‘கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது, அதனால் அம்மாவை படைத்தார்’ - தன் தாய்க்கு யுவராஜ் சிங்-ன் அர்ப்பணம்!
YouWeCan ஃபவுண்டேஷன் தலைவரான ஷப்னம் சிங் தனது மகன் யுவராஜ் சிங் புற்றுநோயை எதிர்த்து போராட உதவியதுடன் புற்றுநோய் மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் The Test of My Life: From Cricket to Cancer and Back என்கிற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கை, புற்றுநோய் பாதிப்பு என பல்வேறு விஷயங்களை விவரித்துள்ளார். இதன் தொடக்கத்தில் தனது அம்மா ஷப்னம் சிங்கை பாராட்டும் வகையில்;
“என் அம்மா ஷப்னம் சிங் அவர்களுக்கு, இந்தப் புத்தகம் என்னைப் பற்றியது அல்ல; இது ஒரு வீரத் தாயின் கதை. இந்தத் தாய் என்னை இருமுறை பெற்றெடுத்தவர். கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்கமுடியாது என்பதால் அம்மாவைப் படைத்தார் என்று சொல்லப்படுவதுண்டு. இதை கண்கூடாகப் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு,” என்று எழுதியுள்ளார்.
யுவராஜ் சிங் வாழ்க்கையில் ஷப்னம் மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். அவர் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரராக உருவெடுக்க உதவியதோடு நின்றுவிடாமல் வாழ்க்கையின் கடினமான சூழல்களை எதிர்த்துப் போராடவும் உதவியுள்ளார்.
யுவராஜ் சிங்கின் YouWeCan ஃபவுண்டேஷனையும் அவரது அம்மா நிர்வகித்து வருகிறார். லாப நோக்கமற்ற இந்நிறுவனம் இந்தியாவில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் பணியாற்றி வருகிறது.
ஷப்னம் ஒரு விளையாட்டு வீராங்கனை. இருப்பினும் விளையாட்டு வீரர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டபோது கூடைப்பந்து மீதிருந்த ஆர்வத்தைக் கைவிட்டார். 19 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயானார். பெரும்பாலான நேரங்களில் கணவரால் உடன் இருக்கமுடியாத சூழலில் குழந்தைகளைப் பராமரிப்பது, அவர்களது படிப்பு, புகுந்த வீட்டினரைப் பராமரிப்பது என அனைத்தையும் தானே சமாளித்து வந்தார்.
சவால் நிறைந்த வாழ்க்கை
ஷப்னம் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளார்.
“என் கணவருடன் சுமுகமான உறவு இல்லாமல் போனது. நாங்கள் பிரிந்துவிட்டோம். வாழ்க்கை மேலும் கடினமாக மாறியது. பணப் பற்றாக்குறை இருந்தது. வரவு செலவுகளை சமாளிப்பது கடினமாக இருந்தது. படிப்படியாக யுவராஜ் கிரிக்கெட் உலகில் அடி எடுத்துவைத்தபோது எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. யுவராஜின் தொழில்முறை வாழ்க்கை, புற்றுநோய் பாதிப்பு என அனைத்தும் வலி நிறைந்ததாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது.
ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனையோ படிப்பினைகள் கிடைத்தன. என்னுடைய அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டு சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார்.
யுவராஜிற்கும் ஷப்னம் அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். அவர் தனது மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்கியதுடன் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கிறார்.
“யுவராஜ் கிரிக்கெட் விளையாட்டில் பெரியளவில் சாதனை படைப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. என்றாலும் இந்தப் பயணம் சவால் நிறைந்ததாக இருந்தது. ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்க அவர் மிகவும் இளம் வயதினர் என்று சொல்லப்பட்டது, கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்கத் தேர்வான பிறகு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி எத்தனையோ சவால்கள்.
யுவராஜ் மனமுடைந்து போகாமலும் கவனம் சிதறாமலும் இருப்பதை உறுதிசெய்யவேண்டியிருந்தது. அவர் 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான கிரிக்கெட் குழுவிற்குத் தேர்வான பிறகு மிகப்பெரிய அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்தார்,” என்று நினைவுகூர்ந்தார்.
யுவராஜ் கிரிக்கெட் பிரபலமாக மாறியபோதும் விவேகத்துடன் நடந்துகொள்ளவும், அழுத்தங்களை சமாளிக்கவும், முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தவும் ஒரு அம்மாவாக ஷப்னம் ஆதரவளித்துள்ளார்.
அம்மாவின் நம்பிக்கை
2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பிறகு யுவராஜிற்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. உலகமே சுக்கு நூறாக உடைந்தது போலிருந்தது. மகன் இந்தக் கொடிய நோயில் சிக்கித் தவிப்பதைப் பார்ப்பது ஷப்னத்திற்கு வேதனையளிப்பதாக இருந்துள்ளது.

“உயிர்குடிக்கும் கொடிய நோய் தன் குழந்தைக்கு இருப்பதைக் கேட்கும் எந்த ஒரு அம்மாவும் நிலைகுலைந்து போவார். இந்த நோய் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். யுவராஜ் அபாரமாக விளையாடினார். முறையான உணவுப் பழக்கத்துடனும் உடற்பயிற்சியுடனும் ஆரோக்கியமாகவே இருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டு எங்களால் நம்பமுடியவில்லை. அதை ஏற்றுக்கொள்ள வெகு நேரம் ஆனது. ஆனால் நான் மனமுடைய போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார்.
“நடப்பவற்றை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் யுவராஜிற்காக உணர்ச்சிவயப்படாமல் இருக்க வேண்டியிருந்தது. என்னுடைய ஆன்மீக குருவின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை நினைவில் நிறுத்தி இந்தப் போராட்டத்தை கவனமாக எதிர்கொண்டேன்.
யுவராஜ்தான் என்னுடைய உலகம். இந்தச் செய்தி உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மனதளவிலும் சோர்வளிப்பதாக இருந்தது. இருப்பினும் என்னுடைய மகன் நலன் பெறுவான் என்கிற நம்பிக்கையே தொடர்ந்து செயல்பட ஊக்கமளித்தது. நாங்கள் இந்தியா திரும்பியதும் யுவராஜ் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டார். ஆனால் எங்கள் நம்பிக்கையே தொடர்ந்து முன்னேற உதவியது,” என்றார் ஷப்னம்.
புற்றுநோய்கான சிறப்பான சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் வசதி யுவராஜிடம் இருந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள எத்தனையோ புற்றுநோயாளிகளுக்கு ஆரம்பநிலையிலேயே நோயைக் கண்டறிவதற்கான வசதியும் சிகிச்சை தொடர்பான சரியான தகவல்களும் கிடைப்பதில்லை என்பதை ஷப்னம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்.
இந்தப் புரிதல் காரணமாக உருவானதுதான் YouWeCan ஃபவுண்டேஷன்.
நம்பிக்கை தான் வாழ்க்கை
புற்றுநோயாளிகளையும் அவர்களது குடும்பங்களையும் ஆதரித்து அவர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கவேண்டும் என்பதே அம்மா-மகன் இருவரின் நோக்கம்.

ஷப்னம் விவரிகையில்,
“இந்தியா புற்றுநோயை எதிர்த்துப் போராட சக்தியளிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். விழிப்புணர்வு, ஸ்கிரீனிங், சிகிச்சைக்கான ஆதரவு, மீண்டவர்களுக்கு சக்தியளித்தல் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஸ்கிரீனிங் ஆகியவையே புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் அமெரிக்காவைக் காட்டிலும் 4 முதல் 6 மடங்கு அதிகம். 70 சதவீதம் நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. 85 சதவீத இந்திய குடும்பங்களால் சிகிச்சைக்கு செலவிடமுடிவதில்லை. மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படலாம். அதேபோல் மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டால் குணப்படுத்திவிடலாம்,” என்றார்.
YouWeCan ஃபவுண்டேஷன் விழிப்புணர்வு மற்றும் ஸ்கிரீனிங் முகாம்களை கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்கிறது. வாய், மார்பகம், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான ஆலோசனை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகையிலைக்கு எதிரான பட்டறைகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், குடியிருப்புகள், கம்யூனிட்டி செண்டர்கள், ஷாப்பிங் வளாகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பட்டறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுவரை 1,50,000 பேர்களுக்கு ஸ்கிரீனிங் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை நோயாளிகளுக்கான YWC புற்றுநோய் சிகிச்சை நிதி மூலம் தகுந்த புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு இந்த நிதியின்கீழ் உதவி வழங்கப்படுகிறது. YWC இந்த முயற்சியை செயல்படுத்த அரசாங்கம் மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளுடன் ஒன்றிணைந்துள்ளது.
அத்துடன் இந்த ஃபவுண்டேஷன் YouWeCan உதவித்தொகை வழங்குகிறது. புற்றுநோயில் இருந்து மீண்ட நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முறையாக கல்வி கற்க இது உதவும்.
இதுவரை இந்த ஃபவுண்டேஷன் 30,000 பேர்களுக்கு மார்பக சுய பரிசோதனை குறித்து எடுத்துரைத்துள்ளது. புற்றுநோய் பாதித்து மீண்ட 150 மாணவர்களுக்கு YWC Scholarship மூலம் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. 1,25,000 மாணவர்களுக்கு புகையிலையின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்துள்ளது. 24,000 ஆண்களுக்கு புகையிலை பழக்கத்தை நிறுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.
ஷப்னம் கணவரின்றி தனியாக குழந்தையுடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி பற்றி விவரித்துள்ளார். இந்தப் பெண்ணின் எட்டு வயது மகன் தனுஜிற்கு ஹோட்கின்ஸ் வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. உறவினர்களின் பரிந்துரையின்படி அவரது குடும்பத்தினர் அந்தச் சிறுவனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆறு மாதங்கள் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கான செலவு 5 லட்சத்திற்கும் அதிகமாக ஆனது. தனுஜின் சிகிச்சை செலவுகளுக்காக அவரது அம்மா தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்பனை செய்துள்ளார்.
அந்தத் தொகையும் சிகிச்சை செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி கடன் வாங்கினார். சமூகப் பணியாளர் ஒருவர் அவரிடம் YWC உதவித்தொகை குறித்து கூறியுள்ளார். உடனே அதற்கு விண்ணப்பித்துள்ளார். ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இதர செயல்முறைகள் நிறைவடைந்த பிறகு தனுஜிற்கு உதவித்தொகை கிடைத்தது. அவர் தற்போது டெல்லியில் உள்ள தாகர் பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
இந்த ஃபவுண்டேஷன் சமீபத்தில் கோவிட்-19 நிவாரணங்களுக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் யூனிசெஃப் உடன் இணைந்து பல்வேறு பிரச்சாரங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. 1.8 கோடி ரூபாய் நிதி உயர்த்தி ஒரு மில்லியன் சுகாதார கிட்களை விநியோகிக்க பேடிம் மற்றும் லைஃப்பாய் உடன் கூட்டு முயற்சியில் இணைந்துள்ளது.
“யுவராஜ் உடன் இணைந்து அறக்கட்டளை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்கிறார் ஷப்னம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா