500 புத்தகங்களை படித்து, 75 புத்தகங்களை ரிவியூ செய்துள்ள 10 வயது மதுரை சிறுமி!
10 வயது குழந்தை என்ன செய்யும். செப்பு வைத்து விளையாடும், டிவியில் சிங்சான் பார்க்கும், செல்போனில் கேம்ஸ் விளையாடும் என்பது தானே நாமறிந்தது. ஆனால் மதுரையைச் சேர்ந்த 10 வயது நெரியா வெங்கட் 500 புத்தகங்களை முழுமையாக படித்துள்ளார். 75 புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளார்.
10 வயது குழந்தை என்ன செய்யும். செப்பு வைத்து விளையாடும், டிவியில் சிங்சான் பார்க்கும், செல்போனில் கேம்ஸ் விளையாடும் என்பது தானே நாமறிந்தது.
ஆனால், மதுரையைச் சேர்ந்த ஓர் 10 வயது பெண் குழந்தை 500 புத்தகங்களை முழுமையாக படித்து, 75 புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.
மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த வெங்கட், மோனிகா தம்பதியின் மூத்த மகளான நெரியா வெங்கட்தான் அக்குழந்தை. 5 ஆம் வகுப்பு மாணவியான நெரியா வெங்கட் தனது வீட்டையே ஓர் நூலகம் போல மாற்றி, தொடர்ந்து படித்து வருவதோடு, மற்ற குழந்தைகளுக்கும் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து கதைகள் மற்றும் தன்னம்பிக்கை கருத்துக்களை எழுதியும் வருகிறார்.
இதுகுறித்து நெரியா வெங்கட் தனியார் பண்பலைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
"நான் 3 மாதக் குழந்தையாக இருக்கும்போதே என் அம்மா புத்தகங்களை படிப்பதைப் பார்த்து எனக்கு இந்த ஆர்வம் வந்திருக்கலாம். எனது பெற்றோர் தினசரி தொடர்ந்து புத்தகங்களை படித்து வருவார்கள். நானும் காமிக்ஸ், வேடிக்கை விநோத வீர தீரக் கதைப் புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து பல்வேறு விதமான புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன்,” என்கிறார்.
நெரியா வெங்கட் புத்தகங்களை படிப்பது மட்டுமன்றி அட்வென்சர், பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை போன்ற தலைப்புகளில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து தனது Neriya M.venkat@jarofreviews என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியும் வருகிறார்.
நெரியா வெங்கட்டின் எழுத்தார்வம் குறித்து அவரது அம்மா கூறுகையில்,
“நாங்கள் நெரியா குழந்தையாக இருக்கும்போதே அவரை கையில் வைத்துக் கொண்டு புத்தகங்களைப் படிப்போம். இதனால் அவருக்கும் இயற்கையாகவே ஆர்வம் ஏற்பட்டு 3 வயதிலேயே காமிக்ஸ் உள்ளிட்ட புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.”
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து என்ன செய்ய என்ற மன அழுத்தத்தில் இருந்தபோது, நான் அவரிடம் புத்தகங்களை படித்து அவற்றுக்கு மதிப்புரை வழங்கச் சொன்னேன். இதையடுத்து, நெரியாவும் புத்தகங்களைப் படித்து ரிவியூ செய்து 4 ஸ்டார், 5 ஸ்டார் என மதிப்பு வழங்கி, இந்த புத்தகங்களில் அவருக்குப் பிடித்த விசயங்கள், புத்தகத்தின் சாராம்சம், புத்தகத்தில் உள்ள நல்ல நேர்மறையான கருத்துகள் மற்றும் இந்த புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் வாசகர்களுக்கு என ஆலோசனையும் வழங்கினார். இதுவரை சுமார் 75 புத்தகங்களுக்கு நெரியா இவ்வாறு ரிவியூ வழங்கியுள்ளார்,” என்கிறார்.
நெரியா வெங்கட் புத்தகங்களை படிப்பது மட்டுமன்றி, அவற்றுக்கு ரிவியூம் வழங்கி வருகிறார். விரைவில் 100 புத்தகங்களை ரிவியூ செய்து முடித்தவுடன் ஓர் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ஓர் புத்தகம் எழுதி வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வளவு புத்தகங்களைப் படித்துள்ளதால் அவரது சொல்லாற்றல் மற்றும் எழுத்தாற்றல் வளர்ந்துள்ளதால், எதிர்காலத்தில் ஓர் தலைசிறந்த எழுத்தாளர் ஆவதே தனது லட்சியம் என்கிறார்.
”எப்போதும் உயர்வாக எண்ணுங்கள். நல்லதே நினையுங்கள். எதையும் கட்டாயப்படுத்தி வர வைக்க முயற்சிக்கக் கூடாது. நான் என் மனதுக்கு பிடித்ததை செய்கிறேன். நீங்களும் அவ்வாறே இருங்கள். இதைதான் நான் அனைவருக்கும் கூறுகிறேன். எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக உருவாகி, மக்களுக்குப் பயன்படும் வகையில் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம்,” என்கிறார் நெரியா வெங்கட்.
நெரியா வெங்கட் போன்ற இளம் குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு 18 வயதுக்குள்பட்ட குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி என்ற விருதும், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கேடயம் அளித்து கவுரவிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இனி தமிழகத்தில் நெரியா வெங்கட் போல நிறைய குழந்தை எழுத்தாளர்களைப் பார்க்கலாம்.