140 ஊழியர்களுக்கு 14.5 கோடி ரூபாய் போனஸ் வழங்கி அசத்திய kovai.co நிறுவனம்!
கோவையின் வேகமாக வளரும் சாஸ் ஸ்டார்ட் அப்'களில் ஒன்றான Kovai.co, 3 ஆண்டுகள் பணியை முடித்துள்ள தனது 140 ஊழியர்களுக்கு, மொத்த ஆண்டு சம்பளத்தில் 50% போனஸாக வழங்கியுள்ளது.
கோவையின் வேகமாக வளரும் சாஸ் ஸ்டார்ட் அப்களில் ஒன்றான கோவை.கோ (Kovai.co) தனது 140 ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி (1.62 மில்லியன் டாலர்) அளவிலான தொகையை போனாசாக பிரித்து வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
’இணைந்து நாம் வளர்வோம்’ (Together We Grow) போனஸ் என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், 2022 டிசம்பர் 31ம் தேதி அன்று அல்லது முன்னதாக நிறுவனத்தில் இணைந்த அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாண்டு பணி நிறைவில் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் போனாஸாக பெறுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பயனாளிகள் 80 ஊழியர்கள், ஜனவரி 31 ம் தேதி, சம்பளத்தின் பகுதியாக போனஸ் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் யூகேவைச் சேர்ந்த Kovai.co 2022ல் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் திட்டத்தை அறிவித்தது. ஊழியர்களுடன் நிறுவன லாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் திட்டம் அறிவிக்கப்பட்டது.
“நிறுவன வளர்ச்சி மற்றும் லாபத்திற்கு பங்களிக்கும் ஊழியர்களுக்கு பரிசளிக்கவேண்டும், என எப்போதும் நினைத்து வருகிறேன். செல்வத்தை பிரித்து பகிர்ந்து கொள்வதற்கான வழியை உண்டாக்குவது எனது கனவாகவும் இருந்துள்ளது,” என்று நிறுவன நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. சரவண குமார் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு பரிசளிப்பது அல்லது லாபத்தை பகிர்வது பற்றி யோசித்த போது பல வழிகளை பரிசீலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“பங்கு உரிமை திட்டம் அல்லது பங்குகள் பற்றி யோசித்தோம். ஆனால், அது காகித பணம் தான். நிறுவனம் வெளி முதலீடு திரட்டும் போது அல்லது சந்தையில் பட்டியலிடும் போது தான் பலன் பெற முடியும்,“ என கூறியுள்ளார்.
இதற்கு மாறாக நிறுவனம் ரொக்கமாக பரிசளிக்க தீர்மானித்துள்ளது.
“ஊழியர்கள் இதை கடனை அடைக்க அல்லது வீட்டுக்கு முன்பணம் செலுத்த அல்லது முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்,“ என நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.
B2B-யில் பல சேவை சார்ந்த வர்த்தக சாஸ் நிறுவனமான Kovai.co, BizTalk360, Document360, Turbo360 ஆகிய பொருட்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 2,500க்கும் மேல் வாடிக்கையாளர்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். 2023ல் இந்த சுயநிதி நிறுவனம் ஆண்டு வருவாயில் (ARR) 16 மில்லியன் டாலரை கடந்தது. 260க்கும் மேல் ஊழியர்கள் கொண்ட நிறுவனம், சென்னை, கோவை, லண்டனில் அலுவலகங்கள் கொண்டுள்ளது. நிறுவனம் அண்மையில், பெங்களூருவைச் சேர்ந்த Floik நிறுவனத்தை கையகப்படுத்தியது.

10 ஆண்டுகளில் 75 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் கோவையை SaaS மையமாக்கிய Kovai.co
Edited by Induja Raghunathan