பேச்சுவார்த்தை முடிவில் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சாம்சங் நிறுவன நிர்வாகம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இடையே, தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையின் பலனாக, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன நிர்வாகம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இடையே, தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையின் பலனாக, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சி காரணமாக இந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சாம்சங் நிறுவன நிர்வாகம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இடையே, தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையின் பலனாக, தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங்க் தொழிலாளர்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு பேச்சு வார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை துறை அமைச்சர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்து சாம்சங் நிறுவனம் தொழிலாளர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இதனையடுத்து, இன்று, (15 ம் தேதி) தொழிலாளர் நலத்துறை அலுலவலர்கள் முன்னிலையில், நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையில், இரு தரப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
- தொழில் அமைதி, பொது அமைதியை காக்கும் வகையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் போது நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.
- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மற்றும் நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
- தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதிலுரையை சமரச அலுவலர் முன் தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தத்தை கைவிட்டு தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர்.
Edited by Induja Raghunathan