உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ‘டிரிப் மார்கெட்டிங்' - Cost Effective Marketing
உங்களுடைய பிசினஸில் பிளானிங்கில் தொடங்கி, இன்வெஸ்ட்மென்ட் வரை எவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை மார்கெட்டிங்கிற்கும் கொடுத்தால் மட்டுமே சக்சஸ் என்பது சாத்தியமாகும்.
ஒரே மாதிரியான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்துவதை விட, வித்தியாச வித்தியாசமான மார்கெட்டிங் முறைகளைக் கடைபிடிக்கும் போது நிறைய வாடிக்கையாளர்களை எளிதாக பெற முடியும். உங்களின் இந்த ஸ்மார்ட் டெக்னிக் குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
அப்படி குறைந்த செலவில், எல்லா வகை பிசினஸ்ஸிற்கும் பொருந்திப்போகக் கூடிய 'டிரிப் மார்கெட்டிங்' ‘Drip Marketing' தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
பிசினஸ்ஸை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது லாபத்தை அதிகரிப்பது மட்டுமல்ல கஸ்டமர்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு நீங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைப்பிலேயே இருப்பது அவசியம்.
ஒரு பொருளை அவர்கள் நம்மிடம் வாங்கவில்லை என்றாலும் தேவை ஏற்படும் போது நம்மை அணுகும் எண்ணத்தை அவர்ளிடம் விதைக்க வேண்டும், அப்படியான நம்பகத்தன்மை பிசினஸின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தரும். அந்த மேஜிக்கை டிரிப் மார்கெட்டிங் உங்களுக்கு செய்து தரும்.
சில்லறைக் கடைகளில் தவணைகளுக்கு பொருள் கொடுப்பது கூட, வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் ஒரு வகையான உத்தி தான். ஆனால், வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க கடன் தான் தீர்வா? என்றால் நிச்சயம் இல்லை, டிஜிட்டல் உலகத்தில் நிறைய வழிமுறைகள் கொட்டிக்கிடக்கிறது.
நோக்கம் :
டிரிப் மார்கெட்டிங் முறையில் எல்லாருடைய பிசினஸ்சிற்கும் ஒரே மாதிரியான வழிமுறை பொருந்திப் போகாது. உங்களுடைய பிசினஸ் மற்றும் கஸ்டமர்களுக்கு ஏற்ப உங்களின் திட்டமிடலில் மாற்றங்கள் இருக்க வேண்டும். அதாவது சப்ஸ்கிரைபர்கள் அதிகரிப்பது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிறுவனத்திற்கான கிளைகள் மற்றும் பங்குதாரர்களை அதிகரிப்பது, பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவது. இவை எல்லாமே வாடிக்கையாளர்கள் மூலம் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறை தான். இதில் உங்களின் பிசினஸ்ஸில் இப்போதைய தேவை என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
உதாரணமாக : யூடியூப் சேனல்கள் தங்களின் ஒவ்வொரு வீடியோவிலும், சப்ஸ்கிரைப் செய்வதற்கான நோட்டிபிகேஷன் தந்து கொண்டே இருப்பார்கள். இதனை ஆரம்பத்தில் பார்வையாளர்கள் கடந்து சென்றாலும், அடுத்தடுத்து நல்ல வீடியோக்களை ஒரே சேனல் தரும் போது, அந்த சேனலின் சப்ஸ்கிரைபராக அவர்கள் மாற வாய்ப்பு உண்டு. அதற்கான நினைவூட்டல் தான் வீடியோவில் வரும் நோட்டிபிகேஷன்.
இதே போன்று உங்களின் பிசினஸ் தேவையறிந்து அதற்கேற்ப திட்டமிடுவது அவசியம் .
வாடிக்கையாளர்களை கண்டறிதல் :
உங்களின் கஸ்டமர்கள் யார்?
அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். எப்போதும் உங்களிடம் இருக்கும் பொருளை வாடிக்கையாளர்களிடம் விற்றுவிட வேண்டும் என்று எண்ணாமல், அவர்களின் தேவை என்ன என்று கண்டறிந்து, அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி தேவைகளை உருவாக்கும் போது ஸ்மார்ட்டான முறையில் உங்களின் கஸ்டமர்களை நீங்கள் அதிகரித்துக் கொள்ள முடியும்.
உதாரணமாக : அமேசான் போன்ற ஷாப்பிங் பக்கத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கட்டணம் செலுத்துவது வரை சென்றுவிட்டு, அந்த பொருளை வாங்காமல் வந்தால் அடுத்த சில மணி நேரங்களில் உங்களுக்கு சலுகைகளின் கூடிய ஆஃபர் மெயில் வரும்.
அதில் இத்தனை மணிநேரத்திற்குள் அந்த ஆஃபரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதாவது ஒரு பொருள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுகிறது என்பதை தெரிந்து அதனை அவர்களிடம் விற்பது. அல்லது வாங்க வைக்கும் முயற்சியை மேற்கொள்வது. வாடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து செயல்படும் போது , என் பொருளை நீங்கள் வாங்குங்கள் என்று சொல்லாமலே, விற்பனை செய்து விட முடியும்.
பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுதல் : (Converting Leads to Customers)
உங்களின் பொருள் பற்றியோ சேவைப் பற்றியோ தெரிந்து உங்களை ஃபாலோ செய்பவர்களை உங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றுவது எளிது. அதற்கு உங்களின் நம்பகத்தன்மையை நீங்கள் அதிகரிக்க வேண்டும். உங்கள் பொருள் சரியானது, சேவை சரியானது என்பதை வாடிக்கையாளர்களை உணரவைக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுடன் இணைப்பில் இருப்பது அவசியம்.
எனவே இ-மெயில் ஐடி அல்லது தொலைபேசி எண் என ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர்களிடமிருந்து டேட்டாவாக திரட்டி வைத்துக் கொள்வது நல்லது. அந்த டேட்டாவை பயன்படுத்தி, அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை நீங்கள் தொடர்ந்து வழங்கும் போது, அவர்கள் நிச்சயம் உங்களின் கஸ்டமர்களாக மாறுவார்கள்.
மீடியம் :
இன்று எல்லாருமே இணையதளம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், இ-மெயில் என எதில் அதிக நேரம் செலவழிப்பவதில் ஆர்வம் உள்ளவர் என்பதை கண்டறிந்து உங்களின் மீடியத்தை தேர்வு செய்யலாம்.
உதாரணமாக : நான் ஃபேஸ்புக் மூலமாக 365 Marketing campaign ஐ தொடங்கினேன். என்னுடைய பார்வையாளர்கள் அதிக பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் என்பதால், என்னுடைய அடுத்தடுத்த மார்கெட்டிங் கோர்ஸ்களை நான் ஃபேஸ்புக் மூலமே அறிமுகம் செய்தேன். என் மார்கெட்டிங் கேம்பெயினை பார்த்தவர்கள் எல்லாரும் என் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள் என்று சொல்லமுடியாது, ஆனால், அடுத்தடுத்து அவர்களுடன் தொடர்பிலேயே இருந்து, அடுத்தடுத்த கோர்ஸ்கள் பற்றி அப்டேட் செய்து கொண்டு இருப்பதால், இப்போது வரை எனக்கு கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தெளிவான திட்டமிடல் :
இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என உங்களின் மீடியம் எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தை எளிதாக புரியவைக்கும் படியும், ஆர்வத்தை தூண்டும் விததித்திலும் கருத்துகள் ஷார்ப்பாக இருப்பது அவசியம், எனவே படங்கள், கண்ணைப் பறிக்கும் நிறங்கள் என்றில்லாமல் சொல்ல வேண்டிய தகவலை, வாடிக்கையாளருக்கு எரிச்சல் தராத விதத்தில் சொல்லி முடித்துவிடுங்கள்.
நீங்கள் அனுப்பும் தகவலில் நேரம், விதிகள், ஆஃபர்கள், வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை போன்றவை முழுமையாக இருப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை இது போன்ற தகவல்களை அனுப்பும் போதும், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதிமுறைகள் லின்க்கில் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்வது நல்லது. இதனால் கஸ்டமர்களின் நேரம் வீணாவதைத் தவிர்க்கலாம்.
மதிப்பிடல் :
விளம்பரம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதன் மூலம் எவ்வளவு கஸ்டமர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை ரிவியூ செய்வதும் முக்கியமான ஒன்று. டிரிப் மார்கெட்டிங் முறை பொறுத்தவரை நீங்கள் உடனே வாடிக்கையாளர்களை அதிகரித்து விட முடியாது. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் குறைந்த செலவில் சாத்தியமாகும்.
இதில் பணத்தைவிட வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் செலவழிக்கும் நேரம் முக்கியமானதாகும். எனவே வருடத்திற்கு ஒரு முறை டேட்டா எடுத்து, எவ்வளவு கஸ்டமர்களை பெற்றுள்ளீர்கள் என்பதை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவல்களையும் ஆர்வத்துடன் படிப்பவர்களை நீங்கள் வாடிக்கையாளர்களாக மாற்ற முடியும். எனவே அவர்களை தொடர்ந்து ஃபாலோ செய்யலாம். ஒரு வருடத்திற்கு பின்பும் தகவல்களில் ஆர்வம் காட்டாதவர்களை விட்டுவிடுவது நல்லது.
இது போன்று எந்த கஸ்டமர் உங்களின் தகவல்களை பார்வையிடுகிறார் அல்லது ஆர்வம் காட்டுகிறார் என்பதை தெரிந்து, அதை டேட்டாவாக மாற்றும் விதத்தில், உங்களின் தகவல் பரிமாற்றம் இருப்பது அவசியம். குறைந்த செலவில் சக்சஸ் சாத்தியமே.