான் சொல்றாங்க அன்பு ஜோதி ஆசிரமத்தைச் சேர்ந்த ஜூபின் மரியா.
தினமும் ரோட்ல யாராவது சுத்திக்கிட்டு இருந்தா உடனே அன்புஜோதி ஆசிரமத்துக்கு போன் பண்ணுவாங்க உடனே ஆம்புலன்ஸ் எடுத்துட்டு போயி அவங்களக் கூட்டிக்கிட்டு வந்து சிகிச்சை கொடுத்துகிட்டு தான் இருக்காங்க இந்த தம்பதிகள்.
இன்னொரு முறை நாம மனிதனா பிறக்கிறமோ இல்லையோ இருக்கிற காலத்துல யாருக்காவது உதவி செஞ்சுக்கிட்டு இருக்கணும் அப்படிங்கறது தான் இவங்களுடைய கொள்கையா இருந்துகிட்டு வருது.
வேலு மாதிரி இன்னும் நிறைய பேர் வீட்டுக்கு போகாம இவங்களுடனே இருந்துகிட்டு வராங்க. அவங்ககிட்ட கேட்டா வீட்டை விட இங்கே எங்களுக்கு நிம்மதி இருக்குன்னு சொல்றாங்க.
கட்டுரை: ஜோதி நரசிம்மன்
உயிரிழந்தவர்ளை மரியாதையுடன் தகனம் செய்ய ‘விறகு வங்கி’ துவங்கிய சமூக தொழில் முனைவர்!
ஜோதி நரசிம்மன்