நெய் மிளகாய், பிங்க் கொய்யா: புதிய ரகங்களை கண்டுபிடித்து அசத்தும் பட்டதாரி ‘விவசாயி’ ஸ்ரீலஷ்மி!
விவசாயிக்கு லாபம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு இந்த இரண்டையும் சாத்தியமாக்கி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரிப் பெண் ஸ்ரீலஷ்மி. பாரம்பரிய பயிர்களில் புதிய ரகங்களை கண்டுபிடித்து விவசாயத்தில் புதிய இலக்கணம் படைத்து வருகிறார் இவர்.
நான் விவசாயியின் மகள் என்று சொல்லவே பலர் சங்கோஜப்படும் காலகட்டத்தில் அப்பாவின் விவசாய அறிவையும் அனுபவத்தையும் பார்த்து வியந்து அவர் வழியிலேயே விவசாயத்துறையில் புதுமைகள் படைத்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீலஷ்மி.
“புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் எனது சொந்த ஊர். அப்பா வேங்கடபதி 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் வேளாண் ஆராச்சியில் என்னை வியக்க வைத்த மனிதர். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பரிசோதனைக் கூடம் அமைக்கும் அளவு வசதி இல்லாததால் எங்களிடம் உள்ள பணம் மட்டும் பொருட்களை பயன்படுத்தி 1999லேயே சோதனைக் கூடம் அமைத்து புதிய ரக கண்டுபிடிப்புகளை அப்பா செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் அப்பா பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வேளாண் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று பேசுவதுண்டு. அப்பாவிற்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் என்னையும் உடன் அழைத்துச் செல்வார். பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எனக்கு புரிந்த வரை அப்பாவிற்கு விளக்கிக் கூறுவேன். இதோடு பேராசிரியர்களின் உரையை பதிவு செய்து வந்து வீட்டிலும் போட்டு கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வோம். இப்படியாக அப்பாவிற்கு உதவியாக 7 வயதில் தொடங்கிய பயணம் விவசாயத்தின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிவிட்டதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி.
கனகாம்பர பூக்களில் புதிய ரகங்களை விளைவித்து வேங்கடபதி ரெட்டியார் அனைவரையும் அதிசயப்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சவுக்கை, கரும்பு போன்ற பயிர்களில் குறைவான காலத்தில் அதிகப்படியான விளைச்சலை தரக்கூடிய வகைகளை உருவாக்கியுள்ளார். கல்வியறிவு இல்லாவிட்டாலும் விடாமுயற்சியோடு வேளாண் ஆராய்ச்சியில் புதுமைகள் பல படைத்ததை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு ’பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பதை உண்மையாக்கும் விதமாக கான்வென்ட்டில் படித்து, எம்பிஏ பட்டம் பெற்றாலும் விவசாயம் தான் எனது மூச்சு என்று அப்பா வேங்கடபதி வழியில் அவரை பின்பற்றி ஸ்ரீலஷ்மியும் படித்து முடித்த பின்னர் வேளாண் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்.
“எம்பிஏ படித்து முடித்த பின்னர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு தேர்வான போதும் பிறரிடம் அடிமையாக ஏன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். விவசாயம் தான் நிறைவான வாழ்கைக்கான அர்த்தம் தரும், இந்தத் துறையில் இருந்தால் மட்டுமே என்னை தனித்துக் காட்ட முடியும் என கருதினேன். அதோடு வேளாண் ஆராய்ச்சியில் எனக்கு வேண்டிய தகவல்களை வழங்க எனக்கு குருவாக அப்பா இருக்கிறார், அவரின் அனுபவமே ஆயிரம் விக்கிபீடியாவிற்கு சமம் என்பதால் விவசாயத்தையே சொந்த தொழிலாக செய்யலாம் என்று முடிவு செய்து அதையே விரும்பி செய்தேன்,” என்கிறார் ஸ்ரீலஷ்மி.
2012ல் மிளகாயில் புதிய ரகமாக நெய் மிளகாய் என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளார் இவர். இந்த மிளகாய் சாதாரண மிளகாயை விட காரம் கூடுதல் + சமைக்கும் உணவில் சேர்க்கும் போது நெய் வாசனையை கொடுக்கும் என்பது இதன் ஸ்பெஷல்.
இதனைத் தொடர்ந்து 2014ல் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோரப் பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை சாதித்து காட்டினார். குளிர்பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிளுக்கு நிகராக அதிக சாறு நிறைந்ததாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளது. இவர் உருவாக்கி உள்ள ஆப்பிள் மரத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கி இருக்கின்றன.
ஆப்பிள் வகைகளை கிராஃப்டிங் செய்து இனவிருத்தி செய்யவும் ஸ்ரீலஷ்மி திட்டமிட்டுள்ளார். 2016ல் ஆப்பிள் பழம் போன்று பெரிய அளவில் நாவல்பழ ரகம், 2 அடி உயரம் கொண்ட கத்தரிக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளையும் விளைவித்து வியக்க வைத்துள்ளார்.
பொதுவாக கத்திரிக்காய் செடியில் இருந்து 6 மாதம் மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும், அதிலும் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கிராஃப்டிங் செய்து ஒரே செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி (இவை மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை) என மூன்றையும் ஒட்டுகட்டி விளைச்சல் எடுக்க முடியும். இது செடி போன்று இருக்காமல் மரம் போன்று இருப்பதால் 5 ஆண்டுகள் விளைச்சல் கொடுக்கும், மேலும் சுண்டைக்காயை வேரில் போட்டு ஒட்டுகட்டுவதால் மரம் வளர அதிக நீர் தேவையில்லை, வறட்சியையும் சமாளிக்கும் என்று தனது ஆராய்ச்சிகளின் பலன்களை மடை திறந்த வெள்ளமென கொட்டுகிறார் ஸ்ரீலஷ்மி.
2018ம் ஆண்டு முதல் கொய்யா விவசாயத்தில் பல புதிய ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் ஸ்ரீலஷ்மி. சந்தையில் தற்போது வெள்ளை கொய்யா மட்டுமே கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி மட்டுமே இருப்பதால் இதனை சாப்பிட்டால் வயிறு நிறையும். இதுவே சதைப்பகுதி பிங்க் அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாவை சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம், சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆனால் இந்த வகை கொய்யா சந்தையில் கிடைப்பதில்லை என்பதோடு அதிக விலையும் கூட.
வளர்ந்த செடியின் நுனிமொட்டை வெட்டி எடுத்து செடிகளாக வளர்க்கும் குளோனன் முறையில் இந்தச் செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து வளர்த்து, பிறகு வயலில் நடும்போது 2 மாதத்திலேயே செடிகளில் கொய்யா பிஞ்சுகளைக் காண முடிந்தது. நிச்சயமாக ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த வகை கொய்யா ரகங்களை நட்டு எங்களின் அறிவுறுத்தல்கள்படி பராமரித்து வந்தால் ஓராண்டில் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று உத்தரவாதம் தருகிறார் ஸ்ரீலஷ்மி.
புதிய ரக கண்டுபிடிப்புகள் அனைத்துமே எங்களது பண்ணையில் 2 ஆண்டுகள் வரை சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே விவசாயிகளிடத்தில் வழங்கப்படுகிறது. விதைகளாக விவசாயிகளிடம் வழங்கினால் அவற்றில் சம அளவிலான மகசூல் எடுப்பது சிரமம் என்பதால் குளோனன் முறையில் செடிகளை வளர்த்து கொடுக்கிறோம். இந்த குளோனன் முறையில் வளர வைக்கும் செடிகளில் காய்க்கும் காய்கள், பழங்கள் சமமான எடை மற்றும் அளவில் இருக்கும் என்பதால் விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது என்கிறார் ஸ்ரீலஷ்மி.
அப்பாவின் அனுபவம் அறிந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த விளம்பரம் காரணமாக எங்களின் புதிய ரகங்கள் பற்றி அறிந்தவர்கள் எங்களை அணுகி செடிகளை வாங்கிச் சென்று தங்களது விளைநிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் தாங்களும் வருமானம் பெறுவதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி.
அதிக மகசூல் தரும் கொய்யாச்செடிகளை புதிய முறையில் வளர்த்து ஜெர்மனியைச் சேர்ந்த இன்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டியின் (International Peace University ) டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வேளாண் ஆராய்ச்சியில் இதுவரை செய்தது எல்லாம் ட்ரெய்லர் தான் இனி தான் மெயின் பிச்சரே என்கிற ரீதியில் உற்சாகம் குறையாமல் பேசும் ஸ்ரீலஷ்மி, கொய்யாவில் 50 புதிய ரகங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளார். 2 அல்லது 3 மாதங்களில் ஆராய்ச்சி முடிந்து புதிய ரக கொய்யா தயாராகிவிடும் என்கிறார் இந்த பெண் விவசாயி.
பெண்களுக்கு ஏற்ற துறை வேளாண் ஆராய்ச்சித்துறை ஆனால் ஃபிளைட் கூட எளிதில் ஓட்டிவிடும் இன்றைய பெண்கள் இந்தத் துறையை திரும்பிக் கூட பார்க்காதது வருத்தமாக இருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. கண்டுபிடிப்பிற்கான ஆர்வமும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் இந்தத் துறையைப் போல பெண்களுக்கு எளிமையான துறை வேறு எதுவுமே இல்லை.
எல்லா பெண் குழந்தைகளையும் போல அப்பா தான் என்னுடைய முன்மாதிரி என்று சொல்லும் ஸ்ரீலஷ்மி, மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் விருப்பத்தின்படியே தான் வேளாண் ஆராய்ச்சியாளராகியுள்ளதாகக் கூறுகிறார். நான் 7 வயதாக இருக்கும் போதே அப்துல்கலாம் ஐயா ராஷ்ட்ரபதி பவனுக்கு எங்களை குடும்பத்துடன் அழைத்து அப்பாவை பாராட்டினார். அப்போது அப்பா இந்தத் துறையில் சாதிப்பது போல நானும் சாதிக்க வேண்டும் அப்போது தான் தனித்துவத்துடன் இருக்க முடியும் என்று அறிவுரை கூறினார். அவரின் ஊக்கத்தினாலும் அப்பாவுடன் சிறு வயது முதல் பயணித்து வந்த காரணத்தாலும், தான் முழுக்க முழுக்க கணினி சார்ந்த பட்டப்படிப்பை படித்தாலும் விவசாயத்துறைக்கே முக்கியத்துவம் அளித்ததாக பெருமையோடு சொல்கிறார் ஸ்ரீலஷ்மி.
எப்போதுமே ஒரு செயலை செய்வதற்கு முன்னர் லட்சம் முறை யோசிக்கலாம் ஆனால் அதனை செய்யத் தொடங்கிய பின்னர் அது சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்யக் கூடாது. இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் எப்பாடு பட்டாவது அதை சாதித்து காட்ட வேண்டும். இலக்கை அடைவற்காக வாழ்வில் எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம். விமர்சனங்களை தூக்கி எறிந்து வெற்றியில் மட்டுமே குறியாக இருந்து அதை நோக்கி கவனம் செலுத்தினால் லட்சியம் நிறைவேறும் என்பதே ஸ்ரீலஷ்மியின் தொடர் சாதனைகளுக்கான உரம்.