‘குடியிருக்க வீடு மட்டும் போதும்’ - தன் ரூ.600 கோடி சொத்தை தானமாக வழங்கிய அரவிந்த் கோயல்!
மொராதாபாத்தின் பிரபலமான தொழிலதிபரான அரவிந்த் குமார் கோயல், தனது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள முழு செல்வத்தையும் ஏழைகளுக்காக தானம் செய்துள்ளார்.
மொராதாபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான அரவிந்த் குமார் கோயல் தனது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள முழு செல்வத்தையும் ஏழைகளுக்காக தானம் செய்துள்ளார்.
சம்பாதித்த பணத்தில் சரி பாதியையோ அல்லது குறிப்பிட்ட தொகையையோ சமூக சேவைக்காக வழங்கும் நபர்களை பார்த்திருப்போம். ஆனால், வெகு சிலர் மட்டுமே தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த செல்வம் மொத்தத்தையும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்க தயாராக இருப்பார்கள்.
அப்படி, டாக்டர் அரவிந்த் கோயல் என்ற தொழிலதிபர் தான் குடியிருக்க ஒரு வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு, 50 வருடமாக கஷ்டப்பட்டு சேர்த்த மொத்த சொத்தையும் தானமாக வழங்கியுள்ளார்.
யார் இந்த அரவிந்த் கோயல்?
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பிறந்தவர் அரவிந்த் கோயல், இவரது தந்தை பிரமோத் குமார் மற்றும் தாயார் சகுந்தலா தேவி சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆவார்கள்.
கோயலுக்கு ரேணு கோயல் என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் மதுர் கோயல் மும்பையில் வசித்து வருகிறார். இளைய மகன் சுபம் பிரகாஷ் கோயல் மொராதாபாத்தில் வசிக்கிறார் மற்றும் சமூக சேவை மற்றும் வணிகத்தில் தனது தந்தைக்கு உதவி புரிந்து வருகிறார்.
இவரது மைத்துனர் சுஷில் சந்திரா, நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்துள்ளார். இதற்கு முன், அவர் வருமான வரித்துறையின் தலைவராகவும் இருந்துள்ளார், அவருடைய மருமகன் ராணுவத்தில் கர்னல், மாமனார் நீதிபதி.
அரவிந்த் கோயல், தனது மூலதனம் அனைத்தும் ஏழைகளின் சேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வாழ்க்கை எப்போது முடியும் எனத் தெரியாது என்பதால் தான் உயிருடன் இருக்கும் போது, அவர் தனது செல்வத்தை சேவைக்காக ஒப்படைத்துள்ளார். சொத்துக்கள் அனைத்தும் ஆதரவற்றவர்கள், ஏழை மக்கள், அனாதைகளுக்கு உதவும் படி ஏற்பாடு செய்துள்ளார்.
அரவிந்த் கோயலுக்கு மொராதாபாத் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளிலும், ராஜஸ்தானிலும் பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொராதாபாத்தின் சிவில் லைன்ஸில் உள்ள கோத்தியைத் தவிர தனது முழு சொத்தையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அவர் இந்த நன்கொடையை மாநில அரசுக்கு நேரடியாக வழங்கியுள்ளார், இதன் மூலம் உண்மையாக தேவைப்படுபவர்களுக்கு உதவி சென்றடையும் என அரவிந்த் கோயல் நம்புகிறார்.
கொரோனா காலத்தில் உதவிக்கரம்:
இந்தியாவையே கொரோனா தொற்று வாட்டி வதைத்த போது மக்கள் வருமானம் இல்லாத காரணத்தால் உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் திண்டாடினர். இந்நிலையில்,
கொரோனா லாக்டவுன் காலத்தில் சுமார் 50 கிராமங்களை தத்தெடுத்த அரவிந்த் கோயல், அவர்களுக்கு உணவு, மருந்து ருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கோயலின் ஆதரவுடன், கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் இலவச சுகாதார மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்துடன் இவர்களின் உதவியுடன் இயங்கும் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
4 குடியரசு தலைவர்களால் கெளரவிப்பு:
டாக்டர் அரவிந்த் கோயலின் சமூக சேவை மனப்பான்மை நாட்டிலும், உலகின் பல்வேறு மன்றங்களிலும் கௌரவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, பிரதீபா தேவி பாட்டீல், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோர் சமூக சேவைக்காக அரவிந்த் கோயலை பாராட்டியுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கோயலின் சேவைக்காக அவரை கவுரவித்துள்ளார்
சொத்துக்களை தானமாக வழங்க முடிவெடுத்தது ஏன்?
ஒற்றை வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏழை, எளிய மக்களுக்காக தானமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கோயலுக்கு எப்படி வந்தது தெரியுமா?
25 ஆண்டுகளுக்கு முன்பு குளிரில் ஒரு ஏழை குளிர்ந்ததைக் கண்டு அனைத்து சொத்துகளையும் தானமாக வழங்க முடிவு செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, அரவிந்த் கோயல் ரயிலில் பயணிக்கும் போது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு ஏழையைப் பார்த்ததுள்ளார். உடனே தனது காலணிகளை அந்த குளிரில் நடுக்கிக் கொண்டிருந்த நபருக்கு வழங்கிய அவர், தனது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும் என அன்றே முடிவெடுத்துள்ளார். அந்தச் சம்பவத்தைப் பற்றிப் அரவிந்த் கோயல் கூறுகையில்,
“அது ஒரு குளிர் நிறந்த டிசம்பர் மாத இரவு. நான் ரயிலில் ஏறியவுடன். எதிரில் ஒரு ஏழைக் குளிரில் நடுங்குவதைக் கண்டென். அவர் காலில் சாக்ஸ், செருப்பு இல்லை. அந்த மனிதரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் என் காலணிகளைக் கழற்றி அவரிடம் கொடுத்தேன். நான் சிறிது நேரம் பொறுத்துக்கொண்டேன், ஆனால் கடுமையான குளிர் காரணமாக, என் உடல்நிலையும் மோசமடையத் தொடங்கியது,” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த மூச்சும், இந்த உடலும் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவே. அத்தகைய சூழ்நிலையில், சொத்து என்பது உலக பரிசு...” என்பதே கோயலின் கருத்து.
தனது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தானமாக கொடுத்த அரவிந்த் கோயலை, ஆயிரக்கணக்கான ஏழைகள், முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் வாழும் ஆதரவற்றோர் நூற்றுக்கணக்கானோர் அவரை வாழும் கடவுளாகவே பார்க்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக அரவிந்த் கோயலின் வழக்கம் மாறவில்லை என உள்ளூர்வாசிகள் அவரை வியந்து புகழ்ந்து வருகின்றனர்.