துப்புரவு பணியாளர் டூ எஸ்பி வங்கி அதிகாரி; பிரதிக்ஷா சாதித்தது எப்படி?
கணவனை இழந்ததால் குடும்பத்தை நடத்துவதற்காகவும், மகனை படிக்க வைப்பதற்காகவும் துப்புரவு தொழிலாளியாக பணியைத் தொடங்கிய பிரதிக்ஷா டோண்ட்வால்கர் இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உயர் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
கணவனை இழந்ததால் குடும்பத்தை நடத்துவதற்காகவும், மகனை படிக்க வைப்பதற்காகவும் துப்புரவுத் தொழிலாளியாக பணியைத் தொடங்கிய பிரதிக்ஷா டோண்ட்வால்கர் இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உயர் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஆணாதிக்கம் மிக்க துறைகளில் வங்கியும் ஒன்று, இங்கு பியூன் தொடங்கி வங்கி மேலாளர் வரை ஆண் பணியாளர்களையே அதிகமாக காண முடியும். அதுவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில், பெண் ஒருவர் அடிமட்டத்தில் இருந்து உச்சம் தொடுவது என்பது சாதாரண காரியம் அல்ல.
ஆனால், தடைகளை தகர்த்து எறிந்து சாதித்துக்காட்டிய, பிரதிக்ஷா டோண்ட்வால்கர் என்பவர் பற்றிய உத்வேகம் தரக்கூடிய கதையை பார்க்கலாம்...
யார் இந்த பிரதிக்ஷா?
பிரதிக்ஷா டோண்ட்வால்கர் 1964ம் ஆண்டு புனேவில் பிறந்தார். குடும்பத்தை சூழ்ந்த வறுமை காரணமாக, 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பிரதிக்ஷாவின் படிப்பு பறிபோனது. ஆண்டு இறுதி பொதுத்தேர்வை கூட எழுதவிடாமல் 16 வயதிலேயே அவருக்கும், மும்பையைச் சேர்ந்த சதாசிவ் காடு என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். சதாசிவ் எஸ்பிஐ-யில் புத்தக பைண்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, அவளுடைய முதல் மகன் விநாயக் பிறந்தார். முதல் வாரிசாக ஆண் மகனாக பிறந்ததால், சொந்தக் கிராமத்தில் உள்ள குல தெய்வத்தை வழிபாட செல்ல வேண்டுமென குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
ஆனால், அந்த பயணம் தான் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போடப் போகிறது என பிரதிக்ஷா அப்போது அறிந்திருக்கவில்லை.
சொந்த ஊரில் நடத்த விபத்து ஒன்றில் சிக்கி பிரதிக்ஷாவின் கணவர் சதாசிவ் உயிரிழந்தார். 20 வயதிலேயே இளம் விதவையான பிரதிக்ஷா, மகனையும் தன்னையும் எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் உடைத்து போனார்.
"என் கணவருக்கு சேர வேண்டி நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அவர் புக் பைண்ட் செய்து வந்த எஸ்பிஐ கிளைக்குச் செல்ல வேண்டியிருந்தது. குடும்பத்தை நடத்த எனக்கு எப்படியும் ஒருவேளை தேவை. எனவே கல்வி தகுதி இல்லை என்றாலும், வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானம் தரக்கூடிய ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என வங்கியில் இருந்தவர்களிடம் கேட்டேன்.”
அப்போது வங்கியில் பகுதி நேர துப்புரவு வேலை காலியாக இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதிக்ஷா உடனே பணியை தொடங்கினார்.
தினமும் காலையில் 2 மணி நேரத்திற்கு வங்கிக் கிளை முழுவதையும் கூட்டி, பெருக்குவது, துடைப்பது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது, பாத்திரங்களை கழுவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார். இதற்காக அவருக்கு மாதம் 60 முதல் 65 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் வீட்டு வாடகை மற்றும் மகனின் கல்வியை சமாளிப்பதற்காக மும்பையில் கிடைத்த சிறு, சிறு வேலைகளை பார்த்து சம்பாதித்தார்.
துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்த பிரதிக்ஷாவின் மனது, வேறு எதையாவது தேட வேண்டும் என உத்வேகம் அளித்தது. திடீரென ஒருநாள் பிரதிக்ஷா தன்னைச் சுற்றி இருந்த ஊழியர்களைப் பார்த்தார், தான் வெறும் துப்புரவு வேலை செய்வதற்காக மட்டுமே வந்தவள் அல்ல, இதே போல் நானும் கம்பீரமாக வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, மீண்டும் படிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை மீண்டும் எழுத விரும்பிய பிரதிக்ஷாவிற்கு சில வங்கி ஊழியர்கள் உதவ முன்வந்தனர். 10ம் வகுப்பு மறுதேர்வுக்கான படிவத்தை நிரம்பிக் கொடுப்பதில் தொடங்கி, படிக்க ஒரு மாத விடுப்பும் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது உதவியுடன் புத்தகங்கள் போன்ற படிக்கத் தேவையான பொருட்களை பெற முடிந்தது. சுற்றி இருந்தவர்கள் கொடுத்த உற்சாகம், பிரதிக்ஷாவை 10ஆம் வகுப்புத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைத்தது.
வங்கி தேர்வுக்கு பயிற்சி:
10வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, பிரதிக்ஷா தனது பழைய வேலைக்குத் திரும்ப முயற்சிக்கவில்லை. தனது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவும், மகனுக்கு நல்ல கல்வி கொடுக்கப்பதற்காகவும் அடுத்தடுத்து படிக்க தீர்மானித்தார். வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி முடிவெடுத்த அவர், அடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாரானார்.
“எனது பொருளாதார நிலை மோசமாக இருந்தது. என்னால் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை. எனது வீட்டைப் பாதுகாப்பதும், என் மகனைக் கவனிப்பதுமே ஒரு பெரிய வேலையாக இருந்தது. ஆனால் நான் இதிலிருந்து வெளியே வர முடிவெடுத்தேன்.”
தனது சிறு சேமிப்பில் இருந்த குறைவான பணத்தைக் கொண்டு மும்பையின் விக்ரோலியில் உள்ள இரவுப் பள்ளியில் சேர முடிவெடுத்தார். சக ஊழியர்களின் உதவியோடு படித்து, 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1995ல் இரவுக் கல்லூரியில் படித்து உளவியல் துறையில் பட்டம் பெற்றார். இதன் மூலமாக வங்கியில் அவருக்கு எழுத்தராக பதவி கிடைத்தது.
"ஒற்றைத் தாயாக எனக்கு இருந்த, எல்லா முரண்பாடுகளையும் முறியடித்து, எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக படிப்பது. சமூக அழுத்தம் அச்சுறுத்தியது. எனது மகனுக்கும் எனது வேலைக்கும் இடையே சிக்கிக் கொண்டு திணறினேன். ஆனால் அவன் எதிர்காலத்திற்காக சில துணிச்சலான முடிவுகளை எடுத்தேன்.”
மறுமணம்:
1993ம் ஆண்டு பிரதிக்ஷா, பிரமோத் டோண்ட்வால்கர் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். வங்கி மேலாளரான பிரமோத், பிரதிக்ஷாவை அடுத்தடுத்து வங்கித் தேர்வுகள் எழுத ஊக்குவித்தார். இரண்டாவது திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகள் இருந்த போதும், அவரது கணவர் பிரதிக்ஷா படிப்படஹி ஊக்குவித்தார்.
“குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பெண்ணுக்கு இதெல்லாம் சாத்தியமாகாது. அதிர்ஷ்டவசமாக எனக்கு அவர்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது. கணவர் பிரமோத் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, வங்கித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் எனக்காக தேநீர் தயாரித்து கொடுப்பார். மூத்த மகன் விநாயக்கும் என்னை தொடர்ந்து படிக்க ஊக்குவித்தார்.”
2004ம் ஆண்டு பிரதிக்ஷா டிரெயினிங் ஆபீசராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஜூன் மாதம் எஸ்பிஐ வங்கியின் உதவி பொது மேலாளராக பதவி உயர்வு பெறும் வரையிலும் பல்வேறு பொறுப்புகளை சுமந்துள்ளார்.
பிரதிக்ஷா வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன, இந்த சமயத்தில் கூட 2021ம் ஆண்டு இயற்கை மருத்துவம் குறித்த படிப்பை முடித்துள்ளார். வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இயற்கை மருத்துவம் மூலமாக மக்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார்.
SBI உடனான அவரது 37 வருட கால பயணத்தில் விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் மனவலிமை ஆகியவை காட்டி பாதை இன்று வெற்றிப்பாதையாக அமைந்துள்ளது.
தகவல் உதவி - மணி கன்ட்ரோல் | தமிழில் - கனிமொழி