சிறிய கம்ப்யூட்டர் ஸ்டோரில் தொடங்கி இன்று ரூ.165 கோடி மதிப்பு நிறுவனம் உருவாக்கிய இளைஞர்!
சில்லறை வர்த்தகத்தில் தொடங்கி முன்னணி நிறுவனங்களுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கிய ஸ்ரீதர் திருநகரா லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரிவிலும் மின்சார வாகனங்கள் பிரிவிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.
ஸ்ரீதர் திருநகரா 2009ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆக்சசரீஸ் போன்றவற்றை விற்பனை செய்து வந்தார். பெங்களூருவில் 100 சதுர அடியில்
என்கிற ஸ்டோர் திறந்து விற்பனை செய்துகொண்டிருந்தார்.தொழில்முனைவு கனவு காரணமாக வேலையை விட்டு விலகி சிறிய வணிகம் ஒன்றைத் தொடங்கிய ஸ்ரீதர், வருங்காலத்தில் 'மேக் இன் இந்தியா’ முயற்சியில் மிகப்பெரிய அளவில் தனது பங்களிப்பு இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இன்று Arctic Fox என்கிற லைஃப்ஸ்டைல் பிராண்ட் மூலம் Outshiny பி2பி, பி2சி வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறது. கீபோர்ட், கம்ப்யூட்டர் மவுஸ், கேமிங் மவுஸ், டஃபிள்ஸ், ட்ராலி என வெவ்வேறு பிரிவுகளில் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
இந்த உள்நாட்டு நிறுவனம் HP, Lenovo, Acer உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு லேப்டாப் பேக் வழங்கும் OEM/ODM நிறுவனமாக செயல்படுகிறது.
சிறியளவில் தொடங்கப்பட்ட இந்த வணிக முயற்சி 165 கோடி ரூபாய் வருவாய் கொண்ட நிறுவனமாக உருவெடுத்ததன் பின்னணியைப் பார்ப்போம்.
கம்ப்யூட்டர் ஸ்டோர் முதல் லைஃப்ஸ்டைல் பிராண்ட் வரை..
2010-ம் ஆண்டு ஸ்ரீதர் Outshiny என்கிற கம்ப்யூட்டர் ஸ்டோர் நடத்தி வந்தார். Acer போன்ற பிராண்டுகளுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இந்த கற்றல் அனுபவமே சொந்தமாக வணிகம் தொடங்க ஊக்கமளித்துள்ளது.
வணிகத்தைத் தொடங்குவது அத்தனை கடினமான விஷயமாக இருக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு விற்பனையும் செய்யப்பட்டது. ஆனால், லேப்டாப் பேக் தரமாக இல்லை என வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
“என் ஸ்டோரில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் லேப்டாப் பேக் டிசைனும் தரமும் சரியில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இதுபற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். அந்த நாட்களில் பெரும்பாலான ஆக்சசரீஸ் சீனாவிலிருந்து வந்தவை. அந்த விலைக்கு நிகராக விற்பனை செய்வது கடினம். முழுக்க உள்நாட்டிலேயே பைகள் தயாரிக்கும் நிறுவனம் அதிகம் செயல்படவில்லை. இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன்,” என்கிறார் ஸ்ரீதர்.
ஓராண்டிற்குப் பிறகு லேப்டாப் பேக் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கினார். அதேசமயம் ஸ்டோரும் இயங்கி வந்தது. 2012ம் ஆண்டு வரை இப்படியே தொடர்ந்தது. லேப்டாப் பைகள் நல்ல வரவேற்பு பெறவே ஸ்டோர் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு முழுவீச்சில் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
Acer நிறுவனத்திற்கு ஏற்கெனவே தயாரிப்புகளை விநியோகித்து வந்ததால் அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டார். ஆனால், Acer பெரிய நிறுவனம் என்பதால் அத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்புதல் செயல்முறைகள் பல மாதங்கள் ஆகும் என்பது தெரிந்தது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் விநியோகித்து வந்தது. அரசு லோகோவுடன் பிரத்யேகமாக லேப்டாப் பைகள் தயாரிக்கவேண்டியிருந்தது.
“அரசாங்கம் இந்த காண்ட்ராக்டை Acer நிறுவனத்திடம் ஒப்படைத்தது. குறைவான அவகாசமே இருந்ததால் பிரத்யேகமாக லேப்டாப் பைகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் ஏற்கெனவே அந்நிறுவனத்திற்கு விநியோகித்து வந்ததால் எங்களுடன் பைலட் பிராஜெக்ட் நடந்தது. 5,000 பைகளுக்கான ஆர்டரும் எங்களிடம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் Outshiny நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீதர்.
இதுபற்றி அவர் தொடர்ந்து கூறும்போது,
“இது சவாலான வேலைதான். இருந்தபோதும் என் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். இதுதான் எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்து களமிறங்கினேன். 30 நாட்களுக்குள் ஆர்டர் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டேன்,” என்கிறார்.
தற்சார்பு இந்தியா
விரைவில் ஸ்ரீதரின் நிறுவனம் Lenovo, HP போன்ற நிறுவனங்களை கிளையண்டாக இணைத்துக் கொண்டது. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் கூடுதலாக நான்கு தொழிற்சாலைகளை நிறுவினார். மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே வாங்கினார். லேப்டாப் ஸ்லீவ், டெலிவரி பேக், ஸ்கூல் பேக் என தயாரிப்புகளையும் விரிவுபடுத்தினார்.
2018-ம் ஆண்டு இந்தியாவில் மின்வணிகம் மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகும் வகையில் Arctic Fox என்கிற டி2சி தளத்தைத் தொடங்க முடிவு செய்தார். இன்று இந்த பிராண்டு நாலு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறது. 40 சதவீதம் பேர் இந்த வலைதளத்தில் தொடர்ந்து வாங்குகின்றனர். Arctic Fox தயாரிப்புகள் அமேசான், ஃப்ளிப்கார்ட், க்ரோமா போன்ற தளங்களில் கிடைக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் விநியோகs சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், மேக் இன் இந்தியா திட்டம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இவை Outshiny வணிகத்தை மேம்படுத்தின.
சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஸ்ரீதர் உள்நாட்டிலேயே கீபோர்ட், கம்ப்யூட்டர் மவுஸ், கேமிங் மவுஸ் போன்றவற்றை தயாரிக்கத் /தொடங்கினார்.
2022-ம் ஆண்டின்படி Outshiny கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கான லேப்டாப் பேக் தயாரிக்கும் முக்கிய நிறுவனமாக செயல்படுவதாக ஸ்ரீதர் தெரிவிக்கிறார். 70 சதவீத இந்திய சந்தையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், இந்நிறுவனம் HP தயாரிப்புகளை உலக சந்தையில் விற்பனை செய்வதற்காக HP நிறுவனத்தின் ஆடிட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சந்தை நிலவரம் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
தற்சமயம் பெங்களூரு, ஓசூர் சாலையில் மற்றுமொரு தொழிற்சாலையைத் தொடங்க ஸ்ரீதர் திட்டமிட்டிருக்கிறார். சீன சந்தையிலிருந்தே அதிக போட்டியை சந்திப்பதாக தெரிவிக்கிறார்.
“புதிதாக செயல்படும் நிறுவனங்கள் குறைவு. சீன நிறுவனங்களுடன் போட்டியிடுவது மிகப்பெரிய சவால். நீண்டகால அடிப்படையில் லாபம் ஈட்டுவதற்காக இந்தப் பிரிவில் முதலீடு செய்கிறோம்,” என்கிறார்.
2020-ம் ஆண்டில் உலகளாவிய லேப்டாப் ஆக்சசரீஸ் சந்தை அளவு 35.4 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டதாகவும் 6.3 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2021-2028 ஆண்டுகளிடையே வளர்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக Grandview அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இ-ஸ்போர்ட்ஸ் மக்களிடையே அதிகம் பிரபலமாகி வருவதும் பிராசஸ் ஆட்டோமேஷன் செயல்முறையும் லேப்டாப் ஆக்சசரீஸ் தேவை அதிகரிப்பதற்கான முக்கியk காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இந்தியாவில் முதல் முறையாக இந்த சேவையை அறிமுகப்படுத்தியதால் அதற்கே உரிய பலன்கள் இருப்பதாக ஸ்ரீதர் தெரிவிக்கிறார்.
வருங்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச், கேமரா, இயர்போன் உள்ளிட்ட ஆடியோ ஆக்சசரீஸ் போன்ற தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“2022ம் ஆண்டில் டிஆர்டிஓ நிறுவனத்திற்காக இரண்டு தயாரிப்புகளுக்கான டெக்னாலஜி ட்ரான்ஸ்ஃபர் கொண்டிருக்கிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக முதுகில் சுமந்து செல்லும் பைகள், ரிசர்வ் போலீஸ் படைகள் பயன்படுத்த பெண்களுக்கான பாதுகாப்பு கவசம் ஆகிய இரண்டு தயாரிப்புகளுக்கான இந்த டெக் ட்ரான்ஸ்ஃபர் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்,” என்கிறார் ஸ்ரீதர்.
மேலும், மின்சார வாகனங்கள் பிரிவிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. Moon E-Kick Scooter என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் ஸ்ரீதர் கவனம் செலுத்துகிறார். இதன் சோதனை முயற்சி சில மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டது.
”நாங்கள் இதுவரை 50 யூனிட் வரை விற்பனை செய்திருக்கிறோம். உத்திகள் வகுப்பதற்காக சந்தையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்,” என்கிறார் ஸ்ரீதர்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா
ரூ.21 ஆயிரம் முதலீடு; இன்று மொபைல் கவர் சாம்ராஜ்யம் உருவாக்கிய சென்னை இளைஞர்!