சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைந்தோர்க்கு அரசுப் பணி: யுபிஎஸ்சி பரிந்துரை
குடிமைப்பணி தேர்வெழுதி நேர்க்காணல் வரை வந்து தோல்வியுற்றவர்களை மற்ற அரசுப் பணிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வுகளில் பங்கேற்க முடியும். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் இந்திய ஆட்சிப்பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி மற்றும் மத்திய அரசின் இதர பணிகளுக்கு தர வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்தத் தேர்வுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கடுமையாக படித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்குமே ஒரே வருடத்தில் அவர்களது கனவு நிறைவேறி விடுவதில்லை. கடும் போட்டிக்கு இடையே சிலருக்கு மட்டுமே அவர்கள் விரும்பிய துறையில் பணி புரியும் வாய்ப்பு அமைகிறது. இதனால் இறுதிச் சுற்று வரை வந்தவர்கள்கூட வேறு வழியில்லாமல் வேறு பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
ஆனால், இனி வரும் ஆண்டுகளில் இந்த நிலைமையை மாற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் அர்விந்த் சக்சேனா.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் 23வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோது இது தொடர்பான யோசனையை மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்த மாநாட்டில் அவர்,
“ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேர் குடிமைப்பணி தேர்விற்கு தேர்வெழுதுகின்றனர். ஆனால் அதில் பாதி பேர் மட்டும் முதற்கட்ட தேர்வில் கலந்து கொள்கின்றனர். தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வெகுவாக குறைந்து, இறுதியில் 600 பேர் மட்டுமே பணிக்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர்,” எனப் பேசியுள்ளார்.
மேலும், இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தையும், சங்கடங்களையும் போக்கும் வகையில் குடிமைப்பணி தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று நேர்காணல் வரை சென்று திரும்பியவர்களை மற்ற அரசு பணிகளில் நியமிக்கலாம் என்ற ஆலோசனையை மத்திய அரசுக்கு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது தேர்வு செய்யும் முறைகளை மாற்றிக் கொள்ள உத்தேசித்துள்ளதாக கூறிய அர்விந்த் சக்சேனா, போட்டியாளர்களின் வசதிக்கு ஏற்ப சில விதிகளை தளர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
2018ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வுக்கு மொத்தமுள்ள 780 இடங்களுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 10500 பேர் மட்டுமே தேர்வாகினர். இத்தனை பேர் போட்டியிட்டது 780 பணியிடங்களுக்காகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.