20 மணி நேர வேலை; மக்களுக்கு இலவச சிகிச்சை: பெங்களூரைக் காக்கும் மருத்துவர் ஹெப்பி!
மொபைல் கிளினிக் மூலம் சிகிச்சை அளிக்கும் பெங்களூரு மருத்துவர்!
பெங்களூர் நகரைச் சேர்ந்த மருத்துவர் சுனில் குமார் ஹெப்பி. சமீபத்தில் பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவர் செய்த உதவிகளை இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பெங்களூரு புருஹத் மகாநகர பாலிகே எனப்படும் கொரோனா மருத்துவமனையில் தான் ஒப்பந்த அடிப்படையில் தற்போது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரவு நேர பணி. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அந்த மருத்துவமனையில் தனது பணியை முடித்த பின் வீடு திரும்பும் அவர், அதன்பிறகான நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. சொல்லப்போனால் அவர் ஓய்வு எடுக்கும் நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே.
மீதமிருக்கும் நேரங்களில், தான் நடத்தி வரும் மொபைல் கிளினிக் எனப்படும் நடமாடும் மருத்துவமனை மூலமாக பெங்களூரு நகரம் முழுவதும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதனால்,
அவர் ஒரு நாளை 20 மணி நேரம் பணி செய்து வருகிறார். இந்த மொபைல் கிளினிக்கை இன்று நேற்று தொடங்கவில்லை மருத்துவர் ஹெப்பி. சரியாக 11 ஆண்டுகள் முன்பாகத் தொடங்கினார். அதுவும் ஒரு சம்பவத்துக்கு பின்.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள நமதாபுரத்தின் சிறிய குக்கிராமத்தில் தான் மருத்துவர் ஹெப்பியின் பூர்வீகம். இந்த கிராமத்தில் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. எதுவும் அவசரம் என்றால் 50 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் ஆரம்ப சுகாதார மையம் செல்ல வேண்டும்.
இதனால் அவரின் குடும்பத்தினர் மருத்துவ சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன்காரணமாக மருத்துவம் படித்தவர், 2010ல் ஒருமுறை - ஓசூர் - சென்னை சாலையில் பயணிக்கும் ஒரு விபத்தை கண்டு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய முதலுதவி செய்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரின் இந்த உதவியால் அந்த விபத்தில் சிக்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
மறுநாள், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் தாய் ஹெப்பியை அழைத்து, தனது ஒரே குழந்தையை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்த அந்த சம்பவம் அவரை அதிகமாக பாதித்துள்ளது. இதையடுத்து, அவசர மருத்துவத் தேவைகளுக்கு உதவும் வகையில் இந்த மொபைல் கிளினிக்கை ஆரம்பித்து இருக்கிறார் ஹெப்பி. அதுவும் 11 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மொபைல் கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு அவரிடம் மருத்துவச் சிகிச்சை உதவி கேட்டு நிறைய பேர் அழைத்துள்ளனர். அதன்பிறகே மொபைல் கிளினிக்கை தினமும் நடத்த தொடங்கியிருக்கிறார்.
அதன்படி,
இரவுநேர ஷிப்ட்டை முடித்தபின் தினமும் காலை 10 மணியளவில், பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து தனியாக தங்கியிருக்கும் அல்லது மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நோயாளிகளுக்கு - மூத்த குடிமக்கள் அல்லது லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். முழு நேரமும் கிளினிக் செயல்பட ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள், அவர் 250 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திருக்கிறார்.