'குட்பாக்ஸ்' - இது வர்த்தகத்துக்கான வாட்ஸப்!
அதிகாலைப் பொழுதுகளில் சூடாய் நெஞ்சில் பரவும் தேநீருக்கான பாலாய் இருக்கட்டும், பசித்த பொழுதுகளில் கொறிக்கும் சிறுதீனிகளாய் இருக்கட்டும், சகலமும் நமக்கு அருகிலிருக்கும் கடைகளிலேயே கிடைக்கின்றன. இதில் ஏதாவது ஒன்று தீர்ந்து போனாலும் பொடிநடையாய் சென்று வாங்கிவந்துவிடுவோம். இனி அந்த பொடிநடை கூட தேவையில்லை என உங்களிடம் யாராவது கூறினால்? இருந்த இடத்தில் இருந்தே வேண்டிய பொருட்களை அருகிலிருக்கும் கடையில் ஆர்டர் செய்வதற்கு ஒரு செயலி இருந்தால் எப்படி இருக்கும்? இருக்கிறது என்கிறார்கள் சில இளைஞர்கள். "குட்பாக்ஸ்"( Goodbox) - இந்த செயலியின் வழியே நீங்கள் எந்தப் பொருட்களையும் வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
“செயலிக்கள்தான் எதிர்கால வர்த்தகத்தின் இயங்குதளம் என்பதை விற்பனையாளர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அதற்காக பிரத்யேகமாக ஒரு செயலியை உருவாக்குவதில் உள்ள சிரமங்கள்தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. மேலும், பால் வாங்க ஒரு செயலி, அரிசி பருப்பு வாங்க ஒரு செயலி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலியும் உருவாக்க முடியாது. எத்தனை செயலிக்களைத்தான் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்வார்கள்? எனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்குமான ஒரே செயலியை உருவாக்க திட்டமிட்டோம்” என்கிறார் குட்பாக்ஸின் நிறுவனர்களில் ஒருவரான மயாங்க் பிடாவட்கா. மயாங்க் பயணசீட்டுகளை பதிவு செய்யும் தளமான ரெட்பஸ்( RedBus) தளத்தின் தலைமைக்குழுவில் ஒருவராய் இருந்தவர். மேலும் விளம்பரங்களுக்கென செயல்படும் தி மீடியா ஆன்ட்( The Media Ant) தளத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
“இதற்காக தொடங்கப்படும் செயலி மிகவும் எளிமையானதாக, அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அப்போதுதானே சிறு, குறு வர்த்தகர்களும் அவர்களின் வாடிக்கையாளர்களும் சுலபமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்?” என அர்த்தத்தோடு கேட்கிறார் மயாங்க்.
இந்த செயலிக்கான ஐடியாவை முதலில் முன்மொழிந்தவர் அபய் ஜக்காரியா. இவர், மயாங்க், நிதின் சந்திரா, மோகித் மகேஸ்வரி ஆனந்த், மகேஷ் கர்லே, சரண்ராஜ் ஆகியோரோடு ரெட்பஸ் இணையதளத்தின் தலைமைக்குழுவில் இருந்தவர். ரெட்பஸ் தளத்தின் மார்க்கெட்டிங் ஹெட்டாய் இருந்த மயாங்க் இந்த முயற்சியில் தொடக்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் இந்த செயலியால் வாழ்வு பெறப்போகும் வணிகர்களின் நிலையை எண்ணிப்பார்த்த பின் இணைந்துகொண்டார்.
“புதிது புதிதாய் யோசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ரெட்பஸ், தி மீடியா ஆன்ட், இப்போது குட்பாக்ஸ் என இந்த மூன்று தளங்களுமே மிகவும் வித்தியாசமானவை. இதற்கு முன் மற்ற யாரும் முயற்சித்துப் பார்க்காத ஐடியாக்கள். இப்படியான ஐடியாக்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் அற்புதமான அனுபவம். காரணம், இப்படித்தான் செயல்பட வேண்டும் என எந்த முன்மாதிரியும் இருக்காது. நீங்கள் செய்ய நினைத்தவற்றை எல்லாம் செய்யலாம். இதனால், சொந்தமாய் தொழில் தொடங்கும் எண்ணமுள்ள, சவால்களை சந்திக்க தயாராய் இருக்கும் ஆட்களைத்தான் வேலைக்கு எடுக்கிறோம்” என உற்சாகமாய் கூறுகிறார் மயாங்க்.
வியாபாரமும் அதன் வாடிக்கையாளர்களும்
“வர்த்தகம் அவ்வப்போது முன்னேறும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களின் வாடிக்கையாளர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருக்கவேண்டும். தங்கள் கடைக்கென பிரத்யேக செயலி பக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வசதிகளை எல்லாம் குட்பாக்ஸ் அளிக்கிறது” என்கிறார் மயாங்க்.
முன்பே மயாங்க் சொன்னதுபோல் இன்றைய உலகம் செயலிக்களால் ஆனது. ஸ்மார்ட்போன்களும் இணைய வசதியும் எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாகிவிட்டன. இதனால் சந்தையில் எக்கச்சக்கமான செயலிகள் இறைந்துகிடக்கின்றன. இவற்றில் எதை தங்களின் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது என்ற குழப்பம் வியாபாரிகளிடம் இருக்கவே செய்கிறது.
“வியாபாரிகளிடம் இந்த குழப்பம் இருப்பது நிஜம்தான். குட்பாக்ஸை பொறுத்தவரை நம்பிக்கையான பரிவர்த்தனைகளுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கும் சொல்ல ஒரு விஷயமிருக்கிறது. உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளோடு நீங்கள் பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் சரி, புதிதாய் ஒரு கடையை தேடிக் கண்டுபிடித்தாலும் சரி, ஏமாற்றத்திற்கு இங்கு இடமே இல்லை. இந்த செயலி மூலம் கடைக்காரர்களிடம் நீங்கள் அளவளாவ முடியும். பொருட்களை ஆர்டர் செய்ய முடியும். அதற்கு பணமும் செலுத்த முடியும்” என நம்பிக்கையளிக்கிறார் மயாங்க்.
வர்த்தகத்திற்கான வாட்ஸப்
“வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாதவர்களே இல்லை என்னுமளவிற்கு கோடிக்கணக்கான பயனாளிகள் அந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். எனவே அதே வடிவத்தில் எங்களின் செயலியை வடிவமைத்தால் பயன்படுத்த எளிமையாய் இருக்குமே என யோசித்தோம். இந்த செயலியில் நீங்கள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள முடியும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் வேறு யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தங்களின் விற்பனையாளரோடு நேரடியாகவே பேசிக்கொள்ள முடியும்” என்கிறார் மயாங்க்.
இழுபறிகளுக்கு முடிவு
இரண்டு மாதங்களுக்கு முன்வரை இந்த செயலி சோதனை முயற்சியாகத்தான் செயல்பட்டு வந்தது. செயல்பாட்டிற்கு வந்த இந்த இரண்டு மாதங்களில் சுமார் ஐம்பது மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. டாக்ஸிபார்ஸ்யூர்( TaxiForSure) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான அப்ராமேயா ராதாகிருஷ்ணா, ரெட்பஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான சரண் பத்மராஜு, மணிபால் குழுமம் (Manipal Group) ஆகியோர் இந்த செயலியில் முதலீடு செய்திருக்கிறார்கள். சிறு, குறு வணிகங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல குட்பாக்ஸ் குழு உறுதி பூண்டுள்ளது. அதில் ஒரு முயற்சியாக இப்போது பெங்களூரில் இருக்கும் வர்த்தக நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள். “எல்லா சிறு, குறு வணிகங்களும் குட்பாக்ஸின் வழியாக எளிமையாக நடைபெற வேண்டும். அந்த நாளை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் மயாங்க்.
வளர்ந்துவரும் வாய்ப்பு
இந்திய வர்த்தக பரிவர்த்தனைகளை உற்று கவனித்துவரும் ‘இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த சங்கம்’ (The Associated Chambers of Commerce and Industry of India) எடுத்த புள்ளிவிவரத்தின்படி கடந்த ஆண்டு 40 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 65 மில்லியன் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் இந்தியாவில் இணைய வர்த்தகத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கெனவே இணைய வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் பெருநிறுவனங்கள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசித்துவருகின்றன.
செயலி பதிவிறக்கம் செய்ய: GoodBox