பயிற்சி மையத்தில் சேராமலே கலெக்டர் ஆகும் பீடித் தொழிலாளி மகன்: 2வது முயற்சியில் 27வது இடம் பெற்று சாதனை!
பீடி சுற்றும் தொழிலாளியின் மகனான நந்தலா சாய் கிரண், எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், சொந்த முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். இதோ அவரது வெற்றிக்கதையை விரிவாகப் பார்க்கலாம்...
நல்ல பள்ளியில், பயிற்சி மையத்தில் படித்தால்தான், நன்கு படித்து நல்ல பதவியில் அமர முடியும் என்ற அவசியம் இல்லை. வறுமை வாட்டினாலும், பயிற்சி மையத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும், வேலை பார்த்துக் கொண்டே படித்து ஐஏஎஸ் ஆகலாம் என நிரூபித்திருக்கிறார் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான நந்தலா சாய் கிரண்.
வறுமையான குடும்பச் சூழல்
தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் அருகே உள்ள வெளிச்சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் கிரண். இவரது தந்தை கந்தா ராவ் ஒரு கைத்தறி தொழிலாளி. கடந்த 2016ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக, கந்தா ராவ் மரணமடைய, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு சாய் கிரணின் அம்மா லட்சுமியின் வசம் வந்தது. பீடி சுற்றும் தொழிலாளியான அவர், படிப்பு ஒன்றே தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் என கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.
குடும்பத்தின் வறுமையான சூழலை மனதில் வைத்து, சாய் கிரணும், அவரது சகோதரி முடதா ஸ்ரவந்தியும் நன்றாக படித்தனர். 2012ம் ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வில், 98 சதவீத மதிப்பெண்களுடன், 9.8 ஜிபிஏ பெற்றுத் தேர்வானார் சாய் கிரண். வாராங்களில் உள்ள என்.ஐ.டி-யில் பி.டெக் முடித்த சாய் கிரண், மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் சீனியர் ஹார்டுவேர் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார்.
சிறுவயது முதலே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தபோதும், குடும்பச்சூழல் காரணமாக பயிற்சி மையம் எதற்கும் சென்று, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள அவரால் முடியவில்லை. ஆனபோதும், வேலைக்குச் சென்று கொண்டே, 2021ம் ஆண்டு முதல் தனது தேர்வுகளுக்கு அவர் தயாராகத் தொடங்கினார். பணி முடிந்து வீடு திரும்பிய பிறகும், வார இறுதிநாட்களிலும் தனது சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அவர் தீவிரமாக படித்தார்.
இன்ஸ்பிரேஷன்
கடந்த 2021ம் ஆண்டு முதன்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை அவர் எழுதினார். அப்போது நேர்முகத் தேர்வு ரவுண்டு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் மனம் தளரான சாய் கிரண், மீண்டும் தீவிரமாகப் படித்து, தனது இரண்டாவது முயற்சியில் இம்முறை ஐஏஎஸ் ஆகி இருக்கிறார். கடந்தாண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் அவர், 27வது இடத்தைப் பிடித்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தபோதும்,
தங்களது கடுமையான முயற்சியால் இந்தளவிற்கு உயர்ந்திருக்கும் சாய் கிரணும், அவரது சகோதரியும், ‘தங்களது இந்த வெற்றிக்கு மூலகாரணம் தங்களது தாய்தான்’ எனத் தெரிவித்துள்ளனர். அவரது விடாமுயற்சியையும், உழைக்கும் திறனையும் பார்த்தே தாங்கள் உழைத்து, வாழ்க்கையில் முன்னேறியதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ‘சரியான திட்டமிடல், வேலையையும் பார்த்துக் கொண்டே நேரத்தை திட்டமிட்டு நிர்வகித்தது, பயிற்சி மையத்திற்கு செல்லாவிட்டாலும் ஆன்லைனைப் பயன்படுத்தி தேர்வுக்கு தயாரானது’ போன்றவையே இரண்டாவது முயற்சியிலேயே சிவில் சர்வீஸில் தான் வெற்றி பெற காரணமாக அமைந்தது என்கிறார் சாய் கிரண்.
அதோடு, இதற்கு முன்னர் சிவிஸ் சர்வீஸில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைப் பாடங்களே தனக்கு வழிகாட்டியாக இருந்தது எனவும் தனது வெற்றிக்கான காரணமாக அவர் கூறுகிறார்.
கற்றுக் கொண்ட நுணுக்கங்கள்
“ஒன்று முதல் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் எப்படி கேள்விகள் கேட்கப்படுகின்றன, மாணவர்களின் அறிவை அவர்கள் எப்படி சோதிக்கின்றனர் என்பதையெல்லாம் ஆய்வு செய்து, சில தரவுகளைச் சேகரித்தேன். என்னைப் போலவே வேறுபல துறைகளில் இருந்து வந்து, இதே நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, சிவில் சர்வீஸில் தேர்ச்சி பெற்றவர்களின் பிளாக்குகள் மற்றும் பேட்டிகளைப் பார்த்தேன். அவற்றின் மூலமும் என பல ஐடியாக்கள் கிடைத்தன. அவற்றையெல்லாம் ஒன்றாகப் பயன்படுத்திதான், நான் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகத் தொடங்கினேன்.
“அலுவலகத்தில் இருந்தாலும், மதிய உணவு இடைவேளையில்கூட நான் தேர்வுக்கு சம்பந்தமானவைகளைத்தான் ஆன்லைன் மூலமாகப் படித்தேன். என் வார இறுதி நாட்களை மொத்தமாக தேர்வுகளுக்கென்றே அர்பணித்து கொடுத்துவிட்டேன். நான் கற்றுக் கொண்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தினால், குறைந்த முயற்சியிலேயே நிச்சயம் எதிர்பார்க்க முடியாத அளவு வெற்றியைப் பெற முடியும் என நம்பினேன். தற்போது அதைத்தான் செயலிலும் செய்து காட்டி இருக்கிறேன்,” என்கிறார் சாய் கிரண்.
அவரது சகோதரியான முடதா ஸ்ரவந்தி தற்போது தெலுங்கானா மாநில ஊரக நீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளரான பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று காலமான தாத்தாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த பேத்தி