தொழில் கடன் வாங்க போறீங்களா? நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 7 அடிப்படைக் கேள்வி-பதில்கள்!
வங்கியிலோ நிதி நிறுவனங்களிலோ தொழில் கடன் வாங்க விரும்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படை தகவல்கள் இங்கே கேள்வி-பதில்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? வங்கியிலோ நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் சில அடிப்படை விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
எவ்வளவு தொகை கடனாக பெறலாம்? எங்கிருந்து வாங்கலாம்? எந்த காலகட்டத்திற்குள் திருப்பி செலுத்த முடியும்? கடன் பெறுவதற்கான தகுதிக்கு வயது வரம்பு ஏதேனும் இருக்கிறதா? எதுபோன்ற காரணங்களால் கடன் மறுக்கப்படும்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்வது அவசியம்.
இதுதொடர்பாக உங்கள் மனதில் எழக்கூடிய ஏழு கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: கடன் பெறுவதில் கிரேட் ஸ்கோரின் முக்கியத்துவம் என்ன? தொழில் தொடங்க உடனடி தொழில் கடன் பெறுவதற்கு குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் என்ன இருக்கவேண்டும்?
பதில்: ஒரு வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம் 700 கிரெடிட் ஸ்கோர் இருக்கவேண்டும். 750-க்கு மேல் இருப்பது நல்லது. இந்த கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு அதிகம் இருக்கிறதோ எளிதாக கடன் பெறுவதற்கான வாய்ப்பும் அவ்வளவு அதிகம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
கேள்வி: கடன் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கான அவகாசம் என்ன?
பதில்: தொழில் கடனைத் திருப்பி செலுத்த குறிப்பிட்ட கால அவகாசம் என்று இல்லை. குறுகிய கால கடன் வாங்கினால் 12 முதல் 14 மாதங்களில் திரும்ப செலுத்தலாம். அல்லது மாதத்தவணை தொகையை அதிகப்படுத்தி ஆறு முதல் எட்டு மாதங்களிலேயே திருப்பி செலுத்திவிடலாம். கடன் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டு திருப்பி செலுத்தலாம்.
கேள்வி: கடன் பெறுவதற்கான வயது வரம்பு ஏதேனும் உள்ளதா?
பதில்: இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில் கடன் வாங்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்கவேண்டும் என ஆன்லைனில் சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அது தவறான தகவல். 18 வயது நிரம்பியிருந்தால் போதும், வணிகக் கடன் பெறலாம்.
கேள்வி: ஒருவர் ஏற்கெனவே வணிகத்தை நடத்தி வருகிறார். வணிகத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்குகிறார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்த வணிகத்தில் குறைந்தபட்ச டர்ன்ஓவர் அளவு இருக்கவேண்டியது அவசியமா?
பதில்: ஆம், குறைந்தபட்ச டர்ன்ஓவர் அளவு முக்கியம்தான். ஆனால், இந்த அளவு வங்கியைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் டர்ன்ஓவர் இருந்தால் வணிக கடன் வாங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆண்டு வருவாய் குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் இருக்கவேண்டும்.
அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிகம் லாபகரமாக செயல்பட்டு வருவது கட்டாயமாகும். வணிகம் நஷ்டத்தில் இருக்குமானால் கடன் கிடைப்பது சிரமமாக இருக்கும்.
கேள்வி: புது வணிகத்திற்காக நீங்கள் கடன் வாங்கினால் ஜிஎஸ்டி-யில் அதனால் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருக்குமா?
பதில்: ஜிஎஸ்டி வரி செலுத்தும் வணிகமாக இருந்தால் வணிகக் கடன் பெறுவதும் எளிதாக இருக்கும். ஜிஎஸ்டி அதிகமிருந்தால் லாபமும் அதிகம் என்று அர்த்தம். அப்படிப்பட்ட வணிகங்கள் மீது வங்கிகளுக்கு அதிக நம்பிக்கை இருக்கும்.
கேள்வி: வணிக கடனை முன்னரே அடைத்துவிட விரும்பினாலோ (Pre-closure) பகுதியாக தொகையை செலுத்த விரும்பினாலோ (part-payment) அதற்கான கட்டணம் என்னவாக இருக்கும்?
பதில்: எல்லா வங்கிகளிலும் கடன் தொகையை முன்னரே அடைப்பதற்கும், பகுதியாக செலுத்துவதற்கும் குறிப்பிட்ட கட்டணம் இருக்கும். இது அந்தந்த வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். சில வங்கிகளில் இதற்கான கட்டணம் ஏதும் வசூலிகப்படுவதில்லை. வழக்கமாக கடன் தொகையில் 4 முதல் 5 சதவீதம் வரை கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கலாம்.
கேள்வி: இந்திய அரசின் கடன் திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?
பதில்: புதிய வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசு சில கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முத்ரா யோஜனா, SIDBI கடன், CGTMSE, PMEGP, ஸ்டேண்ட்-அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, 59 நிமிடங்களில் பிஎஸ்பி லோன், NSIC NABARD போன்றவை இந்திய அரசின் கடன் திட்டங்களில் அடங்கும். இதுபற்றி மேலும் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடலாம்.
தொகுப்பு: ஸ்ரீவித்யா