வெற்றிகர தொழில் முனைவின் அடையாளமாகத் திகழும் 5 கோவை நிறுவனங்கள்!
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, இந்தியாவின் முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவாகி வருவதை உணர்த்தும் நிறுவனங்களை எஸ்.எம்.பி ஸ்டோரி பட்டியலிடுகிறது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தொழில் போக்குகளில், உள்ளூர் பொருளாதாரம் ஒரு பக்கம் வலுப்பெறுவதும் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் தங்கள் பகுதியிலேயே தீர்வுகளைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களின் முக்கியத்துவத்தையும் இந்த பெருந்தொற்று உணர்த்தியுள்ளது.
இந்த பின்னணியில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் கவனத்தை ஈர்க்கிறது. கோவை, இந்தியாவின் முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவாகி வருவதை உணர்த்தும் நிறுவனங்களை எஸ்.எம்.பி ஸ்டோரி பட்டியலிடுகிறது.
சுகுணா ஃபுட்ஸ்
(பி. செளந்திரராஜன், தலைவர், நிர்வாக இயக்குனர், சுகுணா ஹோல்டிங்ஸ் லிட்)
1986ல், சகோதரர்கள் ஜி.பி.சுந்தரராஜன் மற்றும் பி.செளந்திரராஜன், கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தைத் துவக்கினர். துவக்கத்தில், கோழிப்பண்ணை வர்த்தகம் தொடர்பான கருவிகள், தீவனம் மற்றும் இதர கருவிகளை விற்பனை செய்தனர்.
மூன்று ஆண்டுகள் வர்த்தகம் செய்த பிறகு, விவசாயிகள் கடன் பிரச்சனையால் பயிர் செய்யும் தொழிலை விட்டு வெளியேறுவதை கவனித்தனர். விவசாயிகள் தனியாரிடம் கடன் பெற்று அவதிப்பட்டனர். மேலும் வருமானமும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், தான் சகோதரர்கள் ஒப்பந்த பண்ணை முறையை யோசித்தனர்.
1990ல் சுகுணா ஃபுட்ஸ், மூன்று விவசாயிகளுடன் ஒப்பந்த கோழிப்பண்ணை முறையை அறிமுகம் செய்தது. கோழிகளை வளர்க்கத் தேவையான எல்லாவற்றையும் நிறுவனம் வழங்கியது, பதிலுக்கு அவர்கள் கோழிகளை சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்திடம் விற்றனர்.
இன்று, சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம், 40,000 விவசாயிகளுக்கு மேல் நிலையான வருமானத்தை அளிக்கிறது. கோழிப்பண்ணை சார்ந்த தொழிலுக்காக அறியப்படும் நிறுவனம் 66 தீவண ஆலைகளையும் நடத்தி வருகிறது. ரூ.8,700 கோடி விற்றுமுதல் பெற்றுள்ளது.
வாக்கரூ (Walkaroo)
(விகேசி.நவுஷத், வாக்கரூ நிறுவனர்)
2013, விகேசி.நவுஷத் Walkaroo எனும் பிராண்டை துவக்கி, பேஷன், தரம் மற்றும் குறைந்த விலை அம்சங்கள் கொண்ட பொருட்களை வழங்கினார். சாதாரண ஷூக்கள், சட்டைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை நிறுவனம் விற்பனை செய்தது.
கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 12 சொந்த உற்பத்தி ஆலைகளில் ஷுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் ஷூக்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளன.
சொந்த இணையதளம் மூலம் விற்பனை செய்வதோடு, அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்து வருகிறது. நிறுவனம் ரூ.1,245 கோடி விற்றுமுதல் ஈட்டியது.
TABP ஸ்னேக்ஸ் அண்ட் பிவேர்ஜஸ்
(பிருந்தா விஜயகுமார், பிரபு காந்திகுமார், நிறுவனர்கள் )
பிரபு குமார், அமெரிக்காவில் பல ஆண்டுகள் ஆலோசகராகப் பணியாற்றிய பிறகு, கோவை திரும்பி குடும்ப தொழிலான மெட்டல் காஸ்டிங்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். எனினும் அவருக்கு திருப்தி இல்லாமல் இருந்தது.
2016ல் பல்வேறு துறைகளை பரிசீலித்தவர் பாணங்கள் துறையில் நுழைய தீர்மானித்தார். கூலி வேலை செய்பவர்கள் குளிர்பானங்களை விரும்பினாலும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதை உணர்ந்தனர்.
மேலும், இத்தகைய தொழிலாளர்களில் மாத வருமானமும் குறைவாக இருந்தது. எனவே, இந்த இடைவெளியை போக்கும் வகையில், பிரபு மற்றும் அவரது மனைவி பிருந்தா தன்வி புட்சை துவக்கி, 10 ரூபாய் விலையில், மாம்பழம் மற்றும் ஆப்பிள் குளிர்பானத்தை வழங்கினர்.
2018ல் நிறுவனம் TABP Snacks and Beverages என பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதன் விற்றுமுதல் ரூ.35.5 கோடியாக இருக்கிறது.
EKKI குழுமம்
(பி.ஆறுமுகம், கனிஷ்கா ஆறுமுகம்)
தமிழ்நாட்டின் கோட்டூர் கிராமத்தில் வசித்து வந்த பி.ஆறுமுகம் 1980ல் உயர்கல்விக்காக கோவை வந்தார். படிப்பை முடிதத்தும், பம்புகளை விற்கும் கடை துவங்குமாறு அவரது மாமா ஆலோசனை கூறினார். இருவரும் இணைந்து 1981ல் டெக்கான் பம்ஸை துவக்கினர். எம்.எஸ்.சுந்தரம் எனும் நண்பரும் இவருடன் இணைந்து கொண்டார்.
விவசாயிகளுக்கான சப்மர்ஸிபில் பம்களை தயாரிக்கும் நிறுவனமாக துவங்கியது. மெல்ல மற்ற வகை மோட்டார் பம்ப்களில் விரிவாக்கம் செய்தது.
பின்னர் ஆறுமுகம் மொத்த நிறுவனத்தையும் வாங்கிக் கொண்டார். இதனையடுத்து ஹோல்டிங் நிறுவனமாக EKKI குழுமம் உருவானது. இதன் கீழ், டெக்கான் பம்ப்ச், டெக்கான் எண்டர்பிரைசஸ், எக்கி ஹோமா மற்று எக்கி பம்ப்ஸ் இயங்குகின்றன. இன்று நிறுவனம் தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
அன்னபூர்ணா மசாலாஸ்
(Dr.தாமோதரசாமி நாயுடு)
கோவைவாசியான, டாக்டர்.தாமோதரசாமி நாயுடு 1975ல், சங்கிலித்தொடர் ஹோட்டல்களை நடத்தி வந்தவர், மசாலா தயாரிப்பில் ஈடுபடத்துவங்கினார். அன்னபூர்ணா மசாலாஸ் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு மசாலாக்களை விற்பனை செய்தார்.
இன்று நிறுவனம், 53க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்டதாக வளர்ந்திருக்கிறது. மேலும் பல உணவு ரகங்களை தேசிய அளவி அறிமுகம் செய்துள்ளது. இ-காமர்ஸ் தளங்கள் மூலமும் விற்பனை செய்கிறது. ரூ.35 கோடி விற்றுமுதல் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்