1 லட்சம் வாடிக்கையாளர்கள்; 1.5 மில்லியன் டாலர் நிதி - பாட்டியின் ரெசிபியால் வளர்ச்சி கண்ட 'ஸ்வீட் காரம் காபி'
பாட்டிகளின் கைப்பக்குவத்திற்கு மயங்காதோரில்லை. காலங்கள் ஓட அவர்களது ரெசிபிக்களும் மறையத் தொடங்கிவிடுங்கின்றன. ஆனால், சென்னையை சேர்ந்த தம்பதியினர் பாட்டியின் பதார்த்தங்களுக்கு உயிர் கொடுத்து 'ஸ்வீட் காரம் காபி' எனும் பெயரிட்டு, தென்னிந்திய சிற்றுண்டிக்கான பிராண்ட்டை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர்.
எத்தனை ஓட்டல்களில் ரசித்து ருசித்து சாப்பிட்டாலும், பாட்டிகளின் பக்குவத்தினாலும், கைமணத்தினாலும் செய்யப்படும் உணவுகளுக்கு நிகர் எதுமில்லை. காலங்கள் கடந்தோடி, அவர்கள் மறைந்து நீண்ட காலமாகினாலும்கூட அவர்களது ரெசிபிகளில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு குடும்பங்களிலும் இன்றும் தலைமுறை தாண்டி அவர்களது பெயர் சொல்லும். அப்படித்தான், அவல் பொரி உருண்டை, நேந்திரம் வாழைப்பழச் சிப்ஸ், கை முறுக்கு போன்ற பாட்டி ஜானகியின் கைப்பக்குவத்தில் தயாராகும் தீபாவளி பதார்த்தங்களை ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூர்ந்து வருத்தப்பட்டு வந்தார் ஆனந்த் பரத்வாஜ்.
பதார்த்தங்களை செய்ய பாட்டிக்கு உதவியாக இருந்துவந்த அவரது மனைவி நளினி பார்த்திபன், பாட்டியின் பதார்த்தங்களை செய்ய விரும்பினாலும் ஒரு தாயாக குழந்தைகளை கவனிப்பதற்கே நேரம் போதுமானதாக இருந்துள்ளது. ஆனந்த் மற்றும் நளினி இருவரும் பாட்டியின் பதார்த்தங்கள் இல்லாக்குறையை தீர்க்க அவர்கள் தேர்ந்தெடுத்தது தொழில்முனைவோர் பாதை.
ஆம், பாட்டியின் பதார்த்தங்களுக்கு உயிர் கொடுத்து '
' எனும் பெயரிட்டு, தென்னிந்திய சிற்றுண்டிக்கான பிராண்ட்டை உருவாக்கினர்.2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'ஸ்வீட் காரம் காபி' என்பது ஒரு தென்னிந்திய சிற்றுண்டிக்கான நேரடி நுகர்வோர் (D2C) பிராண்டாகும். பாம் ஆயில் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பயன்படுத்தாமல் பாட்டியின் உணவு சுவையை சமகால தன்மையோடு நல்ல பேக்கிங்கில் வழங்குகிறது.
சென்னையை தளமாகக் கொண்ட 'ஸ்வீட் காரம் காபி' தென்னிந்திய இனிப்புகள், தின்பண்டங்கள், மற்றும் ஃபில்டர் காபி பொடிகளை அவர்களது இணையதளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்துவருகிறது. இன்று, 100,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 32 முக்கிய நாடுகளில் முன்னிலை வகித்து சமீபத்தில் 1.5மில்லியன் டாலர் நிதியினையும் திரட்டியுள்ளது.
சக்சஸுக்கு வழிவகுத்த 'நோ பாமாயில்' 'நோ பதப்படுத்தும் பொருள்' பார்மூலா...
ஸ்வீட் காரம் காபி என்ற பெயரே தென்னிந்தியாவின் ஒரு முழுமையான சிற்றுண்டி அனுபவத்தை குறிக்கும் எனும் நளினி கூறுகையில்,
"நம்முடைய அனைத்து கொண்டாட்டங்களும் இனிப்பில் துவங்கி, அதைத் தொடந்து காரம், பின் சூடான காபியுடன் முழுமைபெறும். இம்முன்று அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்தது பிராண்டின் பெயர்," என்றார் அவர்.
தென்னிந்திய சிற்றுண்டி பிரிவில் உள்ள இரண்டு முக்கிய பிரச்சனைகளை தீர்க்க இருவரும் இணைந்து ஸ்வீட் காரம் காபியை ரூ.2,000 முதலீட்டுடன் துவங்கினர். முதலாவதாக, நன்கு பேக்கேஜ் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் சந்தையில் குறைவாகவே கிடைக்கும்நிலையினையும், MAP (மாற்றியமைக்கப்பட்ட வளிமண்டல பேக்கேஜிங்) மற்றும் நைட்ரஜன்-ஃப்ளஷ்செய்யப்பட்ட பேக்கேஜிங் முறையை பயன்படுத்துவதையும் தவிர்த்து அதற்கான தீர்வினை கொடுத்தனர்.
இரண்டாவதாக, இன்றைய தலைமுறையினரின் முதன்மையான ஸ்நாக்ஸ் தேர்வு மேற்கத்திய உணவுகளாகவே உள்ளது. அந்நிலையை மாற்றி பாரம்பரிய உணவுகளுக்கு அவர்களை மீட்டுகொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தினர்.
நேரடியாக நுகர்வோருக்கு அவர்களது இணையதளம் மற்றும் செயலி மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பிரபலமான சிற்றுண்டி வகைகளான மெட்ராஸ் மிக்சர், ரிப்பன் பக்கோடா, சீடை, கார சேவ், ஓமப் பொடி, கடலை மிட்டாய் போன்றவற்றை விற்பனை செய்துவருகிறது.
விரைவில் இந்த பட்டியலில் கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பிரபல சிற்றுண்டி வகைகளையும் இணைப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளது.
இருப்பினும், ஸ்வீட் காரம் காபியின் தனித்துவம் என்னவென்று வினவியதற்கு, "சுவையே எங்களது தனித்துவம். சுத்தமான முறையில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தின்பண்டங்களை தயாரிக்கிறோம். பாமாயில் மற்றும் பதப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தாமல் சிற்றுண்டிகளை தயார் செய்கிறோம். கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யை பயன்படுத்தி பலகாரங்களை செய்கிறோம். சில தினை சிற்றுண்டிகள் சூரியகாந்தி எண்ணெய், பச்சை அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அதனால்,
"நம் வீட்டில் செய்யும் பலகாரங்களின் சுவையை இவை எட்டிவிடுகின்றன. சிறுதானிய அடிப்படையிலான தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரை இல்லாத பொருட்களுக்கான முக்கியத்துவம் பெருகியுள்ளதால், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறோம்," என்றார் நளினி.
விவசாயிகள் மற்றும் பெண் முனைவோர்களுக்கு அதிகாரமளித்தல்
ஆரோக்கியமான தின்பண்டங்களை வழங்குவதைத் தவிர்த்து, ஸ்வீட் காரம் காபியானது சிறு விவசாயிகள் மற்றும் வீட்டுத் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறது.
ஆம், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து தின்பண்டங்களுக்கான மூலப்பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளித்து பணியில் அமர்த்தியுள்ளது. தற்போது பணியிலுள்ள 35 பணியாளர்களில் பெரும்பாலோனர் பெண்களாகும்.
"விவசாயிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து எங்களது மூலப்பொருட்களின் விளைச்சலுடன் நேரடி தொடர்பில் இருக்கிறோம். தென்பிராந்திய விவசாயிகளிடமிருந்து திணை தின்பண்டங்களுக்கான மூலப்பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்கிறோம். ஏனெனில், இன்றைய தலைமுறை மக்கள் உணவுப்பொருள்களின் மூலப்பொருள்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்."
வீட்டின் சுவையை பிரதிபலிக்கும் வீட்டு தயாரிப்புகளை அதிகம் விரும்புகிறார்கள். தென்னிந்தியர் அல்லாதவர்களிடையே தென்னிந்திய சிற்றுண்டிகளை அதிகம் உட்கொள்ள துவங்கியுள்ளனர். மூலப்பொருள்களின் சரியான தேர்வு தின்பண்டங்களுக்கு ரிச் டேஸ்ட்டை அளித்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி எங்கள் பாட்டியின் ரெசிபியிலிருந்தும், திறமையான வீட்டுசமையல் கலைஞர்களுடன் பணிபுரிவதிலிருந்து கிடைக்கிறது.
"பெண்தொழில் முனைவோர்கள் எங்களுடன் இணைந்து வளர்ச்சி அடைவதற்கு வழி செய்கிறோம். பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே எங்களது குறிக்கோள்," என்ற இலக்கினை கூறினார் நளினி.
1,00,000 வாடிக்கையாளர்கள், 1.5மில்லியன் டாலர் நிதி...
இன்று, 100,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 32 முக்கிய நாடுகளில் முன்னிலையில் உள்ளது ஸ்வீட் காரம் காபி.
அதன் இணையதளம் மற்றும் செயலியின் வலிமையால் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.
"2020ம் ஆண்டு முதல், நிறுவனத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க எழுச்சியை அடைந்துள்ளது. அதன் வருவாய் ஆண்டு ஆண்டுக்கு இரட்டிப்பாகும்," என்கிறார் நளினி.
சமீபத்தில் இந்நிறுவனமானது', ஃபயர்சைடு வென்சர்ஸ் (Fireside Ventures) நிறுவனத்திடம் இருந்து, 1.5 மில்லியன் டாலர் நிதியினை திரட்டியுள்ளது.
"நாங்கள் தற்போது D2C இல் கவனம் செலுத்தி வருகிறோம், வரும்நாட்களில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஆஃப்லைன் விற்பனையை விரிவுபடுத்தவும், B2B வாய்ப்புகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிதியை விரிவாக்கம், புதிய பூகோள பகுதிகளில் நுழைவது, சேனல் விரிவாக்கம், சந்தைப்படுத்தல், குழு உருவாக்கம், சேவையை வலுவாக்கிக் கொள்வதில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியா முழுவதும் முன்னிலையிலும் உலகளாவிய விரிவாக்கத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிக ஆதரவைப் பெற்றுவருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்க விரைவான வர்த்தகம் மற்றும் சில்லறை விற்பனை வடிவங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
”ஸ்வீட் காரம் காபி என்பது பழைமையான தயாரிப்புகளுக்கான சமகாலத் திருப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் எங்கு வசிப்பினும், வீட்டு உணவின் மீதான ஏக்கம் தவிர்க்க இயலாதது..." என்று கூறி முடித்தார் அவர்.
ஆண்டிற்கு 50 லட்சம் சமோசாக்கள் விற்பனை: தரமான ஸ்னாக்குடன் பார்ட்டி செய்யலாம்!