கார்ப்பரேட் பணியை விட்டு விலகி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்!
கீதாஞ்சலி ராஜாமணி இனி எப்போதும் அலுவலக அறையில் தனது வசதியான இருக்கையில் அமர்ந்து வேலை செய்யவேண்டும் என நினைக்கமாட்டார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் ஏழாண்டுகள் பணிபுரிந்த பிறகு கீதாஞ்சலி தனது பணியை விட்டு விலகினார். அவர் ஈடுபட்டிருந்த பணி சலிப்பூட்டுவதாக இல்லை என்றாலும் அவருக்கு விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே அந்தப் பகுதியில் செயல்படவே தனது வேலையை விட்டு விலகினார்.
இன்று கீதாஞ்சலி ஃபார்மிசென் (Farmizen) என்கிற ஸ்டார்ட் அப்பின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ. நீங்கள் நகருக்கு வெளியே பாதுகாப்பான ஆர்கானிக் முறையில் உங்கள் உணவுப்பொருட்களை வளர்க்க இந்த ஸ்டார்ட் அப் விவசாய நிலத்தை வாடகைக்கு வழங்குகிறது. நீங்கள் உற்பத்தி செய்ய விரும்பும் காய்கறிகளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் நகர வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கும் நிலையில் நிலத்தில் இருக்கும் விவசாயிகள் உங்கள் செடிகளைப் பராமரித்து விளைச்சலை வீட்டிற்கே கொண்டு சேர்ப்பார்கள்.
ஸ்டார்ட் அப்பின் வளர்ச்சி, விவசாயத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டதன் காரணம் என பல்வேறு விஷயங்களை ஹெர்ஸ்டோரி உடனான நேர்காணலில் கீதாஞ்சலி பகிர்ந்துகொண்டார்.
விவசாயப் பின்னணி
கீதாஞ்சலி விவசாயத்துடன் நெருக்கமாகவே வளர்ந்தவர். “என்னுடைய குடும்பம் கேரளாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு முறை விடுமுறையின் போதும் நாங்கள் விவசாய நிலத்திற்குச் செல்வோம். அரிசியையும் மற்ற பயிர்களையும் நடவு செய்வோம்,” என்றார் கீதாஞ்சலி.
விவசாய நிலத்திலிருந்து தொலைவில் இருந்தபோதும் நிலத்துடன் நெருக்கமான உணர்வே அவருக்கு இருந்து வந்தது. அதேபோல் அவர்களது வீட்டின் பின்புறம் இருந்த 2,000 சதுர அடி நிலத்தை அவரது அம்மா கீதாஞ்சலிக்கும் அவரது சகோதரருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார்.
“பூசணிக்காயையும் பாகற்காயையும் யார் நன்றாக வளர்க்கிறார்கள் என்கிற போட்டி எப்போதும் எங்களுக்குள் இருக்கும்,” என்று நினைவுகூர்ந்தார். விதைகள், பருவம், மண் போன்றவற்றை கீதாஞ்சலியும் அவரது சகோதரரும் ஆய்வு செய்வார்கள்.
எனவே கீதாஞ்சலி பணியை விட்டு விலகியதும் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்த பகுதியில் செயல்படத் துவங்கினார். 2013-ம் ஆண்டு அவர் க்ரீன்மைலைஃப் என்கிற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் நில அமைப்பின் வடிவமைப்பு, தோட்ட பராமரிப்பு மற்றும் ஆன்லைன் ஸ்டோர் தொடர்பாக செயல்பட்டது. பின்னர் சில பார்ட்னர்களுடன் இணைந்து ஃபார்மிசென் (Farmizen) திட்டம் உருவானது.
நாம் உண்ணும் உணவு ரசாயனங்கள் நிறைந்தது. இதற்கு விவசாயிகளை ஒட்டுமொத்தமாக குறைகூறமுடியாது. இந்திய விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். விலைவாசியில் ஏற்ற இறக்கமும் உற்பத்தி, விநியோகம், நிதி போன்றவற்றை நிர்வகிப்பதில் இருக்கும் ஆபத்துகளும் அவர்களை கவலைக்குள்ளாக்குகிறது. அவர்கள் நிலையான வருவாய் ஈட்டுவதே கடினமாக உள்ளது. இதன் காரணமாக பலர் ரசாயனங்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
கீதாஞ்சலி இத்தகைய பிரச்சனைக்கு தீர்வுகாணவே ஷமீக் சக்கரவர்த்தி மற்றும் சுதாகரன் பாலசுப்ரமணியனுடன் இணைந்து 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஃபார்மிசென் துவங்கினார். இருவேறு நோக்கங்களை முன்னிறுத்தியே இந்த முயற்சி துவங்கப்பட்டது.
நகரவாசிகளுக்கு விவசாய அனுபவத்தை வழங்கி ஃப்ரெஷ்ஷான, ஆரோக்கியமான, ரசாயனங்களற்ற விளைச்சலை வழங்கவேண்டும் என்பதே முதல் நோக்கம். உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவவேண்டும் என்பதே இரண்டாவது நோக்கமாகும்.
விவசாய முயற்சி
மக்கள் செயலி வாயிலாக 600 சதுர அடி கொண்ட சிறிய விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஃபார்மிசென் உதவுகிறது. இதற்கான மாத கட்டணம் 2,500 ரூபாய். பயனர் தனக்குத் தேவையான பயிர்களை தேர்வு செய்து நிலத்தில் இருக்கும் விவசாயிடம் தெரிவிக்கலாம். செயலி வாயிலாகவே பயனர் தங்களது நிலத்தை கட்டுப்படுத்தலாம்.
“இது Farmville என்கிற ஆன்லைன் விளையாட்டு போன்றதுதான்,” என்கிறார் கீதாஞ்சலி.
பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் நிலத்தை பார்வையிட்டு ரசாயனங்களற்ற விளைச்சலை அறுவடை செய்துகொள்ளலாம். பயனரால் செல்ல இயலாமல் போகும் பட்சத்தில் ஃபார்மிசென் ஒவ்வொரு வாரமும் பயனரிடம் விளைச்சலை விநியோகம் செய்யும். உங்களது காய்கறிகள் எப்போது அறுவடை செய்யப்படுகிறது என்கிற தகவலையும் ஏதேனும் உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் பயனர் தெரிந்துகொள்ளலாம்.
ஃபார்மிசென் நிறுவனமும் விவசாயிகளும் வருவாயை சரிபாதியாக பங்கிட்டுக்கொள்கின்றனர். நிலம், விவசாயக்கூலி, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றிற்கு விவசாயி பொறுப்பேற்பார். விதைகள், மரக்கன்றுகள், போன்ற விவசாய உள்ளீடுகள் மற்றும் மார்கெட்டிங், தொழில்நுட்பம், விளைச்சலை வாடிக்கையாளர்களிடம் விநியோகிப்பதற்கான லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு போன்றவற்றிற்கு ஃபார்மிசென் பொறுப்பேற்கிறது.
”விவசாயிகளுக்கு தற்போது நிரந்தர வருவாய் கிடைக்கிறது. இது வழக்கமான விவசாய முறையின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்,” என்றார் கீதாஞ்சலி.
இந்நிறுவனம் தற்போது பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய பகுதிகளில் செயல்படுகிறது. 1500 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. மூன்று நகரங்களில் 24 நிலங்களில் சுமார் 40 ஏக்கருக்கு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவடையச் செய்து 1 லட்சம் குடும்பங்கள் வரை சென்றடைவதையும் அடுத்த இரண்டாண்டுகளில் 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முயற்சியின் பலன்
கீதாஞ்சலி சில ஆரம்பகட்ட சவால்களைச் சந்தித்தார். “எங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்ட விவசாயியிடம் எங்களது வணிக மாதிரியை விவரித்து முதல் பார்ட்னராக இணைந்துகொள்ள சம்மதிக்கவைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்றார். விவசாயிகள் தொடர்பான இத்தகைய சிக்கலை எதிர்கொண்ட பிறகு வளர்ச்சியடைவது கடினமாக இருக்கும் என நினைத்தனர். ஆனால் இவர்களது வணிக மாதிரி விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றுத்தந்தது.
”விவசாய சமூகத்தினர் ஒருவரோடொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். எனவே புதிய மாதிரியின் மூலம் ஒரு விவசாயி பலனடைந்ததும் அந்தத் தகவல் வேகமாக பரவியது. இதனால் நாங்கள் விவசாயிகளைத் தேடி செயல்பாடுகளை விவரித்து சம்மதிக்க வைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அவர்களாகவே எங்களை அணுகினார்கள். எங்களது பார்ட்னர்ஷிப் மாதிரிக்கு பொருத்தமானவர்களா என்பதை ஆராய்ந்து அவர்களை இணைத்துக்கொண்டோம்,” என்றார்.
ஆர்வத்தைக் கண்டறிதல்
புதிதாக தொழில்முனைவில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு கீதாஞ்சலி சில ஆலோசனைகளை வழங்கினார்.
“உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறியவேண்டும். முக்கியமாக உற்சாகமாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு நாளும் சோர்வூட்டுவதாகவே அமைந்துவிடும்,” என்றார். அத்துடன் உங்களது ஆர்வத்தைக கண்டறிய உங்களது குழந்தைப் பருவத்தின் நினைவுகளுக்கு திரும்பச் செல்லுங்கள் என்று பரிந்துரை செய்கிறார்.
”பழைய நினைவுகளை ஆய்வு செய்து நாம் முன்னர் மகிழ்ந்து அனுபவித்த விஷயங்களை நினைவூட்டிக் கொள்வது மகிழ்ச்சியளிக்கும்,” என்றார் கீதாஞ்சலி.
ஆங்கில கட்டுரையாளர் : பிரனவ் பரசர் | தமிழில் : ஸ்ரீவித்யா