உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?
புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் குற்ற உணர்வு தான் ஏற்படும்.
நீங்களும் இந்த ரகம் என்றால், கவலைப்படாதீர்கள், புத்தாண்டு உறுதிமொழியை நீங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வது தான். அந்த உறுதிமொழி தினமும் எழுத வேண்டும் என்பது தான்.
தினமும் எழுதுவதா? எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் இல்லையே என நினைக்க வேண்டாம். எழுத வேண்டும் என இங்கே டயரி எழுதுவதை தான். டயரி என்றவுடன் தினசரி நடப்பதை எல்லாம் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் உணர்வுகளை மட்டும் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
எதை எழுதுவது என்று யோசித்து திண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கையில் நீங்கள் நன்றி சொல்ல நினைக்கும் ஒரு விஷயத்தை எழுதலாம். உங்கள் சமாளிக்க முடியாத பிரச்சனை அல்லது உங்களுக்கு உள்ள பயம் பற்றி எழுதலாம். தினமும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத வேண்டும் என்பது தான் முக்கியம்.
சரி, இப்படி எழுதுவதால் என்ன பயன்?
எழுதுவது உங்கள் மகிழ்ச்சியானவராக மாற்றும். ஆம் அறிவியல் ஆய்வு அப்படி தான் சொல்கிறது. தாங்கள் நன்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் பற்றி நினைத்துப்பார்ப்பவர்கள் அல்லது மற்றவர்களுக்கு நன்றி கடிதம் எழுதுபவர்கள் தங்களைப்பற்றி நம்பிக்கை கொண்டவர்களாகவும், தங்கள் வாழ்க்கை பற்றி மேம்பட்ட உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், உணர்வுகளை எழுதுவது தங்கள் வாழ்க்கை பிரச்சனையை தாண்டி யோசிக்க வைப்பது மற்றும் வாழ்க்கை நம்மைவிட பெரிது என உணர வைப்பதுமாக இருக்கிறது. ஹார்வர்டு பல்கலை நடத்திய ஆய்வு இது:
அது மட்டும் அல்ல, எழுதுவது உங்கள் செயல்திறனையும் அதிகரிக்கச்செய்யும் வாய்ப்பிருக்கிறது. பொதுவாகவே தினமும் ஒரு விஷயத்தை செய்யும் பழக்கம் கொண்டிருப்பது உங்கள் கவனத்தை அதிகரித்து, செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வைக்கிறது. எழுதுவதை பழக்கமாக கொள்ளும் போது உங்கள் சுயமதிப்பும் அதிகரிக்கிறது. இது உங்கள் படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்தலாம். உங்களை நல்ல எழுத்தாளராகவும் மாற்றலாம்.
எழுதுவது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று கவலைப்பட வேண்டாம். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப்பார்த்து அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்ளுங்கள். இதை செய்வதன் மூலம் வாழ்க்கை நீங்கள் நினைப்பதை விட சிறந்ததாக இருக்கிறது என உணர்வீர்கள். அப்படியே உங்களை வாட்டும் பிரச்சனைகளையும் எழுதுங்கள். முதல் விஷயத்தை தவறாமல் செய்து வருவது நல்லது.
நன்றி உணர்வின் பலனை உணர்த்தும் இந்த குறிப்புகளுக்கு, கெய்லா மேதுயூஸ் எனும் இணைய எழுத்தாளருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் தான், தி நெக்ஸ்ட் வெப் இணையதளத்தில் இந்த புத்தாண்டுக்கான எனது உறுதிமொழி டயரி எழுதுவது தான் என்று கூறி, இதன் பலன்களை அழகாக விவரித்துள்ளார்: https://thenextweb.com/contributors/2017/12/26/ive-made-daily-writing-new-years-resolution/
இந்த கட்டுரையை படித்து வியந்து, எழுதுவதை புத்தாண்டு உறுதிமொழியாக கொள்வது பற்றி மேலும் தேடிப்பார்த்தால், அப்வொர்த்தி தளத்தின் அருமையான கட்டுரை இன்னும் ஊக்கம் தருகிறது. வேலையை இழந்த பொறியாளர்களில் ஒரு பிரிவினரை தினமும் எழுத வைத்த போது அவர்களில் பலருக்கு சில மாதங்களில் வேலை கிடைத்துவிட்டதாக தெரிவிக்கும் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டும் இந்த கட்டுரை, டயரி எழுதுவது மட்டுமே உங்கள் புத்தாண்டு உறுதிமொழியாக இருப்பதற்கான 9 காரணங்களை பட்டியலிடுகிறது.
எழுதுவது உங்களை மகிழ்ச்சியை அதிகமாக்குகிறது, ஆரோக்கியத்தை அதிகமாக்குகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, எடை குறைய வைக்கிறது என்றெல்லாம் காரணங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எழுதுவது நோய் எதிர்ப்பு செல்களை அதிகம் உற்பத்தி செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உணர்வுகளை எழுதுவது மனதில் உள்ள காயங்கள் ஆற வழி செய்வது மகிழ்ச்சியாக உணர வைக்கிறது.
இதே போலவே எழுதுவது புதிய வேலை கிடைக்க உதவுகிறது, பணியில் சிறந்து விளங்க வைக்கிறது, படைப்பூக்கம் கொள்ள வைக்கிறது என்றெல்லாம் இந்த கட்டுரை விவரிக்கிறது. ஆக இந்த புத்தாண்டில் தினமும் எழுதுவது எனும் உறுதிமொழியை மேற்கொள்ளுங்கள். அதன்படி தினமும் எழுதுங்கள்!
உணர்வுகளை எழுதுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை வேறு பல கட்டுரைகளும் பட்டியலிடுகின்றன.
உங்கள் மனதில் குறிப்பிட்ட இலக்கு இருந்தால் அதை புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு அது பற்றியும் எழுதி வரலாம். இலக்கு தொடர்பான உங்கள் உணர்வுகள், அதை மேற்கொள்வதில் உள்ள தடைகள் பற்றி எழுதத்துவங்கலாம்.
புத்தாண்டு பரிசாக வந்த டயரியையும், பேனாவையும் கையில் எடுங்கள், எழுதத் துவங்குங்கள். இணைய யுகத்தில் இதற்கு என்றே பிரத்யேக இணைய சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகளும் இருக்கின்றன தெரியுமா? பென்சு (https://penzu.com/ ) இணையதளம், இணைய டயரி எழுதுவதற்கான வசதியை அளிக்கிறது. டேஒன் (http://dayoneapp.com/) செயலி ஆண்ட்ராய்டி மற்றும் ஐபோனில் தினமும் இணைய டயரி எழுத கைகொடுக்கிறது.
ஆல் தி பெஸ்ட்!