ஆசிட் வீச்சுக்கு எதிராக போராடும் ‘லட்சுமி’ ஆக மாறிய தீபிகா படுகோன்!
காதலை மறுத்த காரணத்துக்காக 15 வயதில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி தன் அழகான முகத்தை இழந்த லட்சுமி அகர்வால் கதை ஹிந்தி திரைப்படமாக வெளிவருகிறது.
காதலை மறுத்த காரணத்துக்காக 15 வயதில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி தன் அழகான முகத்தை இழந்தவர் லட்சுமி அகர்வால். ஆனால், தன் அழகான அதே சமயம் உறுதியான மனதால், இனி நாட்டில் ஆசிட் தாக்குதலே நடைபெறக் கூடாது என நினைத்தார் அகர்வால்.
தான் பட்ட துயரத்தை இனி வேறு எந்தப் பெண்களும் படக்கூடாது என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில், வெற்றியும் பெற்றார். உலகம் முழுவதும் பிரபலமான லட்சுமியின் வாழ்க்கை வரலாறு ’சபாக்’ என்ற பெயரில் ஹிந்தி படமாகத் தயாராகி வருகிறது. இதில் லட்சுமியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான உடல் ரீதியான, மன ரீதியான வன்முறைகள் இன்றளவும் நீடித்துத் தான் வருகின்றன. ஒரு பெண்ணின் உடலை விமர்சித்தால், துன்புறுத்தினால் அவர் மனரீதியாக பலமிழந்து போவார் என்பது பல கோழைகளின் எண்ணம். அதேபோல், ஒரு பெண்ணை பழி வாங்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதமும் அவர்களின் உடல் தான். பெண்ணின் உடலை ஆசிட் வீசித் தாக்குவது, அவரது நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது என பல்வேறு ஆயுதங்களை அவர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
இதில் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியிட்டு தன் முன்னாள் காதலியை அல்லது மனைவியை பழி வாங்குவது ஒரு ரகம் என்றால், தன்னை காதலிக்க மறுத்த, திருமணம் செய்ய மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்துவது மற்றொரு ரகம். இந்த அழகான முகம் தந்த திமிரில் தான் தன் காதலை அவர்கள் ஏற்கவில்லை எனக் கருதும் ஆண்கள், அப்பெண்ணின் உடலுக்குள் இருக்கும் அழகிய மனதைப் பார்ப்பதே இல்லை.
ஆனால், ‘நீ ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தினால், நான் தோற்றுப் போய் முடங்கி விட மாட்டேன்’ தன் போராட்ட குணத்தால் இன்று தன்னம்பிக்கையின் அடையாளம் ஆகி இருக்கிறார் லட்சுமி அகர்வால்.

லட்சுமி அகர்வால் கதாப்பாத்திரத்தில் தீபிகா படுகோன் (இடது), லட்சுமி அகர்வால் (வலது)
1990ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் லட்சுமி அகர்வால். வீட்டின் மூத்த பெண்ணாக அவள் பிறந்த போது, அவரது பெற்றோருக்கு தங்குவதற்கு ஒரு வீடுகூட கிடையாது. கன மழையில் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தான் பிறந்து நான்கு நாட்களே ஆன லட்சுமியுடன் அவரது பெற்றோர் தஞ்சம் புகுந்திருந்தனர். தன் அழகு தேவதை மகளும், மனைவி ராதாவும் மழையில் நனைந்துவிடக் கூடாது என தானே குடையாக மாறினார் முன்னா லால்.
சமையல்காரரான முன்னா, லட்சுமியையும் அவரது தம்பி ராகுலையும் பாசத்தைக் கொட்டி வளர்த்தார். முன்னாவின் வருமானம் குடும்பத்தின் சாப்பாட்டுக்கே சரியாக இருந்தது. ஆனாலும் தேவதைக் கதைகளில் ஆர்வம் கொண்டவராக, தன்னை சிண்ட்ரெல்லாவாக கற்பனை செய்து கொண்டே வளர்ந்தார் லட்சுமி. கந்தல் உடையிலும் அவர் தேவதையாகவே தோன்றினார். சினிமாவில் வரும் காதல் பாட்டுகளைக் கேட்டு, ஆடிப்பாடிய படி பருவவயது கனவுகளுடன் அவர் வளர்ந்தார்.
அழகான முகத்தைப் போலவே அவரது குரலும் இனிமையாக இருந்தது. அதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடினார். இதனால் தன் தோழியர் வட்டத்தில் பிரபலமானார் லட்சுமி. தனது அழகே தனக்கு எமனாகும் என அப்போது அவர் நினைத்திருக்கவில்லை.
2005ம் ஆண்டு அவரது தோழியின் காதலரின் சகோதரன் குட்டு என்கிற நஹிம் கான், லட்சுமியைக் காதலிக்கத் தொடங்கினார். 15 வயதேயான லட்சுமிக்கு, 32 வயது குட்டுவைப் பிடிக்கவில்லை. இதனால் அவனை வெறுத்து ஒதுக்கினார். ஆனாலும், லட்சுமிக்கு நேரிலும், போனிலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்தார் குட்டு. ஆனால் எதற்கும் லட்சுமி மசியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த குட்டு, லட்சுமியை பழி வாங்க முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், டெல்லியின் கான் மார்க்கெட் பகுதியில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த லட்சுமியை நேரில் பார்க்க ராக்கி என்ற பெண்ணுடன் வந்தான் குட்டு. வந்தவன் லஷ்மியை நெருங்கி, அவளைக் கீழே தள்ளிவிட்டான். பின் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, அதனை லட்சுமியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஊற்றினான்.
என்ன நடக்கிறது என்பதை லட்சுமி உணர்வதற்கு முன்னதாகவே, ஆசிட்டை அவன் ஊற்றி விட்டான். பயத்தில் தன் முகத்தை மூடிக் கொண்டதால் அவரது கண்கள் மட்டுமே தப்பித்தது. மற்றபடி, முகமும் உடலில் பல பகுதிகளும் கருகிப்போயின. வலியில் துடித்த லட்சுமிக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
உதவி கேட்டுக் கதறிய சக மனுஷியைக் கண்டு பதறி, விலகி ஓடி வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மேல் தோலும் உட்புறத் தோலும் சதையும் கருகும் வாடை. லஷ்மியின் காது மடல்கள் உருகிக் கரைந்தன.
அப்போது ஒரு அரசியல்வாதியினால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லட்சுமி. ஆனால், நேரம் கடந்து விட்டதால் அவரது உடல் ஆசிட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும், தொடர் சிகிச்சையும், பல அறுவைச் சிகிச்சைகளும் லட்சுமிக்கு மேற்கொள்ளப்பட்டது. 10 வார கால சிகிச்சையில் அவர் மெல்ல மெல்ல உடல் நலம் தேறினார். இந்த காலக்கட்டத்தில் அவர் கையில் கண்ணாடி மட்டும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.

Image courtesy : India times
உடல் நலம் சற்று தேறியதால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் லட்சுமி. அப்போது தான் அவரது கையில் கண்ணாடி கிடைத்தது. தன் முகத்தைப் பார்க்க அவருக்கே அச்சம் எற்பட்டது. இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். தன் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவருக்கு உண்டானது. தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால், காலம் அவர் உயிரை எடுக்கவில்லை.
பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிய அவர், வெளியில் செல்லும் போது பர்தாவால் தன் உடலை மறைத்துக் கொண்டார். ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. ஆனால், அந்த எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் அவரது தந்தை முன்னா.
அப்போது தான் லட்சுமி 'நான் மட்டும் அல்ல. என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும். இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ என முடிவெடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக 2006-ம் ஆண்டு அபர்ணா பட் என்கிற வழக்கறிஞர் உதவியுடன், ரூபா என்கிற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில், ‘ஆசிட் விற்பனையை கடும் கட்டுப்பாடுகளுடன் அரசு முறைப்படுத்த வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்கள் அனுபவிக்கும் சித்ரவதை என்பது வாழ்நாளுக்கானது. ஆசிட் வீச்சு குற்றத்தை கடும் குற்றமாகக் கருதி தண்டனையை அதிகப்படுத்தும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இந்த வழக்குக்காக லட்சுமி அலைந்து கொண்டிருந்த போதே, அவருக்கு அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சைகளும் நடைபெற்றன. இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் இருந்து தோலை எடுத்து முகம் மற்றும் பிற பகுதிகளை ஓரளவுக்குச் சீரமைத்தார்கள். அறுவைச் சிகிச்சைகள் தந்த வலிகளுக்கு இடையேயும், தன்னைப் போல் இனி யாரும் இந்த வலியை அனுபவிக்கக்கூடாது என நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தார் லட்சுமி.
அதோடு, மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இடைப்பட்ட காலத்தில் தையல் கலை, அழகுக் கலை, கம்ப்யூட்டர் கோர்ஸ் என எப்போதுமே தன்னை பிசியாக வைத்துக் கொண்டார். ஆனால் யாருமே லட்சுமிக்கு வேலை தர சம்மதிக்கவில்லை. இதனால், தனக்கான அடையாளத்தை தேடத் தொடங்கினார் அவர்.
தொடர் பிரச்சினைகளால் அவரது மனம் பக்குவப்பட்டது. ’யாரோ செய்த தவறுக்காக நான் ஏன் என் முகத்தை மறைத்துக்கொண்டு வாழ வேண்டும்? இந்த முகமே இனி என் அடையாளம். இதுதான் என் போராட்டத்தை வலிமையாக்கும் ஒரே அடையாளம்’ என அவர் முடிவெடுத்தார்.
ஆனாலும், தொடர்ந்து சோதனைகள் அவரைத் தாக்கிக் கொண்டே தான் இருந்தது. லட்சுமியின் தம்பி ராகுல் காசநோயால் பாதிக்கப்பட்டார். மகளுக்காகவும், மகனுக்காகவும் ஓடி ஓடி உழைத்ததால், 2012ம் ஆண்டு முன்னா லால், தனது 45 வயதிலேயே மாரடைப்பால் காலமானார். தனக்கு பெரும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்த தந்தையின் இழப்பால் உடைந்து போனார் லட்சுமி. அப்போது தான், அவருக்கு நண்பரானார் அலோக் தீட்ஷித்.
பத்திரிகையாளரான அவர் சமூக ஆர்வலரும் கூட. ‘Stop Acid Attacks’ என்ற இணையவழிப் போராட்டத்தைத் தொடங்கியிருந்த அலோக், லட்சுமியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
'ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும், ஆசிட் விற்பனையைத் தடைசெய்யவும், குற்றவாளிக்குக் கடும் தண்டனைகள் வழங்கவும் புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும்’ என Stop Acid Attacks அமைப்பினர் இணையத்தின் மூலம் 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கினர். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் காரை மறித்து அவரிடமே கையெழுத்துப் பெற்றனர்.
லட்சுமி மற்றும் அவரது அமைப்பினரின் கடும் உழைப்பால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆசிட் வீச்சும் குற்றமாக அறிவிக்கப்பட்டது. 'ஆசிட் வீசுவோரை எதிர்த்து பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது தற்காப்பாகக் கருதப்படும். குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே லட்சுமி தொடுத்திருந்த பொதுநல வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. புகைப்படத்துடன்கூடிய அரசு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட்டை விற்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எந்தக் காரணம்கொண்டும் ஆசிட் விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதோடு, ஆசிட் வீச்சுக் குற்றத்தில் ஈடுபட்ட நபரை, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவில் கைதுசெய்ய வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு மாநில அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவுகள் பல இடங்களில் இன்னமும் முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை. தொடர்ந்து இதற்காக அலோக்குடன் சேர்ந்து லட்சுமி இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
இதற்கிடையே லட்சுமி மீது ஆசிட் வீசிய குட்டுவுக்கு 10 ஆண்டுகளும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ராக்கிக்கு ஏழு ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கைதான சில நாட்களிலேயே பெயிலில் வெளியே வந்த குட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மீண்டும் உள்ளே சென்றான். ஆனால், தன் வாழ்க்கையில் திருமணமே இல்லை என்ற உறுதியான முடிவில் இருந்தார் லட்சுமி.
இந்தச் சூழ்நிலையில் தான் லட்சுமியின் போராட்ட குணத்தால் கவரப்பட்ட அலோக், அவரிடம் தன் காதலைச் சொன்னார். தன் வலிகளை முழுமையாக புரிந்து கொண்ட, தன் போராட்டத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அலோக்கைத் தவிர வேறு யாரும் தனக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக வர முடியாது என்பதை உணர்ந்தார் லட்சுமி. இதனால் திருமணம் பற்றிய தன் முடிவை மாற்றிக் கொண்டு, அலோக்கின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.
'திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தித்தான் பெரும்பாலான ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன. திருமணத்தில் மணமகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்றே எல்லோரும் பார்க்கிறார்கள். பெண்ணின் மனதை விட அழகிற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்’ என அலோக் கருதியதால், திருமணம் செய்து கொள்ளாமலேயே லட்சுமியுடன் சேர்ந்து வாழ்வது என அலோக் முடிவெடுத்தார். லட்சுமியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
நண்பர்களாக இருந்ததை விட இப்போது தம்பதிகளாக மாறி, Stop Acid Attacks அமைப்பின் மூலம் பல்வேறு நல்ல செயல்களைச் செய்து வருகின்றனர் லட்சுமியும், அலோக்கும். தன்னைப்போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு (ஆண்களுக்கும்) மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வது, அவர்கள் மனம் தளராதவிதத்தில் கவுன்சலிங் கொடுப்பது, அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என தொடர்ந்து செயலாற்றி வருகிறார் லஷ்மி.
'சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் அலோக்கும் லஷ்மியும் கலந்து கொண்டு பேசினார். இதன் மூலம் அவரது குரல் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. லஷ்மியின் சமூக அக்கறையை அங்கீகரிக்கும் விதமாக 2014-ம் ஆண்டு என் டி டி வி அவருக்கு International ‘Unsung Hero of the Year’ விருதை வழங்கி கௌரவித்தது. சர்வதேச அங்கீகாரமாக International Women of Courage Award- ம் லஷ்மிக்கு வழங்கப்பட்டது. வாஷிங்டனில் நடந்த விழாவில் விருது வழங்கிய மிச்சேல் ஒபாமா, லஷ்மியை அன்புடன் ஆரத் தழுவிக்கொண்டார்.
அந்தச் சர்வதேச சபையில் லஷ்மி கவிதை ஒன்றை கம்பீரமாக வாசித்தார். 'நீ என் முகத்தில் அமிலத்தை ஊற்றவில்லை... என் கனவுகளில் ஊற்றிவிட்டாய்...’ என ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் கண்ணீரால் அந்தக் கவிதை நிரப்பப்பட்டிருந்தது.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் ஆனார் லட்சுமி. ஆரம்பத்தில் தன் முகத்தைப் பார்த்து குழந்தை அழுமோ என்ற பயம் லட்சுமிக்கு இருந்தது. ஆனால் அது பின்னர் மாறிப் போனது.

இது ஒருபுறம் இருக்க, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்று சேர்ந்து லட்சுமி பேஷன் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ரூபா வடிவமைத்த உடைகளை அணிந்து கொண்டு, அப்பெண்கள் போஸ் கொடுத்திருந்த போட்டோக்கள் அவர்களின் தன்னம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்திருந்தது.
நியூஸ் எக்ஸ் சேனலின் Udaan என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார் லஷ்மி. சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்ந்து பேட்டி எடுப்பது தான் அவரது பணி. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மற்றவர்களது சோகத்தை வெளிக் கொண்டுவந்து குரல் எழுப்பும் இந்தச் சமூக விழிப்புஉணர்வு நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது 'சான்வ் ஃபவுன்டேஷன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் துவங்கி ஆசிட் வீக்சுக்கு எதிராகவும் ஆசிட் வீச்சால் பாதிக்கட்டவர்களுக்கு பெரிதளவில் உதவி செய்தும் வருகிறார். அதற்காக அவர் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றுள்ளார்.
தனது பாதையை மேலும் மேலும் விஸ்தாரப்படுத்தி வரும் லட்சுமியின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தான், தற்போது இந்தியில் படமாக எடுத்து வருகின்றனர். ’சபாக்’ என்ற பெயரில் தயாராகி வரும் இப்படத்தில் லட்சுமியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்த பயோபிக்கை 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்க, தீபிகாவே தயாரித்துள்ளார்.
தீபிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டலாக வெளிவந்தது. ‘எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்’ என்று இது தொடர்பாக தீபிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் 2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படம் குறித்து தீபிகா படுகோன் கூறும்போது,
“கதையை கேட்டதும் மனதை பாதித்தது. இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் இப்படம் மூலம் உலகம் முழுவதும் லட்சுமியின் தன்னம்பிக்கை நிறைந்த போராட்ட வாழ்க்கை சென்றடையும் என்பதில் சந்தேகமேயில்லை. லட்சுமி அரசிடம் கேட்பது என்னவோ இதைத் தான், ‘சமூகம், எங்களை வெறுத்து ஒதுக்குகிறது. வேலை கிடைப்பது இல்லை. எனவே, எங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
கடும் தண்டனைகளால் குற்றவாளிகள் திருந்தப்போவது இல்லை. மாற்றம், அவர்கள் மனதில் உண்டாக வேண்டும்; இந்தச் சமுதாயத்தில் உண்டாக வேண்டும். வருங்காலத் தலைமுறை குரூர எண்ணங்களுடன் வளராமல், நல்ல ஒரு சமூகமாகத் தழைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எங்கள் முகத்தை முன்னிறுத்திப் போராடுகிறோம்’ என்கிறார்.
நிச்சயம் லட்சுமியின் இந்தப் போராட்டம் வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்.