400 பேரை வீட்டுக்கு அனுப்பிய Infosys: இளம் ஐடி ஊழியர்களின் நொறுங்கிய எதிர்கால கனவுகள்!
வளாக நேர்காணில் தேர்வாகி இன்போசிஸ் பணியில் சேர்ந்தவர்கள், பயிற்சி நிலையில் வைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறாததால் 400க்கும் மேற்பட்ட இளம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேம்பஸ் இண்டர்வியூ, பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம், வளமான எதிர்காலம்… ! என பொறியியல் பட்டதாரிகள் நம்பிக்கையோடு இருக்கும் நிலையில், இந்த பாதையில் ஏற்கனவே பயணிக்கத்துவங்கிய 400க்கும் மேற்பட்ட இளம் ஐடி ஊழியர்கள் திடீரென தங்கள் எதிர்கால கனவுகள் நொருங்கி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டு காலமாக பணியாற்றிக்கொண்டிருந்த பயிற்சி ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை இது. வளாக நேர்காணில் தேர்வாகி பணியில் சேர்ந்தவர்கள் பயிற்சி நிலையில் வைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறாததால் 400க்கும் மேற்பட்ட இளம் பயிற்சியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் வளாகத்தில் இருந்து, இளம் ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டதோடு, உடனடியாக அவர்கள் பணியிடத்தில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும், நள்ளிரவில் எங்கே செல்வோம் காலை வரை அனுமதிக்கவும், என வெளி மாநில பெண் ஊழியர் ஒருவர் உயர் அதிகாரியிடம் கண்ணீர் மல்க கெஞ்சியதாக, மணிகண்ட்ரோல் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், இந்த ஊழியர்கள், பஸ்ஸில் கூட்டமாக அழைத்து வரப்பட்டு, ஒவ்வொராக நீக்கப்பட்டதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை யாரிடம் வெளியிடக்கூடாது, என எச்சரிக்கப்பட்டதாக இளம் பயிற்சியாளர்கள் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
திடீர் அழைப்பு
கடந்த 7ம் தேதி மைசூரு வளாகத்தில் பணியாற்றிய இளம் பயிற்சியாளர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாக அழைக்கப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கிறது.
அறைக்கு உள்ளும் சரி வெளியேவும் சரி பாதுகாப்பிற்காக பலர் நின்று கொண்டிருந்தனர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வகையில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலை இழந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் பெற்றோர்களிடம் என்ன சொல்வது எனத்தெரியாமல் பல இளம் பயிற்சியாளர்கள் கலங்கி நின்றனர்.
நீக்கம் ஏன்?
பயிற்சி காலத்தில் வைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறாதவர்களே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இன்போசிஸில் தீவிர பயிற்சி செயல்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மைசூரு வளாகத்தில் பயிற்சி முடித்த பிறகு அனைவரும் நிறுவன தேர்வை எதிர்கொள்ள வேண்டும், என இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
அனைத்து புதிய ஊழியர்களுக்கும் தேர்வில் மூன்று முறை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், மூன்றாவது முறையும் தோல்வி அடைந்தால் வேலையில் தொடர முடியாது, என்கிறது.
நிறுவன வாடிக்கையாளர்களுக்கான தரத்தை உறுதி செய்ய பல ஆண்டுகளாக இந்த நடவடிக்கை பின்பற்றப்படுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

கடினமாகும் தேர்வுகள்
ஆனால், வழக்கத்தை விட 2024 பிரிவினருக்கு தேர்வுகள் கடுமையாக்கப்பட்டதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பயிற்சி கடுமையாக இருக்கும் என்றும் பலரால் தேர்வில் வெற்றி பெற முடியாது, என அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்ததாகவும் கூறுகின்றனர்.
பயிற்சியாளர்களுக்கான தேர்வு பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவில் 50 சதவீதம் பெற்றால் மட்டும் போதாது, மொத்த பிரிவில் 65 சதவீதம் இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவார்கள். மேலும், பாடத்திட்டம் கடுமையாக்கப்பட்டு, கால அவகாசம் குறைக்கப்பட்டதாகவும் பயிற்சியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சோகம்
குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல், பாடத்திட்டம் பொதுவாக மிகக் கடினமானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே,
400 பேருக்கு மேல் வேலை இழந்துள்ள நிலையில், அடுத்த பிரிவான 450 பேர் மூன்றாம் கட்ட தேர்வு எழுத இருப்பதாகவும், அவர்களில் எத்தனை பேர் தேர்வாகின்றனர், எனத்தெரியாது என்றும் கூறப்படுகிறது.
2022ம் ஆண்டுக்கு பிறகு தேர்வுகள் கடினமானதாக தெரிகிறது. அதற்கு முன் போதிய அவகாசமும் அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
பயிற்சி காலத்தில் ஊழியர்கள் ஆறு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்வை எதிர்கொள்ளலாம். பொது பிரிவு தேர்வில் தோல்வி அடைந்தாலும், தொழில்நுட்பப் பிரிவை எதிர்கொண்டு கற்றலை தொடரலாம்.
திடீர் மாற்றம்
2024 முதல் தேர்வுகளும் பயிற்சியும் தீவிரமானதாக கூறப்படுகிறது. இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவனம், மாணவர்களுக்கு அளித்த வேலைவாய்ப்பு கடிதம் அனுப்பியும் வேலைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது. ஐடி துறை தேக்க நிலை இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.
இன்போசிஸ் தவிர மேலும் பல ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கலில் சுணக்கம் காட்டி வருகிறது. பயிற்சி காலத்தில் பொது பிரிவில், ஜாவா போன்ற புரோகிராமிங் மொழிகளில் பயிற்சி தேவை. பின்னர், புரோகிராமிங் அடிப்படைகள் கற்க வேண்டும். மொத்தம் 200 மணிநேர பாடதிட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்கம்
பயிற்சி மற்றும் தேர்வுகள் தீவிரமானதன் விளைவாக தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது. அக்டோபரில் இணைந்த 930 பயிற்சி ஊழியர்களில் முதல் கட்டமாக 160 பேர் மட்டுமே தேர்வாயினர். இரண்டாம் கட்டமாக 140 பேர் தேர்வானார்கள்.
குறைந்த ஊதியம் பெறும் பிரிவினரும், அதிக ஊதியம் பெறும் பிரிவினரும் ஒரே தேர்வு பாடத்திட்டத்தை படிக்க வேண்டியிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த திடீர் நீக்கம், ஐடி வேலை சார்ந்த எதிர்கால கனவில் இருந்தவர்களை நொருங்கச்செய்துள்ளது. இது அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
விமர்சனம்
இதனிடையே, இந்த பணிநீக்கத்தை ஐடி ஊழியர்கள் சங்கம் (NITES), அரமற்ற செயல், என கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பவுன்சர்கள், பாதுகாவலர்கள் பயன்படுத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் இவ்விதமாக நியாயமற்று நடத்தப்படுவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
தகவல் உதவி: மணிகண்ட்ரோல்

சரியாக செயல்படாத 5% ஊழியர்களை பணியிலிருந்து நீக்க மெட்டா அதிரடி திட்டம்!
Edited by Induja Raghunathan