‘கோவிட் கேர்’ மையங்களாக மாறிவரும் ஸ்டார் ஹோட்டல்கள்: எங்கே? கட்டணம் என்ன?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலையில் நட்சத்திர ஓட்டல்களில் வைத்து 24*7 மருத்துவ சேவை அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் இன்றி நிரம்பி வழியும் நிலையில் சில உயர்தர தங்கும் ஹோட்டல் விடுதிகள் சில கோவிட் பராமரிப்பு மையங்களாகவும், மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியை முழு நேரம் வழங்கும் நிலையங்களாகவும் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கு காரணமாக ஹாஸ்பிடாலிட்டி துறையான தங்கும் வசதிகள் மற்றும் ஹோட்டல் விடுதிகள், பொதுமக்களுக்கு இயங்கமுடியாத சூழலில், அவை கோவிட் மையங்களாக மாறி சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் தொழிலை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.
கொரோனா இரண்டாம் அலை வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், லேசான மற்றும் அறிகுறிகளற்றவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு வசதியாக உயர்தர மற்றும் பட்ஜெட் தங்கும் விடுதிகளுடன் மருத்துவமனைகள் சில கைகோர்த்துள்ளன.
கொரோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரை முழுவதுமாக பரிசோதனை செய்துவிட்டு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறத் தேவையில்லை எனும் போது தொற்று பாதித்தவரின் சம்மதத்துடன் அவருக்கு தங்கும் விடுதிகளில் பராமரிப்பு வசதியை செய்து தருகின்றன மருத்துவமனைகள்.
பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ, லெமன் ட்ரீ மற்றும் ஐஎச்சிஎல் குழும விடுதிகளுடன் கைகோர்த்துள்ளது. சென்னையில் ஆடம்பரமான தாஜ் கிளப் ஹவுஸ் முதல் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் ஜின்ஜர் ஹோட்டல்ஸ் வரையில் கோவிட் பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.
2020 மார்ச் மாதத்தில் ஓயோ ஹோட்டல்களுடன் சேர்ந்து அப்போலோ மருத்துவமனை இந்த கோவிட் பராமரிப்பு சேவையை வழங்கத் தொடங்கியது தற்போது சென்னை, பெங்களூரு, கவுஹாத்தி என 11 நகரங்களில் 20 வசதிகளுடன் கூடிய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினால் முடங்கிக் கிடந்த ஹாஸ்பிடாலிட்டி துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
மருத்துவமனையின் கொரோனா தொற்று சிகிச்சைக் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் கிருமி நாசினிப் பணிகள் விடுதிகளில் செயல்படுத்தப்படும். 3 வேளையும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையிலான ஆரோக்கியமான உணவு, தொலை மருத்துவச் சேவை வழங்கப்படுகிறது.
ஆன்லைனில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர்களிடம் கொண்டு சேர்த்தல், பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் என அனைத்தும் செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இது தவிர,
20 படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் மற்றும் 24*7 வார்டு பாய்களும் பணியில் இருப்பார்கள். சில விடுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் செறிவூட்டிகள் அவசர பயன்பாட்டிற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய்வாய்ப்பட்டவரின் நிலைமை மோசமடையும் பட்சத்தில் உடனடி அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உடனடியாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லேசான அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் இருக்கும் சிலர் சரிவர தங்களைக் கண்காணிக்காமல் போவதனால் 7 அல்லது 12வது நாளில் அவர்கள் தீவிர நிலைக்கு செல்ல நேரிடுகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் ஓட்டல்களில் கொரோனா பராமரிப்பு மையத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதனால் 3 அல்லது 4வது நாளிலேயே தொற்றின் பரவலைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க முடியும்.
மேலும், பெரும்பாலானவர்கள் இந்த வகையில் ஓட்டல்களில் பராமரிப்பு மையங்களை நாடுவதற்கான முக்கியக் காரணம் தங்கள் குடும்பத்தினர் அல்லது வயதில் மூத்தவர்களுக்கு தொற்று பரவி விடக் கூடாது என்ற அச்சமே.
கோவிட் பராமரிப்பு மையங்களாக செயல்படும் விடுதிகளில் மினி மருத்துவமனை செட்அப் செய்யப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். அங்கிருந்து நோயாளிகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
கோவிட் சிகிச்சை மையங்களாக மாறியுள்ள ஹோட்டல்கள் எவை என்று தொகுத்துள்ளோம்:
1. சென்னை கிண்டியில் இருக்கும் ரமடா பிளாஸாவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் தங்குவதோடு சிறப்பான உணவு முறையும் கடைபிடிக்கப்படுகிறது. வேகவைத்த நெல்லிக்காய், கபசுரக்குடிநீர், சுண்டல் என ஆரோக்கியமான உணவுப் பட்டியல் பிரத்யேகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான அளவில் புரதம், ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு தூய்மையான காற்று மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் காலை, மாலை இரண்டு வேளையும் சிறிது நேரம் rooftop திறந்து வைத்து சிகிச்சை பெறுபவர்களுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற சூழலை ஏற்படுத்தித் தருகிறது.
பரிசோதனைகளுக்கான செலவுகள் நீங்கலாக ஒரு நபருக்கு ஒரு நாள் தங்க ரூ.3,000 முதல் இரண்டு பேருக்கு ஒரு நாளைக்கு ரூ- 10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2. Fab hotels சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் 350க்கும் மேற்பட்ட கோவிட் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் அளவு 90%அதிகம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவு, மருத்துவரின் ஆலோசனை 24 மணி நேர செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.
அவசர காலத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி என 7 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதியை அளிக்கிறது. நாள் ஒன்றிற்கு நபர் ஒருவருக்கு ரூ. 4999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
3. ராஜஸ்தான் யூத் அசோசியேஷனின் காஸ்மோ எலைட் அறக்கட்டளையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை இருப்பின் லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவை வழங்குகிறது.
தனி நபருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.4,000 மற்றும் இரண்டு பேர் தங்குவதற்கு ரூ.8,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 994056528
4. சென்னை தியாகராய நகர் பகுதியில் இயங்கி வரும் Ageis Home Healthcare pvt.ltd லேசான அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கான ஏஜிஸ் கோவிட் கேர் மையத்தை தொடங்கியுள்ளது. அறைகள் நல்ல காற்றோட்டத்துடன் சரியான முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவர்/இரண்டு நபர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் அரசின் கொரோனா உணவு நடைமுறை, பணியாற்றுவதற்கும் பொழுதுபோக்கிற்கும் தேவையான wifi மற்றும் தொலைக்காட்சி சேவையோடு 24 மணி நேரத்திற்கு பாராமருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு : 80564 54994, 9360863588
5. சென்னை வடபழனி ஜிஞ்சர் ஹோட்டலில் 79 அறைகள் கோவிட் பராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன, இவற்றில் 10 அறைகள் தற்போது காலியாக இருக்கின்றன. அப்போலோ மருத்துவமனை மூலம் இங்கு அறையை பெறலாம். தொடர்புக்கு : 18605000202
6. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் ஒதுக்கப்பட்டுள்ள 100 அறைகளில் 54 அறைகள் காலியாக இருக்கின்றன. அப்பலோ மற்றும் சக்தி மருத்துவமனைகள் மூலமாக இங்கு லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் தனிமைபடுத்திக்கொள்வதற்கான அறையைப் பெறலாம். தொடர்புக்கு : 1860500020, 9500046258
7. ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள 4 ஸ்டார் ஹோட்டல் ராஜ் பார்க் இடத்தில் கோவி சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது. இங்கு தங்க தனி அறை அல்லது இருவர் தங்கு வசதிகளுடன் ரூம்கள், 24 மணிநேர டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வசதி அளிக்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வசதிகள் செய்து தரப்படுகிறது.
8. டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள க்ளாரியன் ஹோட்டல், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து கோவிட் சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது. இங்கு 60 வயதுக்கு கீழுள்ள மைல்ட் அறிகுறிகள் உள்ள ஆக்சிஜன் 85% அளவுக்கு மேலுள்ள நோயாளிகளை காவேரி மருத்துவமனை அனுப்பி வைக்கிறது. தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் இந்த ஹோட்டலில் தனி அறையில் தங்கி, உணாவு, தேவையான சிகிச்சையைப் பெறலாம்.
ஒரு நாளைக்கு எல்லா வசதிகளுக்கு சேர்த்து, தனி ஒருவருக்கு 8000 ரூபாயும் இருவராக தங்கினால் 12000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
9. Portea என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் கோவிட் கேர் மையங்களை அமைத்துள்ளது. இதில், தங்க இடம், உணவு மற்றும் தேவையான மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது.
“வேளச்சேரியில் கோல்டன் ஸ்குவேர் என்ற இடத்தில் தங்கும் வசதிகளுடன், மூன்று வேளை சாப்பாடு, மற்றும் மருத்துவ சேவைக்கு 10 நாட்களுக்கு ரூ.14000 வசூலிக்கப்படுகிறது.”
தொடர்பு எண்கள்: 7676000500, 9606463608, 6364900275