மீன், கறி விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம்- கரூரில் கலக்கும் இளைஞர்!
பொறியியல் படித்தவர் இன்ஜீனியர்தான் ஆகவேண்டுமா? ஏன் மீன் வறுக்கக் கூடாதா…
பொறியியல் படித்தவர் இன்ஜீனியர்தான் ஆகவேண்டுமா ஏன் உணவகம் நடத்தக் கூடாதா…? படிப்பது அறிவை வளர்க்கத்தானே, அந்த அறிவை வைத்து தொழில் செய்து சம்பாதிக்கலாமே என புது லாஜிக்குடன் கந்தா மீன் உணவுக் கடை வைத்து மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார் கரூரைச் சேர்ந்த இளைஞர் மோகன்குமார்.
இன்ஜீனியரிங் படித்துவிட்டு, மீன்கடையிலா உட்காரப் போற, என உறவினர்களும், நண்பர்களும் ஏளனம் செய்தபோதும், தன் லட்சியத்தில் விடாமுயற்சியுடன் இறங்கி, தான் படித்த படிப்பும் வீணாகாமல், தன் கல்வியைப் பயன்படுத்தியே ஆன்லைனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மீன் வகைகளை வாங்கி கரூர் பகுதியில் பல்வேறு ஹோட்டல்களுக்கு விநியோகம் செயததோடு, தனது தந்தையின் மீன் கடையையும் டெவலப் செய்து அனைவரிடமும் தான் சாதிக்கத் தொடங்கிவிட்டதை சொல்லாமல் சொல்லி வருகிறார் மோகன்குமார்.
இதுகுறித்து மோகன்குமார் நம்மிடம் தெரிவித்ததாவது, நான் வீட்டுக்கு ஓரே பிள்ளை. ME. முடித்து விட்டு அரசுப் பணிக்கு முயற்சி செய்து வந்தேன். மேலும், கரூரிலேயே பிரபலமான கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தேன். மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம். ஆனால் காலை முதல் மாலை 6 வரை கடும் வேலைப் பளு.
யோசித்து பார்த்தேன் என்னதான் கடுமையாக உழைத்தாலும் வருவாய் குறைவாகவே கிடைக்கிறது. எனவே தந்தையின் தொழிலிலேயே இறங்கினால் என்ன என முடிவு செய்தேன்,” என்கிறார்.
கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள கந்தா ரெஸ்டாரண்ட்டை 13 ஆண்டுகளுக்கு முன் மோகனின் மாமாதான் நடத்தி வந்துள்ளார். அவர் வெளியூரில் வேறு கடை தொடங்கியதால், இக்கடையை மோகனின் தந்தை வசம் ஓப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். மோகனின் தந்தை பழனிவேலின் கைப்பக்குவம், ருசி என ஹோட்டலில் கூட்டம் கூடி, நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் கடையின் ஸ்பெசாலிட்டியே மீன் வகைகள்தான். அதனால் தான் கந்தா ரெஸ்ட்டாரண்ட், கந்தா மீன் உணவுக் கடை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் மோகனின் அம்மாவுக்கு அடிக்கடி உடல் நலமின்றி போக, அவரை கவனிப்பதற்காக கடைக்கு அடிக்கடி விடுமுறை விட வேண்டியிருந்தது. இதனால் வருமானம் இழப்பு ஏற்படவே, தந்தையின் தொழிலை முழுமூச்சாக தானே பார்த்துக் கொள்ள முடிவு செய்தார் மோகன்குமார்.
2018ஆம் ஆண்டு தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, தந்தையின் மீன் கடையை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார். முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, மோகனோ எதற்கும் செவிசாய்க்காமல் கருமமே கண்ணாக கடைப் பணிகளில் சுறுசுறுப்பாக இறங்கி பணியாற்றத் தொடங்கினார்.
நான், எனது தந்தையிடம் இருந்து மீன் ப்ரை, நண்டு சூப், சிக்கன் லாலிபாப், சிக்கன் பிரை, பிங்கர் பிஸ் என பலவகைப்பட்ட அசைவ உணவுகளைத் தயாரிக்கும் முறைகளை கற்றுக்கொண்டேன். எனது தந்தை ஹோட்டலை கவனித்தபோது வந்ததைவிட தற்போது இருமடங்கு அதிகமாகவே வருவாய் வருகிறது.
“மாதமொன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும், சுமார் 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஹோட்டல்களுக்கு கடல் மீன்கள், பதப்படுத்தப்பட்ட சிக்கன் போன்றவற்றை மிகக் குறைந்த விலையில் தரமான முறையில் விற்பனை செய்யத் தொடங்கினேன். இதன்மூலம் மட்டும் மாதம் ரூ.50ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. ஆக மொத்தம் எனது கடின உழைப்பால் மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார்.
மோகன்குமார் கடைக்கு வந்த பிறகு வாடிக்கையாளர் கூட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மீன் உணவுகள் சுவையாக கிடைப்பதே இதற்குக் காரணம். மேலும் முக்கியமாக மற்ற ஹோட்டல்களில் மீன், சிக்கனுக்கு வெங்காயத்தை சைடுடிஷ்ஷாக கொடுக்கும்போது, நான் மட்டும் சுவையான சட்னி தயாரித்து அளித்தேன். இதுவும், வாடிக்கையாளர் கூட்டத்துக்கு முக்கியக் காரணம் ஆகும் என்கிறார்.
புது பிசினஸை எப்படி இவ்ளோ சீக்கிரமா பிக்அப் பண்ணுனீங்கன்னு கேட்கும்போது, இது அப்பா ஏற்கெனவே 13 வருஷமா செய்து வந்த தொழில்தான் என்பதால் எனக்கு பெரிய அளவில் ரிஸ்க் ஏதுமில்ல. காலை 7 மணிக்கு எல்லா ஹோட்டலுக்கும் போன் பண்ணி ஆர்டர் எடுப்போம். பகல் 11 மணிக்குள்ள எல்லா ஆர்டரையும் டெலிவரி கொடுத்துட்டு, 12 மணிக்கு மேல மீன் மார்க்கெட்டுக்குப் போய் மீன் வாங்கிட்டு வருவோம். அப்புறம் மதியம் சிறிது ஓய்வுக்குப் பின் மாலை 5 மணிக்கு எங்க ரெஸ்டாரண்ட்க்கு வருவோம்.
அம்மா மசாலா ரெடி பண்ணுவாங்க, அப்பா மிக்ஸிங், நான் கிச்சன் மற்றும் கலெக்ஷன்னு குடும்பத்தோடு வேலை செய்வோம். இரவு 11 மணிக்கு கடையை மூடிட்டு வீட்டுக்குப் போயிடுவோம் என்கிறார்.
தனது மாலை நேர ரெஸ்டாரண்டை, ஓர் முழு நேர ஹோட்டலாக மாற்றுவதே தனது இப்போதைய லட்சியம் எனக் கூறும் மோகன், கடந்த 1 வருடமாக மட்டும்தான் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் கடந்த நான்கைந்து மாதமாகத் தான் பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன் வகைகளை மற்ற ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் தொழிலையும் தொடங்கியுள்ளார்.
மேலும், மற்ற ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் மீன், சிக்கன் போன்றவை மீதமாகிவிட்டால், அதனையும் தனது ரெஸ்டாரண்டில் பயன்படுத்தி விற்பனை செய்து விடுவதால், இவருக்கு நஷ்டம் என்பதே இல்லை.
வாரமொன்றுக்கு 3 முதல் 4 ஆயிரம் வரையாவது பதப்படுத்தப்பட்ட மீன், கறி வகைகளை விற்பனை செய்தால்தான் குறைந்தபட்சம் மாதமொன்று செலவுகள் போக 3 லட்சம் ரூபாயாவது சம்பாதிக்க முடியும் என்கிறார். கரூர் மாவட்டத்தில் மட்டும் 5 ஹோட்டல்களாவது திறக்கவேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார்.
இளைஞர்கள் தங்கள் கல்வி அறிவைப் பயன்படுத்தி, சுயதொழிலில் ஈடுபடவேண்டும். நான் பொறியியல் படித்ததால்தான் எனது தந்தை கஷ்டப்பட்டு செய்த வேலையை, எளிமையாக ஆன்லைனிலேயே முடித்து விடுகிறேன். சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு நான் ஓர் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பமாகும் என்கிறார் கண்களில் நம்பிக்கை மின்ன.