சிறிய நகரங்களில் இருந்து பல கோடி மதிப்பு வர்த்தகத்தை உருவாக்கிய தொழில் முனைவோர்கள்!
யுவர்ஸ்டோரியின் எஸ்.எம்..பி ஸ்டோரி, சிறிய நகரங்களில் இருந்து செயல்பட்டு, பல கோடி வர்த்தகத்தை உருவாக்கிய 10 வெற்றிகரமான தொழிலதிபர்களை பட்டியலிடுகிறது.
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, வளர்ச்சி காண்பதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் கொண்டுள்ள ஆர்வமே முக்கியம் என்பதை இந்திய வர்த்தகங்கள் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றன.
இதை உணர்த்தும் வகையில், சிறிய நகரங்களில் இருந்து செயல்பட்டு, பல கோடி வர்த்தகத்தை உருவாக்கிய 10 வெற்றிகரமான தொழிலதிபர்களை எஸ்.எம்..பி ஸ்டோரி பட்டியலிடுகிறது.
ஜி.பி.சுந்தரராஜன், பி.செளந்திரராஜன் – சுகுணா ஃபுட்ஸ்
ஜி.பி.சுந்தரராஜன் மற்றும் பி.செளந்திரராஜன் முறையான கல்லூரி கல்வி பெறவில்லை. 1978ல் பள்ளிப் படிப்பை முடித்ததும், செளந்திரராஜனிடம் அவரது தந்தை பங்காருசாமி சொந்தமாக ஏதேனும் செய்யுமாறு கூறினார். குடும்பத்திடம் 20 ஏக்கர் விவசாய நிலம் இருந்ததால், செளந்திரராஜன் காய்கறி பயிரிடுவதில் ஈடுபட தீர்மானித்தார்.
குடும்பத்தின் நிதி உதவியுடன் மூண்று ஆண்டுகள் இதை செய்தார். ஆனால், லாபம் ஈட்ட முடியவில்லை. எனினும், சொந்தமாக செயல்பட வேண்டும் எனும் கனவு மட்டும் மாறவில்லை. 1986ல் இது மாறியது. சகோதரர்கள் இணைந்து கோவையில் சுகுணா ஃபுட்ஸ் எனும் பெயரில் சிறிய அளவில் கோழிப்பண்ணை நிறுவனத்தைத் துவக்கினர். இதன் மூலம், கோழிப்பண்ணை தொடர்பான கருவிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள், தீவணங்களை மற்ற கோழிப் பண்ணைகளுக்கு வழங்கினர்.
மூன்றாண்டுகள் வர்த்தகம் செய்த பிறகு, கடன் கிடைப்பதில் இருந்த சிக்கல் காரணமாக பல விவசாயிகள் வேளாண்மையை கைவிடுவதை உணர்ந்தனர். வங்கிக் கடன் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால், பலரும் தனியார் கடனை நாடினர். ஆனால் வருமானம் சீராக இருக்கவில்லை.
இந்த நிலையில் தான் சகோதரர்கள் ஒப்பந்த பண்ணை முறையை யோசித்தனர். இந்த முறையில் இடைத்தரகர் இல்லாமல், வேளாண் நடவடிக்கைகள் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் இடையே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறை மூலம், சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் 40,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலையான வருமானம் அளிக்கிறது. தரமான கோழிக்கறி மற்றும் தொடர்புடைய பொருட்களுக்காக அறியப்படும் நிறுவனம், நாடு முழுவதும் 66 தீவண ஆலையையும் நடத்துகிறது.
காலப்போக்கில் நிறுவனம், பால் பொருட்கள் (Suguna Dairy Products Pvt.. Ltd.), நீதி (Suguna FinCorp Pvt. Ltd.), மற்றும் உற்பத்தியில் (Globion India Pvt. Ltd. விரிவாக்கம் செய்துள்ளது. இருப்பினும் குழுமத்தில் 97 சதவீத வருமானம் கோழிப்பண்ணை வர்த்தகம் மூலம் வருகிறது. கென்யா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
ஹேமந்த் ஜலான் – இண்டிகோ பெயிண்ட்ஸ்
வேதியல் பொறியாளரான ஹேமந்த் ஜலானின் ஆரம்ப காலம், தொழில்முனைவோராக துவங்கிய போது அவரது வாழ்க்கையில் இருந்து வேறுபட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையின் தமிழகப் பிரிவுக்கு தலைமை வகித்தவர், வர்த்தக சந்திப்புகளுக்கு தனி விமானங்களில் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆனால் சொந்தமாக தொழில் துவங்கிய பிறகு, அவர் இரண்டாம் வகுப்பு ஏசி ரெயில் பெட்டியில் செல்லத்துவங்கினார்.
ஒரு லட்சம் முதலீட்டில் 2,000ம் ஆண்டு துவக்கப்பட்ட’Indigo Paints' நிறுவனம் சிறிய அளவில் துவங்கியது. எந்த மூலதன முதலீடும் இல்லாமல் நிறுவனத்தை துவக்கியதாக அவர் கூறுகிறார். பாட்னாவில் இருந்த சிறிய ரசாயன ஆலை மற்றும் ஜோத்பூரில் இருந்த தொழில் கூடம் ஆரம்ப நாட்களில் நிறுவனத்திற்கான அடித்தளமாக இருந்தன.
“கீழ் மட்டத்தில் இருந்த சிமெண்ட் பெயிண்ட் தயாரிப்பில் துவங்கி, மெல்ல வெளிப்புற எமல்ஷன், உள்புற எமல்ஷன் உள்ளிட்ட, தண்ணீர் சார்ந்த பெயிண்ட் ரகங்களுக்கு விரிவாக்கம் செய்தோம். நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து எங்கள் வீச்சை அதிகமாக்கினோம்," என்கிறார் ஹேமந்த்.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்பட்டதன் மூலம், நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. புனேவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம், 2020ல் ரூ.625 கோடி வருவாய் ஈட்டி, ரூ.48 கோடி நிகர லாபம் ஈட்டியது.
தாமோதரசாமி நாயுடு (அன்னபூர்ணா மசாலாஸ்)
கோவையைச்சேர்ந்த டாக்டர்.தாமோதரசாமி நாயுடு, 1975ல் சிறிய சங்கிலித்தொடர் ஓட்டல்களை நடத்திக்கொண்டிருந்த போது, மசாலா பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட தீர்மானித்தார். உள்ளூரில் பொருட்களை கொள்முதல் செய்து, கோவையில் சிறிய ஆலையில் மசாலா தயாரித்து அவற்றை ஓட்டல்களுக்கு அன்னபூரணா மசாலாஸ் மூலம் விற்கத் துவங்கினார்.
இரண்டு வர்த்தகமும் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் 1980-களில் குடும்ப உறுப்பினர் வேலுமணு வர்த்தகத்திற்கு பொறுப்பேற்றார். 45 ஆண்டுகளாக நிறுவனம் ஓட்டல்களுக்கு மசாலா பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், 2019ல் வேலுமணியின் மகன் விஜய் பிரசாத் பொறுப்பேற்ற பின்னர், வர்த்தகத்தில் பெரிய மாற்றம் உண்டானது. ரீபிராண்ட் செய்து, 12 தேசிய பிராந்திய சுவைகள், பிரியாணி வகைகள் மற்றும் தமிழக வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
2019ம் ஆண்டில் நிறுவனம் ரூ.35 கோடி வருவாய் ஈட்டியது. 2020ம் ஆண்டு ரூ.42 கோடி வருவாய் ஈட்டியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.200 கோடியை எட்ட இலக்கு கொண்டுள்ளது.
மனோஜ் கியான்சந்தானி – ரெட் சீஃப்
மனோஜ் கியான்சந்தானி, இளம் வயதில் லெதர் ஷூ ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டார். 1995ல் அவர் லீயான் குலோபர் நிறுவனத்தை ஏற்படுத்தினார். இரண்டு ஆண்டுகளில், இந்திய காலணி சந்தை ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதை உணர்ந்தார்.
இதனால், லெதர் ஏற்றுமதியை கைவிட்டு, சந்தையை ஆய்வு செய்து, ரெட் சீஃப் பிராண்டை 1997ல் அறிமுகம் செய்தார். துவக்கத்தில் கான்பூரில் கவனம் செலுத்தத் தீர்மானித்தார். நகரில் உள்ள பல பிராண்ட் கடைகளில் தனது பிராண்ட் பொருட்களை விற்பனை செய்தார். 2010 வரை இது தொடர்ந்த நிலையில் நிறுவனம் மற்ற மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்தது.
2011ல் ரெட் சீஃப் பிராண்டிற்கான முதல் பிரத்யேக ஷோரூம் கான்பூரில் நிறுவப்பட்டது. இன்று, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 175 விற்பனை நிலையங்களை நிறுவனம் கொண்டுள்ளது. மேலும்,
3,000 பல பிராண்ட் விற்பனை நிலையங்களிலும் இடம்பெற்றுள்ளது. நிறுவனம், ரூ.324 கோடி ஆண்டு விற்றுமுதல் கொண்டுள்ளது.
ஜெய் அகர்வால், அனுஜ் அகர்வால் – Gyan Diary
லக்னோவில் 2005ல் ஜெய் அகர்வால் தனது குடும்பத்தொழிலான புகையிலை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது, சகோதரர் அனுஜ் அகர்வால் அவருடன் இணைந்தார். புகையிலை வர்த்தகத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பில்லததால் சகோதரர்கள், புதிய வாய்ப்புகளை தேடினர்.
“நாங்கள் பாதி கிராமப்புறத்தில் வசித்தோம். புகையிலை வர்த்தகத்திற்கு கடின உழைப்ப்போ உள்கட்டமைப்போ தேவையில்லை. மேலும் தொழில்முறை அல்லது சமூக வளர்ச்சி சாத்தியம் இல்லை. நாங்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். அதிக வளர்ச்சி சாத்தியம் இல்லை என என் சகோதரர் உணர்ந்த போது புதிய வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கத் துவங்கினோம்,” என்கிறார் ஜெய் அகர்வால்.
சில ஆண்டுகள் ரியல் எஸ்டேட்டில் முயற்சித்தனர். ஆனால் ஒரு பழைய ரியல் எஸ்டேட் முதலீடு மாற்றத்தை தந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருந்த மூடப்பட்ட பால் பண்ணையை மீண்டும் சீரமைத்து கியான் டைரி நிறுவனத்தை 2007ல் துவக்கினர்.
லக்னோவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம், பால், தயிர் மற்றும் பால் பொருட்களை தயாரித்து வருகிறது. உத்திர பிரதேசத்தில் 27 வகை பால் பொருட்களை விற்பனை செய்கிறது. அண்மையில் கான்பூரில் பிராண்ட் துவக்கத்திற்கு பாலிவுட் நடிகர் மனோஜ் பாய்பாயை நாடியது. வடமாநிலங்களில் 53 இடங்களில் கியான் பிரெஷ் ஸ்டோர்ஸ்களையும் நடத்தி வருகிறது. கடந்த அண்டு ரூ.908 கோடி விற்றுமுதல் ஈட்டியது.
சஞ்சீவ் பாஃப்னா – சேவா குழுமம்
வர்த்தகத்தில் சரியான நகர்வுகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம். சஞ்சீவ் பாஃப்னா இதை நன்கறிந்துள்ளார். 1980 களில் இழைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தவர், அந்தத் துறையில் இருந்து வெளியேற தீர்மானித்தார்.
“உற்பத்தி மூலதனம் சார்ந்தது மற்றும் அதிக மூலதனம் தேவைப்படுவது; என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்கிறார் அவரது மகன் ஆதித்யா பாஃப்னா. எனவே, சஞ்சீவ் முன்னணி கார் நிறுவனங்களின் டீலர்ஷிப்பை நாடினார். இப்படி தான் நாசீக்கைச்சேர்ந்த சேவை குழுமம் உண்டானது.”
தற்போது குழுமம், மாருதி கார்களுக்காக சேவா ஆட்டோமேட்டிவ், ஹோண்டா வாகனங்களுக்காக ருஷப் ஹோண்டா மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவன தயாரிப்புகளுக்கான எலிமெண்ட் ரிடைல் ஆகிய நிறுவனங்களை கொண்டுள்ளது.
சேவா ஆட்டோமேட்டிவ் 32 பனிமனை மற்றும் ஷோரூம்களை கொண்டுள்ளது. மாருதி கார்களுக்காக 13 டீலர்ஷிப் கொண்டுள்ளது. ஹோண்டா இரு சக்கர வாகனங்களுக்காக ஒரு ஷோரூம் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் எட்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
2020 ஆண்டில் குழுமம் ரூ.800 கோடி விற்றுமுதல் ஈட்டியது.
அனுஜ் முந்த்ரா- ஜெய்பூர் குர்தி
அனுஜ் முந்த்ரா ஜெய்பூரில் புடவை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து மாதம் ரூ.1,400 சம்பாதித்தார். இந்த வருமானத்தில் தாக்கு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தார். 2003ல் வேலையை விட்டு விலகியவர், சூட்களை விற்கத்துவங்கினார். சூட்களை வாங்கி மற்ற கடைக்கார்களுக்கு விற்று வந்தார். பின்னர் ஜெர்பூரில் சொந்தமாக ஸ்கிரீன்பிரிண்டிங் துவக்கினார்.
2012ல் தில்லி வந்த போது, இ-காமர்ஸ் நிறுவனங்களின் பெரிய விளம்பர பலகைகளை பார்த்தார். மின்வணிகம் தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணர்ந்தார்.
ஜெய்பூர் திரும்பியவர் நிறுவன பதிவு பற்றி விசாரித்தார். 2012ல் நந்தானி கிரியேஷன் நிறுவனத்தைத் துவக்கினார். அதிலிருந்து Jaipurkurti.com இகாமர்ஸ் நிறுவனத்தை துவக்கினார்.
முதல் ஆண்டு ரூ.59 லட்சம்விற்றுமுதல் கிடைத்தது. இன்று நிறுவனம் சூட்கள், குர்திகள், ஆடை ரகங்களை விற்பனை செய்கிறது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. கடந்த ஆண்டு ரூ.43.7 கோடி விற்றுமுதல் ஈட்டியது. ரூ.100 கோடியை 2023 அடைய திட்டமிட்டுள்ளது.
எம்பி.அகமது – மலபார் கோல்டு
வணிகர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த எம்பி.அகமது 20 வயதில் 1979ல் வாசனை பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். கோழிக்கோட்டில் ஏலக்காய், மிளகு போன்றவற்றை விற்பனை செய்தார். இருப்பினும், வர்த்தகத்தில் பெரிதாக வளர முடியாது என உணர்ந்தார்.
சந்தையில் ஆய்வு செய்தவர், நகை தொழில் தான் அமைப்பு சாராமல் இருப்பதை உணர்ந்தார். இதனையடுத்து தனது சொந்த ஊரான மலபாரில் நகை நிறுவனத்தை துவக்கினார். இருப்பினும் அவரிடம் போதிய நிதி இல்லை.
“எனது உறவினர்களிடம் இது பற்றி பேசினேன். ஏழு பேர் இதில் ஆர்வம் காட்டினர். ஆனால் அவர்களுக்கும் நிதி நெருக்கடி இருந்தது. எனவே, சொத்தை விற்று ரூ.50 லட்சம் பெற்று தொழில் துவங்கினோம். இப்படி தான் அவர்கள் முதல் முதலீட்டாளர்களாகவும், மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் அடித்தளமாகவும் அமைந்தனர்,” என்கிறார் அகமது.
1993ல் கோழிக்கோட்டில் 400 சதுர அடி பரப்பிலான கடையில் நிறுவனம் துவங்கியது. அகமது தங்க கட்டிகள் வாங்கி பொற்கொல்லர்கள் கொண்டு நகை செய்து விற்பனை செய்தார். புதிய வடிவமைப்புகளால் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டனர்.
குறுகிய காலத்தில் நிறுவனம் வேறு சிறிய நகரங்களில் விரிவாக்கம் செய்தது. 1995ல் அகமது பழைய கடை இருந்த இடத்தில் 4,000 சதுர அடியில் ‘மலபார் கோல்ட்ஸ்’ புதிய கடையை அமைத்தார். இப்போது நிறுவனம் ரூ.27,000 கோடி விற்றுமுதல் கொண்டதாக வளர்ந்துள்ளது.
டாக்டர். அஜய் முர்டியா- Indira IVF
1988 ல் டாக்டர். அஜய் முர்டியா, ராஜஸ்தானின் உதய்பூரில் கையில் இருந்த ரூ.5,000 ல். கருத்தரிப்பு கிளினிக்கை துவக்கினார். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனும் வழக்கத்தை கொண்டு வந்தார். இதே நேரத்தில், உதய்புரில் இந்தியாவின் முதல் விந்து வங்கிகளை ஒன்றையும் துவக்கி டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பின்னர், தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்த நிலையில், அவரது மகன்கள் கிஷ்டின் முர்டியா மற்றும் நிதிஸ் முர்டியாவும் இதில் இணைந்து கொண்டனர். இந்திரா ஐவிஎப் எனும் பெயரில் செயல்படத்துவங்கினர்.
“என் தந்தை கருத்தரிப்பு சிகிச்சை மையத்தை துவக்கிய போது சமூகத்தில் வரவேற்பு இல்லை. ஆண் மலட்டுத்தன்மை பற்றி பேச யாரும் தயாராக இல்லை. ஆனால், அவர் ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்த போது நிலைமை மாறியது,” என்கிறார் கிஷ்டிஸ் முர்டியா.
நிறுவனம் இன்று 93 மையங்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது. ரூ.850 கோடி விற்றுமுதல் ஈட்டுகிறது.
ஓ.பி. முன்ஜால் - ஹிரோ சைக்கிள்ஸ்
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனர் மறைந்த ஓ.பி. முன்ஜால் உள்ளூரில் தயாரித்த சைக்கிள் மூலம் எண்ணற்ற இந்திய குழந்தைகள் வாழ்க்கை தொட்டிருக்கிறார்.
ஹீரோ சைக்கிள்ஸ் 1956ல் லூதியானாவில் துவங்கப்பட்டது. அப்போது தேசமே ஒரு இளம் குழந்தை போல இருந்தது. அந்த நேரத்தில் ஹீரோ சைக்கிள்ஸ் சரியான வசதியை வழங்கியது.
சிறிய அளவில் துவங்கிய நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஒற்றை சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்தது. நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 5 மில்லியன் சைக்கிள்களை உற்பத்தி செய்கிறது.
இதன் முதன்மை ஆலை லூதியானாவில் உள்ளது. ஜெர்மனி, போலந்து, ஆப்ரிக்கா உள்ளிட்ட 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஹீரோ மோட்டார்ஸ் அங்கமான நிறுவனம் பங்கஜ் முஞ்சாலால் வழி நடத்தப்படுகிறது. அவரது மகன் அபிஷேக் நிறுவன இயக்குனராக இருக்கிறார்.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்