வாழ்க்கையை புரட்டிப்போட்ட முடக்குவாதம் - குலியன்-பாரே சிண்ட்ரோமிலிருந்து மீண்ட இளைஞர்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் பல பகுதிகளிலிலும் ஆங்காங்கே ஜிபிஎஸ் பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், ஒரு சகாப்தத்திற்கு முன்பே ஜிபிஎஸ்-ஆல் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நிதின் நரேன், நோயுடன் அவர் நடத்திய நீண்ட போராட்டத்தை பகிர்ந்து கொண்டார்...
கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்கள் மனிதர்களை தாக்குவது அதிகரித்துவிட்டது. சமீபத்தில், புனேவில் ஜிபிஎஸ் எனும் குலியன்-பாரே சிண்ட்ரோமின் (Guillain-Barré syndrome - GBS) பாதிப்பு அதிகரித்துள்ளது. சில உயிரிழப்புகளுக்கும் காரணமாகியுள்ளன. GBS என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கி பலவீனம், உணர்வின்மை மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் பக்கவாதம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் ஒரு அரிய நிலை.
GBS-க்கான காரணங்கள் அறுவை சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் முதல் பூச்சி கடித்தல் வரை இருக்கலாம், என்று கூறப்படுகிறது. மற்றொரு சுவாரஸ்யமான மற்றும் குறைவாக அறியப்பட்ட காரணம் சமைக்கப்படாத/வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உட்கொள்வது, இது மன அழுத்தத்தைத் தூண்டும் தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் பல பகுதிகளிலிலும் ஆங்காங்கே ஜிபிஎஸ் பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், ஒரு சகாப்தத்திற்கு முன்பே ஜிபிஎஸ்-ஆல் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நிதின் நரேன், நோயுடன் அவர் நடத்திய நீண்ட போராட்டத்தை பகிர்ந்தார்.
"2007ம் ஆண்டு, நான் GBS ஆல் பாதிக்கப்பட்ட போது, என் வாழ்க்கையின் ஒரு முழு ஆண்டையும் இழந்தேன். ஒரு உயிர் பிழைத்தவராக, முழுமையான முடக்குவாதத்திலிருந்து மீண்டு, திரும்பவும் என் காலில் நிற்கும் திறனை பெற்ற எனது தனிப்பட்ட பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்..."

நோய் பாதித்தது எப்படி?
2006ம் ஆண்டின் புத்தாண்டு ஈவ்வினிங் அது. எல்லா இளைஞர்களையும் போலவே, எனது நண்பர்களுடன் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்தேன். உணவும் களியாட்டமும் தான் அனைத்திற்கும் மையமாக இருந்தன. அருகிலுள்ள உணவு விடுதியில் பலவிதமான வறுத்த மற்றும் கிரில் செய்யப்பட்ட இறைச்சிகள் இருந்தன. அங்கு கபாப் மற்றும் ரோல்களை ருசித்து சாப்பிட்டேன். இரவு முடிந்தது.
"வழக்கமான புத்தாண்டு வாழ்த்துக்களுக்குப் பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றோம். மறுநாள், திங்கட்கிழமை என்பதால், அனைவரும் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால், அடுத்த சில நாட்களில், தூங்கும்போது, பக்கவாட்டில் திரும்புவதில் எனக்கு சிரமம் இருப்பதைக் கவனித்தேன், என் கைகள் விறைப்பாக உணர ஆரம்பித்தன. அன்றாட வேலைகளைச் செய்வதிலும் எனக்கு சிரமம் ஏற்பட்டது."
டெல்லியில் குளிர் அலையின் நடுவில் இருந்ததால், இந்த அறிகுறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குளிர்ந்த வானிலைதான் இதற்குக் காரணம் என்று எண்ணி அன்றாட வாழ்க்கையைத் தொடங்கினேன். இது மிகவும் தீவிரமான ஒன்றின் ஆரம்பம் என்று அப்போது எனக்குத் தெரியாது.
ஜனவரி 13, 2007ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தி திரைப்படமான 'குரு' திரையரங்குகளில் வெளியானது. வெளியூர்களில் இருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு நெருங்கிய நண்பர், மார்னிங் ஷோவிற்கு படத்திற்கு போலாமென வற்புறுத்தினார்.
"அதுவரை எல்லாம் சரியாக சென்றது. அடுத்த இரண்டு நாட்களில், என் சக்தி அனைத்தும் நழுவுவது போல் உணர்ந்தேன். சோர்வடையத் தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமை மாலை, மற்றவரது உதவி இல்லாமல் சோபாவில் இருந்துகூட எழுந்திருக்க முடியவில்லை."
அப்போது தான் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஒரு நாள் காத்திருக்க முடிவு செய்தேன். ஞாயிற்றுக்கிழமையை என்னால் சமாளிக்க முடிந்தது. திங்கட்கிழமை காலை மருத்துவமனைக்குச் சென்றேன். அடுத்த 48 மணிநேரங்கள் பயத்துடன் கடந்தன. சொல்லப்போனால், என்னால் அசையவே முடியவில்லை.
"என் கையை ஒரு நிலையில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த ஒருவரது உதவி தேவைப்பட்டது. என்னை பரிசோதித்த மூத்த மருத்துவர் ஒருவர், எனக்கு குலியன்-பாரே நோய்க்குறி (GBS) இருக்கலாம், என்று சந்தேகித்தார்."
ஆனால், அதற்கு தேவையான பரிசோதனையை மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு மையத்தில் மட்டுமே செய்ய முடியும் என்றார். மருத்துவமனையிலிருந்து சோதனை மையத்திற்கும் செல்லும் பயணம் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஏனெனில், என்னால் நகரவே முடியவில்லை. பின்னர், MRI முடிவுகள் எனக்கு GBS தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிபடுத்தின. மறுநாள் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (AIIMS) மாற்றப்பட்டேன், அங்கு எனது சிகிச்சைத் தொடங்கியது.
நோயின் பிடியில் கடுமையான சிகிச்சை
எய்ம்ஸில், ஐந்து நாட்களுக்கு விலையுயர்ந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆஸ்திரேலிய மருந்தை எனக்கு பரிந்துரைத்தனர். முதல் நான்கு நாட்களில் ஐந்து பாட்டில்களும், கடைசி நாளில் ஆறாவது பாட்டில்களும் எனக்கு வழங்கப்பட்டன. மருத்துவர்கள் தொடர்ந்து என் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டு என் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்தனர். முன்பு போல நான் எப்போது நடக்கவும் ஓடவும் முடியும், என்று என் மருத்துவரிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு அவர்கள்,
"சில வாரங்கள்... ஏன், 7-8 மாதங்கள் ஆகலாம். மிஸ்டர் நரேன்! உங்களை என்ன தாக்கியது, நீங்கள் எதில் சிக்கியிருக்கிறீர்கள், அதிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது!" என்று கூறினர்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். மருத்துவர்கள் உடனடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும், அதிக நாட்கள் தங்கினால் எனக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தினர். அப்போது நடந்த ஒரு சம்பவம், எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது.
வீட்டிற்கு திரும்பிய பின் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, என் கழுத்து என்னை மீறி ஒரு பக்கமாக திரும்பியது. என் கழுத்தை மீண்டும் மேலே தூக்க என்னிடம் வலிமை இல்லை. என் கழுத்தை மீண்டும் நிமிர்ந்த நிலையில் வைக்க யாராவது எனக்கு உதவ வேண்டியிருந்தது.
"அடுத்த 7-8 மாதங்களுக்கு, ஒரு நாளுக்கு 3 முதல் 4 முறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. என் கைகளையும் கால்களையும் மீண்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது போல இருந்தது. அந்த நாட்கள் சக்கர நாற்காலியிலே கழிந்தன. மீட்சி மெதுவாக இருந்தபோதிலும், சில மாதங்களில் காலை ஊன்ற தொடங்கினேன். மீண்டும் நடக்கத் தொடங்கிய நாள் எனக்கு மறுபிறவிக்குக் குறையாதது."
என் பிசியோதெரபிஸ்ட் யார் உதவியுமின்றி என்னை நடக்க விட்டுச் சென்ற அந்த நாளின் ஒவ்வொரு அடியும் எனக்கு நினைவில் உள்ளது. இருப்பினும், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம்.

மனதிடமே நோய்க்கு மருந்து
இது நிகழ்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் பல முறை வேலைகளை மாற்றியுள்ளேன், பல துறைகளில் பணியாற்றியுள்ளேன், பல பயணங்களை மேற்கொண்டுள்ளேன். வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஒவ்வொரு GBS நோயாளிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நான் சொல்வது என்னவென்றால்,
"நேர்மறையான மனநிலையைப் பேணுங்கள், வழக்கமான பிசியோதெரபியைத் தொடருங்கள். நீங்கள் மீண்டும் உங்கள் காலில் நின்றவுடன், உங்கள் வலிமையை மீண்டும் பெற எடைப் பயிற்சியை (நிபுணர் மேற்பார்வையின் கீழ்) பின்பற்ற வேண்டும். நேர்மறையாக இருப்பதும் மிகவும் முக்கியம்."
அச்சமயத்தில் ஒரு மூத்த நரம்பியல் நிபுணரைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர், GBS-ல் இருந்து மீண்டது உங்களுக்கு அதிர்ஷ்டம், நீங்கள் மரணத்தை எதிர்த்துப் போராடி திரும்பி வந்தீர்கள்!!... என்று கூறினார்.
மனம் தளராதீர்கள்; கடந்த தசாப்தத்தில் மருத்துவ அறிவியல் முன்னேறியுள்ளது, மேலும் GBS குணப்படுத்தக்கூடியது!" என்று பகிர்ந்து நம்பிக்கையின் ஒலியை பரவ செய்தார்.