காரைக்கால் டூ யாழ்பாணம் விரைவில் கப்பல் போக்குவரத்து - இலங்கை அமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரியில் இருந்து யாழ்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து யாழ்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு போரால் சீரழிந்த இலங்கை தற்போது பொருளாதாரத்தில் பலத்த அடிவாங்கியுள்ளது. கொரோனா நேரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டது, ஆடைகள், தேயிலைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணங்களாக அமைந்துள்ளன.
அப்பகுதியில் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கும் விதமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்தியாவும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. மேலும், இரு நாட்டிற்கும் இடையிலான நட்புறவை பலப்படுத்தும் விதமாக போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்டகாலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட மாகாணத்துக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை.
1970கள் வரை இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையே கப்பல் மற்றும் படகு போக்குவரத்து இருந்தது வந்தது. 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2019 நவம்பரில் தான், முன்னர் இராணுவ விமானநிலையமாக இருந்த பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விமானம் சேவை தொடங்கப்பட்டது. அலையன்ஸ் ஏர் நிறுவனம் மூலமாக வாரத்திற்கு 3 நாட்கள் என்ற கணக்கில் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் இலங்கை, தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவெடுத்துள்ளது. ஏனெனில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது சுற்றுலாவிற்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை சீர்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள இலங்கை, தென்னிந்தியாவில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பயணிகளை இலங்கைக்கு சுற்றுலாவிற்காக கவர்ந்திழுக்க முடிவெடுத்துள்ளது.
இதற்காக தமிழகத்தின் திருச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பலாலி இடையே விமான சேவையையும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தையும் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கும் தமிழகத்தின் திருச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பலாலி இடையே விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேபோல், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை இருந்து வந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான படகு அல்லது கப்பல் போக்குவரத்துக்கும் திருச்சி- பலாலி விமான சேவைக்கும் இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி