விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் ‘ரூமி 1’
மறுபயன்பாட்டு ராக்கெட் என்பதால், விண்ணில் செயற்கைக்கோள்களை செலுத்தி விட்டு மீண்டும் பூமிக்கே இந்த ராக்கெட் 7 நிமிடங்களில் திரும்பி வந்துள்ளது. மீண்டும் இதே ராக்கெட்டைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் மிகப்பெரிய விசேஷ தன்ம்மை.
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்‘ரூமி 1’ (RHUMI-1) சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, சனிக்கிழமை, ஆகஸ்ட் 24 காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மறுபயன்பாட்டு ராக்கெட் என்பதால், விண்ணில் செயற்கைக்கோள்களை செலுத்தி விட்டு மீண்டும் பூமிக்கே இந்த ராக்கெட் 7 நிமிடங்களில் திரும்பி வந்துள்ளது. மீண்டும் இதே ராக்கெட்டைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் மிகப்பெரிய விசேடத் தன்ம்மை.
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மேற்பார்வையில், சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து இந்த ‘ரூமி - 1’ ராக்கெட்டை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவில் ஏவியேஷன் அமைச்சர் ராம்மோகன் நாயுடு இது குறித்துக் கூறும்போது,
“ரூமி-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விண்வெளித்துறையில் இந்தியாவின் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகிறது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, சில நிமிடங்களில் திரும்பும் திறன் கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டின் முன்னேற்றம், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வலிமையை எடுத்துக் காட்டுகிறது,“ என்றார்.
மார்ட்டின் குழுமத்திற்கும் ஸ்பேஸ்ஜோன் விஞ்ஞானிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய விண்வெளி அரங்கில் புதுமைக்கான நம் உந்துதலுக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது என்பதோடு இது இந்தியாவுக்கு ஒரு பெருமை மிக்க தருணம் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என்று கூறினார்.
இதன் எடை சுமார் 80 கிலோ எனவும் இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஏறத்தாழ 6,000 பள்ளி மாணவர்களும் ஈடுபட்டதாகவும் ஸ்பேஸ் ஸோன் நிறுவனம் தெரிவித்திருந்தது.
காலநிலை மாற்றம், காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு, காற்றின் தன்மை ஆகிய தரவுகளைச் சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 சிறிய செயற்ககைக் கோள்கள் இதில் பொருத்தப்பட்டு, ஆகஸ்ட் 24 அன்று ஒரு மொபைல் ஏவுதளம் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று ஏற்கெனவே ஸ்பேஸ்ஜோன், மார்ட்டின் குழுமம் இணைந்து அறிவித்ததற்கு இணங்க இந்த ராக்கெட் ஏவுதல் இப்போது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது,
“வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் 7 நிமிடங்களில் பூமிக்குத் திரும்பும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது ராக்கெட் தயாரிப்பில் அடுத்த கட்டம்,” என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
ஸ்பேஸ்ஜோன் நிறுவனர் டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் கூறும்போது,
“இந்தப் பணி எங்களது அர்ப்பணிப்புக்கான நிரூபணம் மட்டுமல்ல எங்களுடன் இணைந்து பணியாற்றிய மாணவர்களின் அசாத்திய திறமைக்கும், விண்வெளி ஆய்வின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்குமான ஒரு சான்றாக அமைந்துள்ளது,” என்றார்.