தனக்கு கிடைக்காத கல்வியை கிராமக் குழந்தைகளுக்கு தர விளைநிலத்தில் பள்ளி கட்டிய விவசாயி!
தன் கிராமத்தில் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்த ராம்பூர் மாவட்டத்தில் தனி ஆளாக ஒரு பள்ளியை அமைத்துள்ளார். இன்று 1,200-க்கும் அதிகமான மாணவர்கள் இதன் மூலம் பலனடைகின்றனர்.
“ஒரு நல்ல ஆசிரியர் மெழுகுவர்த்தியைப் போன்றவர். தன்னைக் கரைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஒளியைப் பரப்புகிறார்” – இது துருக்கிய அரசியல் தலைவர் மற்றும் எழுத்தாளரான முஸ்தபா கெமால் அத்தாதுர்க் கூற்று.
இது முற்றிலும் உண்மையே. ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் நமக்கு கல்வியறிவு வழங்குவதுடன் நமது முழுமையான திறனை நாம் உணர உதவுகின்றனர். அவ்வாறு ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார் இந்த ஆசிரியர்.
உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கார்டியா கிராமத்தில் பிறந்தவர் 70 வயதான கேசவ் சரண். 15 வயதிலேயே விவசாயத்தில் ஈடுபட்டார். நிலத்தை உழுதல், விதைகள் நடுதல், நீர்பாசனம், பயிர்களை பாதுகாத்தல், அறுவடை என அனைத்து பணிகளிலும் ஈடுபட்டார்.
கிராமத்திற்கு அருகில் இருக்கும் பள்ளியே 25 கி.மீ தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதிகள் போதிய அளவு இல்லாத காரணத்தால் அன்றாடம் பள்ளிக்குச் சென்று வர இயலவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் இவரால் படிக்கமுடியவில்லை.
இருப்பினும் கல்வியின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் கேசவ் அறிந்திருந்தார். எனவே இவர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அறிவியல், கணக்கு, இலக்கியம் ஆகிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.
விரைவிலேயே இரண்டு அறைகள் கொண்ட இவரது சிறிய வீட்டில் சுமார் 200 மாணவர்கள் ஒன்று கூடி கேசவ் கற்றுக்கொடுப்பதைக் கவனிக்கத் தொடங்கினர். 1989-ம் ஆண்டு இவர் தனது விளைநிலத்தில் பள்ளி ஒன்றை அமைக்கத் தீர்மானித்தார். கார்டியாவில் உள்ள இந்தப் பள்ளியில் இன்று 1,200-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
”நான் சந்தித்த அதே பிரச்சனைகளை என் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யாரும் சந்திக்கக்கூடாது என எண்ணினேன். கல்வி அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். என்னால் ஓரளவிற்கு இதில் ஈடுபட முடிவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்று யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் கேசவ் சரண் குறிப்பிட்டார்.
கேசவ் சரணின் சுவாரஸ்யமான பயணம்
ராம்பூர் மாவட்டத்தில் 53.3 சதவீதம் மட்டுமே கல்வியறிவு விகிதம் மட்டுமே இருப்பதாக Census 2011 குறிப்பிடுகிறது. குழந்தைகளால் நீண்ட தூரம் பயணம் செய்ய இயலாத காரணத்தினாலேயே பலர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தனர்.
இந்த போக்கு பல ஆண்டுகளாகத் தொடர்வதை தெரிந்துகொண்ட கேசவ் இதற்கு தீர்வுகாண முற்பட்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குழந்தைகளை கற்றுக்கொள்ள தன் வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
”இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. நான் காலை நேரங்களில் உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வளர்த்தேன். மாலை நேரங்களில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். குழந்தைகளின் ஆர்வம் நிறைந்த முகத்தைப் பார்க்கும்போது கடின உழைப்பிறகு பலன் கிடைத்த உணர்வு ஏற்படும்,” என்றார் கேசவ்.
மாணவர்கள் வருகை அதிகரித்ததால் 1989-ம் ஆண்டு ஆரம்பப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். இதற்குத் தேவையான ஒப்புதல்களை உள்ளூர் பஞ்சாயத்தில் இருந்தும் அரசு அமைப்புகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டார். 2007-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு வரையிலும் பின்னர் 2013-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கேசவ் பள்ளி என்றிருந்த இந்த கல்வி நிறுவனத்தின் பெயர் பின்னர் ’கேசவ் இண்டர் காலேஜ்’ என மாற்றப்பட்டது.
”பள்ளியை என்னுடைய விளைநிலத்தில் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. புதிதாக நிலம் வாங்கத் தேவையான பணத்தை என்னால் சம்பாதிக்க முடியவில்லை. எனக்கு வருவாய் ஈட்டித்தர முக்கிய ஆதாரமாக இருந்த விளைநிலத்தை நான் இழக்கத் தயாராக இருந்தேன். இது முட்டாள்தனமான செயல் என பலர் கருதினர். ஆனால் நான் என்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்து அந்தப் பணத்தைக் கொண்டு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டேன். ஒரு சிறு பகுதியை எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் வைத்துக்கொண்டேன். மீதமிருந்த நிலத்தில் பள்ளியைக் கட்டினேன்,” என்றார் கேசவ்.
கேசவிற்குக் கற்றுக்கொடுப்பதில் இருந்த ஆர்வமும் கார்டியாவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்குவதில் இருந்த ஆர்வமுமே வசதியான சூழலைத் துறந்து இத்தகைய முயற்சியை மேற்கொள்ள உந்துதலளித்தது. அவரது கடின உழைப்பின் பலன் இன்று கண்ணெதிரே தெரிகிறது.
”இந்தப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். சிலர் பொறியியல் முடித்துள்ளனர். வேறு சிலர் மருத்துவம் படிக்கின்றனர். ஒரு சிலர் பெருநகரங்களில் நல்ல வேலையில் உள்ளனர். இதுவே எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா