லாக்டவுனில் எடுத்த பயிற்சி; முயற்சி: கேக் தயாரிப்பில் மாதம் ரூ.50,000 ஈட்டும் ஐடி ஊழியர்!
லாக்டவுணில் பொழுதுபோகமால் கற்ற பேக்கிங் கலையை, வருமானம் ஈட்டும் தொழிலாக்கி மாதம் 50,000ரூ சம்பாதிக்கிறார் முன்னாள் ஐடி ஊழியர்.
கொரோனா – மக்கள் தங்கள் வாழ்வில் மறக்கவியலாத பெயர். ஏனெனில் அது ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. லாக்டவுன் நாட்களில் பலரும் வேலையிழந்தும், தொழிலில் நட்டம் ஏற்பட்டும் வாழ்வின் கடினமான நாட்களை கடந்துவந்த நிலையில், சிலரோ லாக்டவுனை வேறு கோணத்தில் அணுகி புதிய பாதையில் பயணித்து அதில் வெற்றியும் கண்டு, பிறருக்கு பாசிட்டிவ் எனர்ஜியை கடத்தி வருகின்றனர்.
அப்படியானவர் தான் ஸ்டெபி. பலரையும் சோர்வுற வைத்த லாக்டவுன் நாட்களில் அறிமுகமற்ற பேக்கிங் கலையை கற்று, இன்று வெற்றிகர ஹோம் பேக்கராக மாதம் 50,000ரூபாய் வரை வருமானம் ஈட்டிவருகிறார்.
மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஸ்டெபி, எம்.பி.ஏ.பட்டதாரி. முன்னாள் ஐடி ஊழியர். அவரது கார்பரேட் பணி கொடுத்த ஸ்ட்ரெசால், துாக்கமற்று கடந்துள்ளன பல இரவுகள். ஒரு கட்டத்தில் பணியை துறந்து வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டுமிட்டார். அந்த சமயத்தில் லாக்டவுன் அமலுக்குவர, வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துறுதுறு பெண்ணான ஸ்டெபி, லாக்டவுனில் சும்மாயிருக்க முடியாமல் அக்காவின் அறிவுறுத்தலின்பேரில், பேக்கிங் கலையைக் கற்றுள்ளார். விளையாட்டாய் கற்றுகொண்ட பேக்கிங், ஸ்டெபியை தொழில் முனைவராக்கியுள்ளது.
கேக்குகள் நீக்கமற நிறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் பிசினசில் பிஸியாகயிருந்தவரிடம் பேசினோம். கிறிஸ்துமஸிற்காக 150 கேக்குகள் ஆர்டர் கிடைத்த குஷியில் இருந்தவர், பேக்கிங் ஸ்டோரியை பகிரத் தொடங்கினார்.
"அக்காவுடைய ப்ரெண்ட் அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களிடம் தான் பயிற்சி எடுத்துகிட்டேன். பேக்கிங் பொறுத்தவரை எந்தளவுக்கு நாம் கேக் செய்து பார்த்து, சொதப்பி சொதப்பி கற்றுகொள்கிறமோ, அந்தளவிற்கு கைதேர்ந்தவர்கள் ஆகலாம். என்னுடைய பயணமும் நிறைய சொதப்பல்கள் நிறைந்ததே. எங்களோட வீடு, 'ஹோம் ஸ்வீட் ஹோம்' கிடையாது. வீட்டில் யாருக்கும் ஸ்வீட் பிடிக்காது. அதுனால, கேக் செய்து அக்கம் பக்கத்து வீடுகளில் கொடுத்து ரிவ்யூ கேட்பேன்.
”100 கேக்குகள் சொதப்பி குப்பையில் போட்டுள்ளேன். ஆனால், ஆறே மாதத்தில் 1000 கேக்குகளையும் விற்பனை செய்துள்ளேன் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.
தொடக்கத்தில், அக்கம் பக்கத்து வீட்டாருடைய பேமிலி பங்ஷனுக்கு கேக் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. லாக்டவுன் சமயத்தில் தொழில் தொடங்குவதில் தயக்கம் இருந்தது. அதனால், கேக் தயாரிப்பதற்கான எந்த பொருளையும் ஸ்டாக் பண்ணி வைக்காமல் தேவைக்கு ஏற்ப வாங்கினேன்.
கடைசியாக, கடந்த ஜூன் மாதத்தில் அபீசியலாக ரூ.2000 முதலீட்டில் 'Fuffy bakes' என்ற பெயரில் பிசினசை துவக்கினேன். எதிர்பாராத அளவில் பிசினஸ் பிக்கப்பாச்சு. சாயங்கலாமாச்சுனா வீட்டுக்கு முன்னாடி கேக் வாங்க வந்திருப்பவர்களின் வண்டி வரிசைக்கட்டி நிற்கும்.
லாக்டவுன் நாட்களில் பேக்கரிகள் இல்லாததால், வந்த கூட்டம் என்று தான் நினைத்தேன். ஆனால், லாக்டவுன் ரிலீஸ் செய்த அப்புறமும் என்னைத் தேடி வந்தார்கள். கேக்குகளின் டேஸ்ட் தான் அதற்கான காரணமாகயிருந்தது.
அதனாலே, டேஸ்டில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ளக் கூடாதுனு முடிவு பண்ணேன். கேக் பேக்கிங் கிட்டத்தட்ட சைன்ஸ் தான். அளவுகள் எல்லாம் துல்லியமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு கேக் டெலிவரி செய்த அப்புறமும், 10வது, 12வது படிக்கும் மாணவர்கள் எக்ஸாம் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மனநிலையில் இருப்பேன். ஏன்னா, எல்லாருடைய சுவைமொட்டுகளையும் திருப்தி பண்ண முடியாது. ஆனா, அது தான் என் நோக்கமே.
ஒவ்வொரு கேக்கையும் கஸ்டமைஸ் பண்ணி தருகிறேன். கேக்கில் ஒரு பகுதியில் பெரியவர்களுக்கு ஏற்றாற் போன்று ஸ்வீட் குறைவாகவும் செய்து கொடுக்கிறேன். கேக்கில் ஒவ்வொரு லேயருக்கும் ஒவ்வொரு சுவை கொடுக்கமுடியும். லட்டு, ஜிலேபி, இளநீர் என எந்த ஒரு டேஸ்ட்டையும் கேக்குக்குள் கொண்டு வரமுடியும். ஒவ்வொரு ஆர்டருக்கும் தனி கவனம் செலுத்துவேன்,” என்கிறார் கேக் பேக்கிங்கில் கைத்தேர்ந்துள்ள ஸ்டெபி.
லாக்டவுன் நாட்களிலே நாளொன்றுக்கு 7 முதல் 8 ஆர்டர்கள் கிடைத்தன. ஆர்டர்கள் அதிகரிக்கவே, கிச்சனை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரிட்ஜஜில் கேக்குகளை வைக்க, பக்கத்து வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தேன்.
என் மீதும், என் கேக் மீதும் நம்பிக்கை வந்ததும் ரூ.1,00,000 முதலீடு செய்து மைக்ரோ ஓவன் மற்றும் பிரிட்ஜ் வாங்கினேன். அதுவும், பேக்கிங்கில் கிடைத்த வருமானத்தை தான் முதலீடாக்கினேன். இப்போ, மாதம் 15 முதல் 20 ஆர்டர்கள் தவறாமல் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வரை வருமானம் கிடைக்கிறது.
அதைவிட பேக்கிங், மிகப்பெரிய குடும்பத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளது, என்கிறார் ஸ்டெபி. ஏன்னா, பிசினஸ் தொடங்கிய புதிதில் சம்மர் சீசனில் கேக் உருகியிருக்கு, டெலிவரி பாய் கேக்கை ஆட்டி எடுத்து பிச்சிருக்காரு, கத்தி வைக்க மறந்திருக்கேன், ஆனா, கத்துக்குட்டியாக பீல்ட்டில் இறங்கிய என்னுடைய சிறுசிறு பிழைகளையும் கண்டுக்கொள்ளாமல் தட்டி கொடுத்து வளர்த்துவிட்டனர் என் கஸ்டமர்கள்.
கஸ்டமர்கள் தான் என்னுடைய மார்கெட்டர்கள். ஒரு குடும்பத்திலிருந்து ஒருத்தர் என்னிடம் ஆர்டர் செய்தால் போதும், தொடர்ந்து அவங்க வீட்டுக் கொண்டாட்டங்களில் என்னுடைய கேக் இடம்பெற்றிருக்கும்.
கேக் கொஞ்சம் ஸ்பெஷல் ஸ்வீட். கொண்டாட்டங்களை எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக்குபவை. கொண்டாட்டங்களின் போது என் கேக்குகள் இடம்பெறுவதால், என்னுடைய எக்ஸ்ட்ரா எஃபெக்ட்டையும் போடுவேன்.
அப்படிதான், ஒருமுறை 10 வயது மகளை பிரிந்து வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் அம்மா ஒருவர், அவரது மகளுடைய பிறந்தநாளுக்காக என்னிடம் கேக் ஆர்டர் செய்திருந்தார். அதற்காக, அவருடைய மகளுக்குப் பிடிச்சதை தெரிஞ்சுகிட்டு கார்டூன் கான்செப்டில் கேக் செய்து, என்னுடைய கிட்டுடன் கேக் டெலிவரி செய்தேன். அதை பார்த்துவிட்டு அந்த பொண்ணு அவங்க அம்மாவுக்கு போனில் முத்தமழை பொழிந்தாளாம். அவங்க அம்மா சந்தோஷத்தில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினாங்க.
”கஸ்டமர்களின் சந்தோஷத்தாலே பிசினஸ் வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு கஸ்டமரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும். அதனால, எனக்கு எதிர்காலத்தில் பேக்கிரி வைக்கும் எண்ணமில்லை. பேக்கிரில் வியாபாரம் செய்யலாம். ஆனா, எனக்கு இப்போ கிடைத்த பேமிலி கிடைக்காது,” என்று ஸ்வீட்டாக பேசினார் ஸ்டெபி.
ஸ்டெபியின் கேக் பேக்கிங் இன்ஸ்டா பக்கம்: Fuffy Bakes