20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை மீட்டு சிகிச்சை அளித்துள்ள ஆர்வலர்!
ஜோத்பூரைச் சேர்ந்த குல்தீப் கத்ரி 2021-ம் ஆண்டு Dog Home Foundation பதிவு செய்து நாய்கள் மட்டுமல்லாது இதர விலங்குகளுக்கும் சிகிச்சையளித்து நலமுடன் வாழ உதவி வருகிறார்.
குல்தீப் கத்ரி ஜோத்பூரைச் சேர்ந்தவர். சைபர் செக்யூரிட்டி பணியில் இருக்கிறார். இவருக்கு சிறு வயது முதலே நாய்கள் என்றால் பிடிக்கும்.
2014ம் ஆண்டு ஒரு நாய்க்கு விபத்து ஏற்பட்டதைப் பார்த்தார். யாரும் அதற்கு உதவ முன்வரவில்லை. குல்தீப் உடனடியாக உதவி செய்ய முன்வந்தார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட அரசு காப்பகங்களையும் மருத்துவமனைகளையும் அணுகினார். எங்குமே அந்த நாய்க்கு சிகிச்சையளித்து அடைக்கலம் கொடுப்பதற்கான சேவையோ வசதியோ இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

“அன்று இரவு அந்த நாயை சுமந்துகொண்டே சாலையில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அதற்கு ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது. என் கைகள் முழுவதும் ரத்தம். நேரம் சென்றுகொண்டே இருந்தது. யாரும் உதவ முன்வரவில்லை. மனமுடைந்து போனேன். வாயில்லா ஜீவன்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் ஆழமாக வேரூன்றிய தருணம் அது,” என குல்தீப் விவரிக்கிறார்.
அரசு தங்குமிடம் ஒன்றுடன் கைகோர்த்து சாலையில் இருக்கும் நாய்களுக்கு உதவத் தீர்மானித்தார் குல்தீப். உணவும் மருத்துவச் சிகிச்சையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினார். இருப்பினும் அது அரசு நிறுவனம் என்பதால் ஏற்கெனவே இருந்த கட்டமைப்புகளை மாற்றுவதற்கான உரிமை குல்தீப்பிற்கு அளிக்கப்படவில்லை. அங்கிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் பிறகு, 2021ம் ஆண்டு டாக்டர் கல்லு ராம் சௌத்ரி, பிரமோத் சன்க்லா ஆகியோருடன் இணைந்து Dog Home Foundation தொடங்கினார் குல்தீப். ஆதரவற்று சாலையில் இருக்கும் நாய்களைக் காப்பாற்றி மகிழ்ச்சியுடன் வாழ உதவவேண்டும் என்கிற நோக்கத்துடன் ஜோத்பூரைச் சேர்ந்த இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
இல்லம் அமைக்கப்பட்டது
மூவரும் சேர்ந்து சாலையில் இருந்த நாய்களுக்கும் பூனைகளுக்கும் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதற்காக பிரத்யேகமாக இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
குல்தீப் பண்ணைவீடு கட்டுவதற்காக ஒரு நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்தை தங்குமிடமாக மாற்றினார்.

நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார்கள். விரைவில் பல அழைப்புகள் வரத் தொடங்கின. 2021ம் ஆண்டு Dog Home Foundation பதிவு செய்யப்பட்டது.
இன்று 50 பேர் கொண்ட குழுவாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டில் 20,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சையளித்துள்ளதாகவும் தினமும் நாய்களை மீட்பதற்காக சுமார் 100 அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் குல்தீப் தெரிவிக்கிறார்.
விலங்குகளுக்கு உதவி
ஆரம்பத்தில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் உதவுவதற்காகவே Dog Home Foundation தொடங்கப்பட்டது. ஆனால் இன்று மற்ற விலங்குகளுக்கும் உதவி வருகிறது.
இந்த ஃபவுண்டேஷன் முழுநேரமாக இயங்கி வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு ஷிஃப்டும் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ஒரு ஷிஃப்டும் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஷிஃப்டிலும் ஐந்து நர்ஸ் பணியாற்றுகின்றனர்.
இந்நிறுவனம் ஆம்புலன்ஸ் சேவைகளையும் வழங்குகிறது. எக்ஸ்ரே இயந்திரம், ரத்த பரிசோதனை வசதி, இதர மருத்துவ சாதனங்களும் இங்கு இருக்கின்றன. காயம்பட்ட நாய்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேலும், ஒரு ஹைட்ரோதெரபி இயந்திரத்தில் குல்தீப் முதலீடு செய்திருக்கிறார். இதன் விலை 33 லட்ச ரூபாய். முடங்கிப்போன நாய்கள் சொந்த காலில் நிற்க இந்த இயந்திரம் உதவும்.
Dog Home Foundation தொடங்கப்பட்ட பிறகு முடங்கிப்போயிருந்த 1,800-க்கும் மேற்பட்ட நாய்கள் மீண்டும் நிற்கவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் உதவி செய்யப்பட்டுள்ளது.
“இந்த ஃபவுண்டேஷன் ஒரு மருத்துவமனை போல் இயங்குகிறது. வெறும் தங்குமிடம் அல்ல. சிக்கலான கேஸ்கள் இங்கு வருகின்றன. மற்றவை சிகிச்சையளிக்கப்பட்டு அவற்றின் இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுகின்றன,” என்கிறார் குல்தீப்.
மக்கள் நன்கொடை அளிக்கின்றனர். இம்பேக்ட் குரு போன்ற கூட்டுநிதி பிரச்சார தளங்கள் மூலம் உதவி கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு 30 சதவீத செலவுகள் சமாளிக்கப்படுகின்றன. மீதமிருக்கும் தொகையை நிறுவனர்கள் செலவு செயகின்றனர்.
“ஒரு குழுவாக இயங்குகிறோம். விலங்குகள் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்கிறார் குல்தீப்.
வரும் மாதங்களில் ஜோத்பூரில் பத்து மருத்துவமனைகள் திறக்க Dog Home Foundation திட்டமிட்டுள்ளது. இங்கு பால், உணவு போன்றவை இலவசமாக விநியோகிக்கப்படும்.
வருங்காலத்தில் கருத்தடை திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா