ஆண்டுக்கு 300% வளர்ச்சி; ரூ.1.8 கோடி வருவாய்: ஹைட்ரோபோனிக் முறையில் கலக்கும் இளைஞர்!
குருகிராம் பகுதியைச் சேர்ந்த Barton Breeze ஸ்டார்ட் அப் ரசாயனங்களற்ற, சுத்தமான காய்கறிகளை விளைவிப்பதற்காக, முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் ஹைட்ரோபோனிக் பண்ணை அமைக்கிறது.
வெளியில் சாப்பிடுவதை விட வீட்டில் சமைத்து சாப்பிடுவதுதான் நல்லது என நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் வீட்டில் சமைப்பதற்கு வாங்கும் காய்கறிகள் ரசாயனங்கள் இன்றி இருப்பதை நம்மால் உறுதி செய்யமுடியுமா?
காய்கறிகளின் விளைச்சல் அதிகரிப்பதற்காக ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயன்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் மண்ணில் தேங்கிவிடுவதால் காய்கறிகளில் அதிகளவில் ரசாயனங்கள் கலந்துவிடுகின்றன. இதன் விளைவாக காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடுகிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது குருகிராமைச் சேர்ந்த Barton Breeze. ஷிவேந்திரா சிங் 2016-ம் ஆண்டு துபாயில் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். விவசாயப் பிரிவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்நிறுவனம் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கவனம் செலுத்துகிறது.

ஷிவேந்திரா சிங்
இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மினரல் ஊட்டச்சத்து தீர்வுகள் பயன்படுத்தப்பட்டு மண்ணில்லாமல் செடிகள் வளர்க்கப்படும். இதில் தண்ணீர் பயன்பாடு குறையும் என்பதுடன் விளைச்சல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் வருடம் முழுவதும் சுத்தமான உணவை உட்கொள்ளவேண்டும். பருவநிலை காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. இந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டது Barton Breeze. 2017-ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது.
தற்சமயம் Barton Breeze, 28 வகையான பயிர்களை விளைவிக்கின்றன. எட்டு வெவ்வேறு நிறங்களில் குடைமிளகாய், லெட்யூஸ்,வெவ்வேறு வகையான தக்காளி போன்றவை இதில் அடங்கும்.
ஆரம்பகட்டம்
ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டப்படிப்பை முடித்த ஷிவேந்திரா, துபாயில் லேண்ட்மார்க் குழுமத்தில் வேலை செய்தார். 2016-ம் ஆண்டு ஹைட்ரோபோனிக்ஸ் முறையை சோதனை செய்தார். துபாயில் இரண்டு கண்டெயினர் பண்ணை அமைத்தார். அந்த சமயத்தில்தான் அக்ரோ டெக்னாலஜிஸ்ட் ரத்னாகர் ராய் என்பவரை சந்தித்தார்.
“ஹைட்ரோபோனிக் முறை விவசாயத்திற்கான தேவை இருப்பது பற்றி நாங்கள் இருவரும் கலந்து பேசினோம். இரண்டாவது ஆராய்ச்சி பிராஜெக்டில் அவர் என்னுடன் இணைந்துகொண்டார்,” என்கிறார் ஷிவேந்திரா.
இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிறகு ரத்னாகர் Barton Breeze இணை நிறுவனராக இணைந்தார்.
“விவசாய செயல்பாடுகளில் ரத்னாகர் ஆதரவளித்த நிலையில் துரித வளர்ச்சிக்கு தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டது. அப்போதுதான் தீரஜ் எங்களுடன் சேர்ந்துகொண்டார்,” என்கிறார்.

ஷிவேந்திரா சிங் மற்றும் ரத்னாகர் ராய்
35 வயது தீரஜ் இந்தியா, யூகே, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள மென்பொருள் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனங்களில் 14 ஆண்டுகள் வேலை செய்த அனுபவமிக்கவர்.
இந்தியாவில் செயல்படத் தொடங்கிய ஓராண்டிலேயே ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தர்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் முழுமையான ஆட்டோமேட் செய்யப்பட்ட ஆறு பண்ணைகளை இந்நிறுவனம் அமைத்தது.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் தரக்கட்டுப்பாடு
Barton Breeze பண்ணைகளை அமைக்கிறது. அவற்றை நிர்வகித்து விளைச்சலை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் கிடைப்பதுடன் தரமும் உறுதிசெய்யப்படுகிறது.
”நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு செடியின் இலை மற்றும் தண்டுப்பகுதியில் ஒரு சாதனத்தைப் பொருத்திவிடுவோம். எங்கள் மென்பொருள் கணிணியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட செடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து அல்லது மினரல் தேவைப்பட்டால் அது பயனருக்குத் தெரியப்படுத்தும்,” என்கிறார் ஷிவேந்திரா.
சப்ளையர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நியூட்ரியண்ட் ஃபிலிம் டெக்னிக் சானல், ஹோம் கார்டெனிங் எசன்ஷியல்ஸ் போன்ற சில ஹைட்ரோபோனிக் தயாரிப்புகள் இந்நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்தத் தயாரிப்புகளை சில்லறை வர்த்தக முறையில் விற்பனையும் செய்து வருகிறது. இதன் மூலம் 15 சதவீத வருவாய் ஈட்டப்படுவதாக ஷிவேந்திரா தெரிவிக்கிறார்.
வணிக மாதிரி
Barton Breeze அதன் வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி முறையில் செயல்படும் பண்ணைகளை அமைத்துக் கொடுக்கிறது. பிறகு இந்த பண்ணைகள் ஆண்டு சேவை ஒப்பந்த அடிப்படையில் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.
“ஆண்டு சேவை ஒப்பந்தப்படி குறைந்தபட்சம் 30 சதவீதம் முதலீட்டின் மீது லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் அவர்களே நிர்வகித்து சந்தைப்படுத்திக்கொள்ளலாம்,” என்கிறார்.
தற்சமயம் இந்தியாவில் Barton Breeze அமைத்துள்ள எட்டு பண்ணைகளில் இரண்டு பண்ணைகளை இந்நிறுவனமே நிர்வகித்து வருகிறது. இங்கு நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
“பண்ணையின் அளவு மற்றும் இதர காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மொத்த விற்பனை வருவாயில் 9 முதல் 14 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கிறோம்,” என்கிறார் ஷிவேந்திரா.
Hero Steel, True Leaf, Milkbasket, Naffaq, JVL போன்றவை Barton Breeze முக்கிய வாடிக்கையாளர்கள் ஆகும்.

நுகர்வோர் குறைவான நேரமும் முதலீடும் செலவிட்டு உணவுப் பொருட்களை விளைவித்துக்கொள்ள உதவும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் ’ஹோம் க்ரோயிங் கிட்’ வழங்குகிறது.
கட்டணம் மற்றும் வருவாய்
முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் ஹைட்ரோபோனிக் பண்ணை அமைக்க ஒரு சதுர அடிக்கு 2,500 ரூபாய் ஆகும் என்கிறார் ஷிவேந்திரா. பாலிஹவுஸ் அமைக்கக் கூடுதலாக ஒரு சதுர அடிக்கு 1,400 ரூபாய் ஆகும்.
“பண்ணை அளவு அதிகரிக்கும்போது செலவு குறையும்,” என்கிறார். 2017-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் 1.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 2018-ம் ஆண்டில் 300 சதவீதமாக இருந்துள்ளது.
Barton Breeze நிறுவனம் ஹைட்ரோபோனிக் பண்ணை அமைப்பது மட்டுமல்லாது விவசாயியாகவும் சில்லறை வர்த்தகராகவும் செயல்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா