‘இனி எவரும் டாக்சி ஓட்டுநர் ஆகலாம்’ - பேட்ஜ் வாங்கும் சிக்கலை நீக்கிய தமிழ்நாடு அரசு!
டாக்சி, ஆட்டோ, மினிவேன் மற்றும் இதர இலகுரக மோட்டார் வாகனங்கள் (எல்எம்வி) ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகள் வணிகப் பேட்ஜ்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
டாக்சி, ஆட்டோ, மினிவேன் மற்றும் இதர இலகுரக மோட்டார் வாகனங்கள் (எல்எம்வி) ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகள் வணிகப் பேட்ஜ்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இனி கமர்ஷியல் பேட்ஜ் தேவையில்லை:
இந்தியாவில் கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு பேட்ஜ் போடவேண்டியது அவசியம். இதற்கு, ஓட்டுநர்கள் ஒரு வருடம் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது. தற்போது ஓலா, உபர் போன்ற தனியார் டாக்சி நிறுவனங்கள் மட்டுமே பேட்ஜ் இல்லாத ஓட்டுநர்களை கார்களை இயக்க அனுமதிக்கின்றன.
இதனால், தனியார் கார் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், டாக்சி, ஆட்டோ, மினிவேன் போன்ற இலகுரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் வணிக பேட்ஜ் வங்க வேண்டிய அவசியம் இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலமாக சாதாரண உரிமம் உள்ளவர்கள் விரைவில் இந்த வணிக வாகனங்களை ஓட்ட தகுதி பெறுவார்கள். ஓட்டுநர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, கமர்ஷியல் பேட்ஜ் கொண்ட ஓட்டுநர்கள், ஆர்டிஓக்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலும், அவர்கள் ஓட்டுநர் பள்ளிகள் மூலம் விண்ணப்பிப்பதால் ஊழலுக்கு வழி வகுத்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
மேலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் ஏற்கனவே டாக்சி ஓட்டுநர்களுக்கு கமர்ஷியல் பேட்ஜ் தேவையில்லை என அறிவித்துள்ளன. விரைவில் மோட்டார் வாகனச் சட்டம், 1989 ஐத் திருத்துவதன் மூலம் தமிழ்நாடும் இந்தப் பட்டியலில் சேர உள்ளது. போக்குவரத்து ஆர்வலர் ரெங்காச்சாரி கூறுகையில்,
“நகரின் ஒவ்வொரு வண்டிக்குப் பின்னாலும் ஓட்டுநர் வேலை குறித்த விளம்பரங்கள் காணப்படுவது வழக்கம். குறிப்பாக கொரோனா தொற்றின் போது நகரங்களில் இருந்து சொந்த ஊருக்குச் சென்ற பலரும், மீண்டும் திரும்பி வரவில்லை. அதனால் கால் டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ள இந்த நடைமுறை மூலமாக இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம்:
ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டத்தை மேலும் குறைக்கும் வகையில், வாகன ஓட்டிகள் 42 வகையான மோட்டார் வாகன ஆவணங்கள் தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இதில், டிரைவிங் லைசென்ஸ், டூப்ளிகேட் லைசென்ஸ் வழங்குதல், வாகனங்களின் பதிவு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், நெட் சென்டர்கள் அல்லது வாகனப் பதிவுகளின் போது டீலர்கள் மூலமாக இந்த தொடர்பு இல்லாத சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசுப் பேருந்துகள் வாங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கவும், மேலும், 1,500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ₹1,000 கோடி அரசு அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார். இதில், 1,000 பழைய பஸ்களுக்கு, டெண்டர் விடப்பட்டு, பாடி பில்டிங் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் சாலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
ஜெர்மன் வங்கியின் நிதியுதவியைப் பயன்படுத்தி வாங்கப்படும் மற்ற 2,213 பேருந்துகள் சட்டப்பூர்வ சிக்கலில் சிக்கியுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் சிவசங்கர், ஏனெனில் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர்கள் குறைந்த மாடி பேருந்துகளை மட்டுமே கோரியுள்ளனர். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், 442 தாழ்தளப் பேருந்துகளை வாங்க மற்றொரு தனி டெண்டர் விடப்பட்டுள்ளது, அதில் 242 சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கப்படும், என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
அரசு மினி பஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து திமுக எம்எல்ஏக்களின் மற்ற கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், ஏற்கனவே இந்த திட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையை தலைமை செயலாளர் இறையன்பு சமீபத்தில் ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளார். முதல்வருடன் கலந்துரையாடிய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
2017ம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், டாக்ஸி ஓட்டுவதற்கு பேட்ஜ் போட்டு தனி கமர்ஷியல் லைசென்ஸ் எடுக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்துத் துறையும், டாக்ஸி ஓட்டுவதற்கு சாதாரண LMV உரிமம் போதுமானது. இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், எடையை ஏற்றிக்கொண்டு செல்லும் பெரிய வாகனங்களை ஓட்டுவதற்கு, அதில் இருக்கும் எடையையும் அதன் தன்மையும் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், டாக்ஸியை பொறுத்தவரை பிரைவேட் கார் ஓட்டுபவர்களே டாக்ஸியை ஓட்டலாம் என்பதால், கமர்ஷியல் உரிமம் தேவையற்றதாகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் டாக்சி ஓட்டுநர்களுக்கு இருந்த பேட்ஜ் சிக்கல் நீக்கப்பட்டது.
‘தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை’ - காரசார விவாதத்துக்கு பின் சட்ட மசோதா நிறைவேற்றம்!