ஆண்களைப் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு முடிதிருத்தும் கடையை நடத்தும் சகோதரிகள்!
அப்பாவின் சிகிச்சை செலவை சமாளிக்க ஆண்களைப் போன்று வேடமிட்டு அவர் நடத்தி வந்த முடி திருத்தும் கடையைத் தொடர்ந்து நடத்தியுள்ளனர் இந்த சகோதரிகள்.
குடும்பத்தலைவரால் இனி வருவாய் ஈட்டமுடியாது என்கிற நிலை ஒரு வீட்டில் ஏற்பட்டும்போது அனைத்துமே ஸ்தம்பித்துவிடும்.
ஆனால் உத்திரப்பிரதேசத்தின் கிராமப்பகுதியைச் சேர்ந்த இந்த சகோதரிகள் தங்கள் குடும்பத்தை நடத்த வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களது உருவ அமைப்பை ஆண்களைப் போல் மாற்றிக்கொண்டு தங்கள் அப்பாவின் முடிதிருத்தும் கடையை நான்காண்டுகள் நடத்தியுள்ளனர்.
ஜோதி, நேஹா குமாரி இருவரும் சகோதரிகள். இவர்களது அப்பா உத்திரப்பிரதேசத்தின் பன்வாரி தோலா பகுதியில் முடி திருத்தும் கடையை நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இவரால் கடையைத் தொடர்ந்து நடத்த இயலாததால் கடையை மூட நேரிட்டது. குடும்பத் தேவைகளுக்கும் இவரது மருத்துவ சிகிச்சைக்கும் செலவு செய்ய வருமானம் இல்லாமல் இவரது குடும்பம் தவித்தது.
இத்தகைய சூழலில்தான் சகோதரிகள் இருவரும் குடும்பத் தேவைகளுக்காகவும் சிகிச்சை செலவுகளுக்காகவும் வருவாய் ஈட்ட அப்பாவின் முடி திருத்தும் கடையை மீண்டும் திறக்க முடிவு செய்தனர். ஆனால் வாடிக்கையாளர்கள் பெண்களிடம் இத்தகைய சேவையைப் பெற தயக்கம் காட்டியதால் அவர்களால் வருவாய் ஈட்ட முடியாமல் போனது.
எனவே இருவரும் ஒரு திட்டம் வகுத்தனர். இவர்கள் தங்களது முடியை வெட்டிக்கொண்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் அணிந்துகொள்வது போல் ஸ்டீல் ப்ரேஸ்லெட் அணிந்துகொண்டு தங்களது தோற்றத்தை இருவரும் மாற்றிக்கொண்டனர். அத்துடன் பெயரையும் தீபக், ராஜு என மாற்றிக்கொண்டனர்.
மெல்ல வாடிக்கையாளார்கள் வரத்துவங்கினார்கள். நாள் ஒன்றிற்கு 400 ரூபாய் வரை சம்பாதிக்கத் துவங்கினார்கள். இந்த வருவாயைக் கொண்டு அப்பாவிற்கு சிகிச்சை அளித்தனர். ’தி கார்டியன்’ உடனான நேர்காணலில் ஜோதி கூறுகையில்,
”பெண்களாக இருந்து வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்வது சரிவராத காரணத்தால் எங்களை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளாதவாறு தோற்றத்தை மாற்றியமைத்துக்கொள்ள தீர்மானித்தோம்,” என்றார்.
சுமார் 100 வீடுகள் அடங்கிய இவர்களது கிராமத்தில் ஒரு சிலர் மட்டுமே இவர்களுக்கு பரிச்சயமானவர்கள். சகோதரிகள் இருவரும் தங்களது தோற்றத்தை மாற்றியமைத்துக்கொண்ட பிறகு யாராலும் இவர்களை அடையாளம் காண முடியவில்லை. நேஹா கூறுகையில், “இன்றும் உங்களால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது,” என்றார்.
எனினும் சில நாட்களுக்குப் பிறகு சகோதரிகள் இருவரும் தங்களது வாடிக்கையாளர்களிடம் தங்களைப் பற்றிய உண்மையை தெரிவித்துள்ளனர். நேஹா கூறுகையில், “எங்களுக்கு நம்பிக்கை பிறந்துவிட்டது. இனி பயம் இல்லை. பெரும்பாலானோருக்கு நாங்கள் பெண்கள் என்பது தெரிந்துவிட்டது,” என்றார்.
தற்போது படிப்பைத் தொடரவேண்டும் என்பதற்காக இந்தச் சகோதரிகள் மதிய வேளையில் மட்டுமே கடையைத் திறக்கின்றனர். ஜோதி பட்டப்படிப்பை முடித்துவிட்டார். நேஹா படித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தச் சகோதரிகளின் அப்பாவான த்ருவ் நாராயண் கூறுகையில்,
"இவர்கள் வேலை செய்வதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனால் என் மகள்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. இவர்கள் கடினமான ஒரு சூழலில் இருந்து குடும்பத்தை மீட்டெடுத்துள்ளனர்,” என்றார்.
இவர்களது கிராமத்திற்கு அருகாமையில் இருக்கும் கொராக்பூர் நகரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் உள்ளூர் செய்தித்தாளில் இவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அரசு அதிகாரிகள் இதைக் கவனித்து இந்தச் சகோதரிகளை கௌரவித்தனர். உத்திரபிரதேசத்தின் குஷிநகர் துணை மண்டல நீதிபதியான அபிஷேக் பாண்டே கூறுகையில்,
”வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடமுடியும் என்பதை இவர்கள் உணர்த்துகின்றனர். இந்த இளம் சகோதரிகள் சமூகத்திற்கு உந்துதலளிக்கின்றனர். இவர்கள் கதை மக்களைச் சென்றடையவேண்டும்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA