லாக்டவுனால் சம்பளம் இல்லை: ’காபி ரெடி’ தொடங்கி 4 மாதத்தில், 7 கடைகள்; மாதம் 3 லட்சம் ஈட்டும் கோவை சத்யன்!
கொரோனா லாக்டவுன் சமயத்தில், நட்சத்திர ஹோட்டலில் பணி முடங்கிப்போனதாலும், 6 மாத காலம் சம்பளம் இன்றி குடும்பத்தோடு தவித்ததாலும் கோவையைச் சேர்ந்த சத்யன் தொடங்கிய காபி ப்ராண்ட் இன்று பல கிளைகளுடன் வேக வளர்ச்சி அடைந்துள்ளது.
தொழில்முனைவர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் அந்த முடிவை எடுப்பார்கள் என்று பல தொழில்முனைவர்கள் கதைகளின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறோம். நல்ல வேலை, சம்பளம் இருக்கும் சிலர், அதை திடீரென விட்டு தொழில் தொடங்குவதும், வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படும் போது அப்போது தொழில் தொடங்குவது என பலவகையில் முடிவுகளை எடுக்க பலர் தள்ளப்படுகிறார்கள்.
சிலசமயம் நல்ல வேலை, நல்ல சம்பளம் இருப்பதால் தொழில் தொடங்க நேரம் இருப்பதில்லை. ஆனால் அதே வேலைக்கு சிக்கல், என வரும்போது ரிஸ்க் எடுக்கும் குணம் பலரிடையே தானாக வந்துவிடுகிறது.
அப்படி இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில், பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணி முடங்கிப்போனதாலும், 6 மாத காலம் சம்பளம் இன்றி குடும்பத்தோடு தவித்ததாலும் கோவையைச் சேர்ந்த சத்யன் தொழில்முனைவராகும் முடிவை எடுக்க முக்கியக்காரணமாக அமைந்தது.
தனக்கு தெரிந்த உணவுத்துறையில் தொழில் தொடங்கியதால் என்னமோ அவர் தொடங்கிய காபி ப்ராண்ட் ஒருசில மாதங்களிலேயே வேகமான வளர்ச்சியையும், நல்ல வருவாயையும் ஈட்டத்தொடங்கியது.
சரி சத்யன் பகிர்ந்த அவரது தொழில்முனைவு முயற்சியின் கதையை பார்க்கலாம்...
சத்யன் பாலமாணிக்கம் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் டிப்ளமோ படிப்பும் எம்பிஏ-வும் முடித்துள்ளார். சில்லறை வர்த்தக மேலாண்மை, உணவு மற்றும் பானங்கள் ஆகிய பிரிவில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர்.
ஜிஆர்டி ஹோட்டல்ஸ், தாஜ் குழுமத்தின் ஹோட்டல்கள், கேஎஃப்சி, எஸ்பிஐ சினிமாஸ், ஹாஷ் சிக்ஸ் ஹோட்டல்கள் போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளார்.
“ஹோட்டல் துறையில் பணியாற்றினேன். எனக்கு ஆரம்பத்தில் விருந்தோம்பல், வாடிக்கையாளர் மேலாண்மை, ஹோட்டல் சேவைகளை நிர்வகித்தல் போன்றவற்றில் அனுபவம் கிடைத்தது. பின்னர் மேலாண்மை பிரிவில் மேற்படிப்பு படிக்க விரும்பி எம்பிஏ முடித்தேன். இதன் மூலம் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தில் செயல்பாட்டுத் தலைவர் பொறுப்பு கிடைத்தது,” என்கிறார் சத்யன்.
பலர் உணவகங்கள் திறந்து தொழில்முனைவில் ஈடுபடுவதைக் கண்டார். இவருக்கும் உணவுத் துறையில் சொந்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இந்த ஆர்வத்தை மேலும் ஊக்குவித்தது. லாக்டவுன் சமயத்தில் பல துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதில் உணவகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளும் அடங்கும்.
வணிக முயற்சியின் தொடக்கம்
கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியதுபோது சத்யன் நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வணிகம் பாதிக்கப்பட்டதால் சத்யனுக்கு சம்பளம் கிடைக்காமல் போனது. இவரது மனைவி கருவுற்றிருந்தார்.
செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் வருவாய் இல்லாமல் போன சமயம் சவாலாக இருந்துள்ளது. துணிந்து ரிஸ்க் எடுக்க இதுவே சரியான தருணம் என்று நினைத்த சத்யன், தனது அனுபவத்தைக் கொண்டு உணவுத் துறையில் தொழில்முனைவில் ஈடுபடத் தீர்மானித்தார். சத்யனின் மனைவியும் அவரது தொழில்முனைவு முயற்சிக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தார்.
“எனக்கு நல்ல நட்பு வட்டம் உண்டு. தொழில்முனைவில் ஈடுபடுவது குறித்து சிந்தித்ததும் என்னுடைய சூழல் குறித்து என் நண்பர் மற்றும் ஆலோசகராக இருக்கும் ராஜேஷிடம் பகிர்ந்துகொண்டேன். இவர் ரீடெயில் துறையில் 20 ஆண்டு கால அனுபவமிக்கவர். ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். நாங்கள் இருவரும் உரையாடியதில் மளிகை வணிகத்தில் ஈடுபடலாம் என முதலில் திட்டமிட்டோம்,” என்று ஆரம்பகட்ட திட்டமிடல் குறித்து சத்யன் பகிர்ந்துகொண்டார்.
கோயமுத்தூர் பகுதியில் இந்த வணிகத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுக்க முடியாமல் போனது. கொரொனா பெருந்தொற்று பரவும் சூழலில் யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
காபி வணிகம்
முதல் திட்டமிடல் வெற்றியடையாத சூழலில் சத்யன் மிகவும் கவலைக்குள்ளானார்.
“நான் கவலையாக இருக்கும்போது காபி கடைக்குச் செல்வேன். நானும் என் நண்பர் ராஜேஷும் ஒருமுறை உள்ளூர் காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் ‘நாம் ஏன் காபி ஷாப் திறக்கக் கூடாது?’ என்று என்னிடம் கேட்டார். எனக்கும் இது நல்ல யோசனையாகவே தோன்றியது,” என்றார் சத்யன்.
கொங்கு மக்கள் காபியை விரும்பிக் குடிப்பார்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். இதைக் கருத்தில் கொண்டு முதல் முறையாக நான்கு வகையான காபி சுவைகளை ஒரே இடத்தில் வழங்கத் திட்டமிட்டார்கள்.
இதன்படி கும்பகோணம், சென்னை, கொங்கு, கூர்க் என நான்கு வெவ்வேறு, தனித்துவமான சுவையில் காபியை வழங்கத் தீர்மானித்தனர். திருமதி. தீபா இந்த வணிக முயற்சியைக் கண்டு உந்துதல் பெற்று காபி வணிகத்தை உலகளவில் கொண்டு சேர்க்க இவர்களுடன் இணைந்துகொண்டார். இப்படித்தான் Kaappi Ready ப்ராண்ட் தொடங்கப்பட்டது.
நிர்வாகக் குழு
சத்யன் ரீடெயில் துறையில் அனுபவமுள்ள நண்பர்களை ஒன்றிணைத்தார். ராஜா ஐயர் – இயக்குநர் – இவர் 20 ஆண்டுகால அனுபவமிக்கவர். செலவுகளை கட்டுப்படுத்தி வருவாயை அதிகரிக்கச் செய்வதில் ஆழ்ந்த அனுபவமிக்கவர். ராஜேஷ் கீர்த்தி – இயக்குநர் & சிஇஓ – 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரீடெயிலில் செயல்பட்ட அனுபவமிக்கவர்.
தீபா - இயக்குநர், சர்வதேச வணிகம் – உலகளவிலான ஏராளமான பிராஜெக்ட்ஸை நிர்வகித்துள்ளார். சத்யன் – இயக்குநர், சிஓஓ – வணிக செயல்பாடுகளை நிர்வகித்தல், வணிக வளர்ச்சி, பிராடக்ட் அறிமுகம், விற்பனையை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் வகுத்தல் போன்றவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். இப்படி ஒரு வலுவான குழுவாக ‘காபி ரெடி’ உருவானது.
வணிக மாதிரி மற்றும் சவால்கள்
ஒரு ஸ்டோருக்கான ஆரம்ப முதலீடு 7-10 லட்ச ரூபாய். Kaappi Ready வணிகச் செயல்பாடுகள் ஃப்ரான்சைஸ் மாதிரியின் அடிப்படையில் செயல்படுகிறது. 20 முதல் 25 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் இவர்களது வணிக மாதிரி அமைந்துள்ளது.
“இந்த கொரோனா சமயத்தில் 3 மாதங்களில் 7 அவுட்லெட்களைத் திறந்துள்ளோம். கோவையில் மேலும் 3 அவுட்லெட்கள் திறக்க உள்ளோம். முதலீட்டாளர்களுக்கு முதலீட்டின் மீதான லாபம் அதிகம் கிடைக்கும் வகையில் எங்கள் வணிக மாதிரி அமைந்துள்ளது. வருவாயை அதிகரிப்பது தொடர்பாக பிரத்யேக நிபுணர் குழு செயல்பட்டு வருகிறது,” என்றார்.
ஸ்டோர் திறக்க சரியான இடத்தைத் தேர்வு செய்வது முக்கியப் பிரச்சனையாக இருந்துள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் பகுதியைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தினார்கள். இதற்காக கடையின் கட்டமைப்பை வடிவமைப்பதற்குக் கூடுதல் நேரம் செலவிட்டுள்ளனர்.
“எங்கள் ஸ்டோர் அனைத்திலும் ஒரே மாதிரியான சூழல், சுவை, தரம் ஆகியவை இருப்பதை உறுதிசெய்தோம். தரத்தில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்வதில்லை. அதேசமயம் சந்தையில் செயல்படும் முக்கிய நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதை உறுதிசெய்கிறோம். நேரடியாக தோட்ட உரிமையாளர்களிடமிருந்து தரமான பொருட்களை வாங்குகிறோம்,” என்றார்.
வாடிக்கையாளர் தொகுப்பு
முதல் அவுட்லெட் திறந்தபோது வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டறிந்து அதற்கேற்ப சுவையை மாற்றியமைக்க திட்டமிட்டார்கள். மக்கள் ஸ்டோருக்கு வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தார்கள்.
“நாங்கள் அரசு வழிகாட்டலின்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். முதல் மாதத்திலேயே எங்கள் வணிகம் லாபகரமாக இருந்தது. எங்கள் காபியை சுவைத்தவர்கள் திருப்தியடைந்து மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தார்கள். இப்படியே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது,” என்கிறார் சத்யன்.
அதிக ஸ்டோர்களைத் திறந்து பலரைச் சென்றடையவேண்டும் என்பதே இவர்களது அடுத்தகட்ட இலக்காக உள்ளது. இந்தக் குழுவினர் டிஜிட்டல் மீடியாக்கள் மூலமாக பிராண்டை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
“எங்கள் தனித்துவமான ஃபில்டர் காபியை சுவைக்க வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். இவையே மேலும் பல அவுட்லெட்களைத் திறக்க ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது,” என்று சத்யன் குறிப்பிடுகிறார்.
வருங்காலத் திட்டம்
தமிழகத்தில் 200-க்கும் அதிகமான அவுட்லெட்கள் திறக்கவும் 1,000-க்கும் மேற்பட்டோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். பகுதி நேரமாக பணிபுரிய கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர்.
“எங்கள் ஸ்டோர்களில் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். என்னைப் பொருத்தவரை முழு கவனத்துடன் கடினமாக உழைத்து சரியான செயலில் ஈடுபட்டால் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்,” என்கிற நம்பிக்கை வரிகளை உதிர்க்கிறார் சத்யன்.