கூடலூர் முதல் கின்னஸ் சாதனை வரை; காய்கறி, பழங்கள் செதுக்கும் கலையில் உலக அளவில் அசத்தும் இளஞ்செழியன்!
வெற்றி பெறும் மனிதர்களை இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைத்து கொண்டாடுவார்கள், ஆனால் ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கு பின் நிறைய போரட்டங்கள், ஏமாற்றங்கள் என சோகக் கதைகள் நிறைந்து இருக்கும். மக்கள் யாரும் அந்த சோகத்தை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
“சில வெற்றிகளை அடையும் போது, அடுத்த முறை வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மட்டுமே அறிய முடியும். பல தோல்விகள் அடையும் போது தான், சாதிப்பதற்கு வெறி உண்டாகும்.”
நான் இளஞ்செழியன், தேனி மாவட்டத்தில் கூடலூர் எனும் கிராமத்தில் தான் பிறந்தது, வளர்த்தது எல்லாம். பள்ளிப் பருவத்தில் ஒரு முறை கூட, எந்த துறையிலும் விருப்பத்தோடு இருந்தது இல்லை. கூட்டத்தில் ஒருத்தனாகவே இருந்தேன், என்று தன்னைப் பற்றி தொடங்கினார் அந்த சாதனையாளர்.
பிறகு ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து படித்த அவர், அந்தப் படிப்பை பொறுத்தவரை அனைத்து பாடத்தையும் பயிற்சி முறையில் தான் பயிலமுடியும், அதனால் அதை சிரமமாக கருதவில்லை என்றார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு படித்ததாக பகிர்ந்தார். இரண்டாம் ஆண்டு, எங்கள் கல்லூரியில் போட்டி ஒன்றை நடத்தினர்,
”நம்ம தான் இப்ப ஒரளவு நன்றாக சமைக்கிறோமே, ஏன் இந்த போட்டியில் பங்கு பெறக் கூடாது என்று என்று எண்ணி அதில் பங்கேற்றேன்.”
போட்டிக்கு தன் பெயரை கொடுத்தப் பிறகு தான் தெரித்தது, அது பழம், காய்கறிகளை அலங்காரத்திற்கு செதுக்கும் (vegetables carving) போட்டி என்று. சரி முயற்சி செய்து பார்க்கலாமே என்று பயிற்சி மேற்கொண்டு, போட்டியில் முழு வீச்சுயுடன் கலந்து கொண்டார் இளஞ்செழியன். அப்போட்டியில் நான் இரண்டாவது பரிசு பெற்றேன்.
“கல்லூரி போட்டியில் வாங்கியது இரண்டாவது பரிசு, என் வாழ்நாளில் நான் வாங்கிய முதல் பரிசு இதுவே,”
என்று பகிர ஆரம்பித்தார். இந்த கலை மேல் அதிக ஆர்வம் அடைத்த அவர், ஆரம்பக்கட்டத்தில் காய்கறிகளில் பூக்கள் செதுக்குவது போன்ற எளிமையாக உருவங்களை மட்டும் செதுக்கி வந்தார். பிறகு நீண்டநாட்கள் பயிற்சி எடுத்து தலைவர்கள், பூக்கள், விலங்குகள் போன்ற எல்லா உருவங்களையும் செதுக்கத் துவங்கினார் இளஞ்செழியன்.
”நான் இவ்வளவு ஈடுபாட்டுடன் இந்த கலையில் என்னை மேம்படுத்திக் கொண்டதற்கு காரணம், எங்கள் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தான். இது போன்ற கலைகள் அயல்நாட்டில் மிகப் பெரிய அளவில் அங்குள்ளவர்களால் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு கலைஞர்களும் மிக பிரம்மாண்டமாக காய்கறிகளில் உருவங்களை செதுக்குவார்கள். அது போன்று இந்தியாவிலும் அந்த கலை வளர வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது. அதிலும் நான் இந்த கலையில் சாதிக்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட ஆசை, அதற்காக என்னிடம் இந்த கலையை பற்றி நிறைய அறிவுரைகள் கூறுவார்.”
அன்றைய காலகட்டத்தில் நான் செய்யும் உருவங்களை போட்டோ எடுக்கக் கூட என்னிடம் கேமரா இல்லை, ஆனால் உருவங்களை செதுக்கி அதனை புகைப்பட நிலையத்திற்கு கொண்டு சென்று, போட்டோ எடுத்துக் கொள்வேன். எனது ஊடக நண்பர்கள் நான் செய்த உருவங்களை பார்த்து பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். அப்படி தான் என் கலை எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கப்பட்டது.
”நான் காய்கறிகளை வெட்டுவதால், என்னை ’வெட்டி’ என்று கேலி செய்து கூப்பிடுவார்கள். சிலர் நான் செய்வது அர்த்தமற்றது, காய்கறிகளை வீண்ணாக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று கேலிச் செய்வார்கள், அதை எதையும் நான் ஏற்றுக்கொள்வது இல்லை.”
அங்கீகாரமும், விருதுகளும்
பொதுவாகவே கலைநயமான விஷயங்களை அதன் அழகை உள்வாங்கி ரசித்து பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் இதுபோன்ற கலைகளை ஒரு சிலரால் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டு ரசிக்க முடியும். நான் இந்த கலையை அதுபோன்ற மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதயே லட்சியமாகக் கொண்டுள்ளேன்.
ஒரு கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு என் கலை உருவங்களை அலங்காரத்திற்காக எடுத்துச் சென்றேன். அப்படி நான் செய்த பிள்ளையார் உருவம் கொண்ட தர்பூசணியை, கடவுளாகவே பாவித்து கை எடுத்து கும்பிட்டுச் சென்றனர் அந்த கிராமத்தினர். இதுவே எனக்குக் கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்று கருதுகிறேன்.
திருமண விழாவில் பழங்களை செதுக்கி அலங்காரத்திற்கு வைப்பதற்கு காரணம், அதை பார்க்கும் மக்கள் தங்கள் கஷ்டங்களை மறந்து மணமக்களை மனசார வாழ்த்துவதற்கு.
மேலும், 2010-ம் ஆண்டில் நடந்த உலக செம்மொழி மாநாட்டில் காய்கறிகளில் செதுக்கிய உருவங்களை காட்சிப் படுத்த, இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் கைவண்ணத்தைப் பார்த்த கலைஞர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் இவரை பாராட்டியுள்ளார்.
பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் பூக்கள் கண்காட்சிகளிலும், வருடா வருடம் இவர் செதுக்கும் உருவங்கள் இடம் பெற தவறுவதில்லை.
மாற்றுத்திறனாளிகளும், இந்த கலையை கற்றுக் கொண்டு சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக, கண்களை கட்டிக் கொண்டு, வாயை பயன்படுத்தி காய்கனிகளில் உருவங்களை செதுக்குவேன். இதனை பல உலக நாடுகள் வியத்து பார்த்ததாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.
கின்னஸ் உலக சாதனை
ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டு இருக்கும் இளஞ்செழியன், நண்பர்களுடன் இணைந்து நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வார். கிருஷ்ணகிரி சாமியார்கள் தலைமையில் உலக அமைதிக்காக சுமார் 8500 கிலோ மதிப்பிற்குரிய காய்கறிகளிலும் பழங்களிலும், கின்னஸ் லோகோவை செதுக்கி சாதனை படைத்துள்ளார். இதை புது முயற்சியாகக் கருதி கின்னஸ் உலக சாதனை பட்டம் இவருக்கு கிடைத்தது.
இந்த சந்தோஷமான செய்தியை என் வீட்டினருக்கு தெரிவிக்க முயன்றபோது அந்த சோகச் செய்தி அவர் வீட்டினர் அவரிடம் தெரிவித்தனர். அவரின் தந்தைக்கு கேன்சர் இருப்பது மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட அந்த செய்தியால் கலங்கி நின்றார். ஒரு வருடம் கழித்து தந்தை இறந்தும் போனார் என்று பகிர்ந்தார்.
”காலங்கள் மாறியது மீண்டும் புது உத்வேகத்துடன் பயணத்தை துவங்கினேன். இன்று இந்த கலை மேல் ஆர்வம் உடைய மாணவர்களுக்கு ’யாழ் காய்கனி சிற்ப கலையகம்’ என்ற பெயரில் பயிற்சி மையம் தொடங்கி பயிற்சி அளித்து வருகிறேன்.”
சாதிக்க நினைக்கு இளைஞர்களுக்கு நான் கூற நினைப்பது என்னவென்றால்,
வாழ்க்கை எனும் பள்ளிக்கூடம், ஆம், வாழ்க்கையை படிக்கும் இடம்
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு அனுபவங்கள், இந்த அனுபவங்கள் ஏதோ ஒன்றை சொல்லி கொடுக்கின்றன...
இவ்வாறு இந்த அனுபவங்கள், இந்த உலகில் நமக்கு ஏதோ ஒன்றை அறிவிக்கின்றன,
நாம் நம்மை சரி செய்து கொள்ள, சூழலுக்கு எற்றபடி வாழவும் கற்பிக்கின்றது,
இவ்வாறு நல் அனுபவங்களை பெறும் போது நமது பிழைகள் நமக்கு தெரிகின்றன
நாம் அனுபவங்கள் ஊடாகக் கற்கிறோம், இவையே நம் அனுபவங்கள்,
ஒருவன் அனுபவங்களை பெறும் போது, அவன் சமூகத்தில் எல்லோரும் அறிந்த பிரஜை ஆகிறான்.
அனுபவங்கள் ஒரு முழு மனிதனை உருவாக்குகின்றது. எனவே, அனுபவங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.
போராட்டம் இன்றி வாழ்க்கையில் சாதிக்க முடியாது. போரட்டமும் கடந்து போகும்...