நிறுவனங்கள் சாட் செய்ய உதவும் ஐஃப்ளை சாட்!
2013ல், தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த தருணம் வரை ஐஃப்ளைசாட்(iFlyChat) கடந்து வந்த தூரமென்பது மிகவும் அதிகம். சாஷ்வத் ஸ்ரீவத்சவா, சுபம் குப்தா ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நிறுவனங்கள் தங்களுக்குள் சாட் செய்து கொள்ள ஏதுவான தளத்தை வழங்குகிறது. சாஸ் (Software as a service) எனப்படும் சந்தா முறையில் இந்த தளம் இயங்குகிறது. இந்த சாப்ட்வேரை அந்தந்த நிறுவனங்கள் தங்களின் அதிகாரபூர்வ தளத்தில் ஒருங்கிணைத்துக் கொண்டால் அதே சாப்ட்வேர் பயன்படுத்தும் பிற தளங்களோடு பேசிக்கொள்ள முடியும்.
ஒன் டூ ஒன் சாட், குரூப் சாட், சாட் ரூம் என பல வசதிகளை இந்த தளம் வழங்குகிறது. இவை அனைத்தையும் நம் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சாட் வசதிகளை நிறுவனங்களின் இணையதளங்களில் இரண்டு வகையில் பயன்படுத்தலாம். ஒன்று, பேஸ்புக்கில் இருக்கும் சாட் வசதிகளை போன்ற பாப் அப் சாட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அந்த இணையதளங்களில் தனி வசதியாக இணைத்துக்கொள்ளலாம். அதேசமயம் இந்த சாட்டை நிர்வகிக்கும் நிர்வாகிகள் சாட் வசதிகளையும் சாட் செய்பவர்களையும் கண்காணிக்கும் வசதியையும் வழங்குகிறது ஐஃப்ளைசாட். இப்படியான வசதிகள் வாடிக்கையாளர்கள் இந்த தளத்தை அதிக நேரம் பயன்படுத்த உதவியாய் இருக்கின்றன. இந்த சாட்டின் பிளக்-இன் வேர்ட்பிரஸ் வழியே பலதளங்களுக்கும் செல்லும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது. மேலும் இந்த சாட் வசதியை உலகளாவிய வேர்ட்பிரஸ் நெட்வொர்க்கிலும் நிறுவ முடியும்.
ஐஃப்ளைசாட்டின் விதை 2012 மார்ச் மாதம் போடப்பட்டது. அதே ஆண்டின் ஜுன் மாதத்தில் இதன் ட்ரையல் வெர்ஷனை இருவரும் வெளியிட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இந்நிறுவனம் வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. “இந்த ஓராண்டில் நாங்கள் நிறையவே முதிர்ச்சி அடைந்திருக்கிறோம். தகவல் பரிமாற்ற வசதிகளை மேம்படுத்தி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதிலிருந்து யூஸர் இன்டர்பேஸை எளிமைப்படுத்துவது வரை இந்த தளம் நிறைய பாசிட்டிவ் மாற்றங்களை சந்திந்திருக்கிறது” என்கிறார் சாஷ்வத்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் சாட் அனாலிட்டிக்ஸ் உள்ளிட்ட நிறைய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகிறார்கள் இவர்கள்.
ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் மொபைல்களில் சாப்ட்வேர்களை டெவலப் செய்ய உதவும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட்டை டிசைன் செய்து சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பில் ஆன்லைனில் இருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அந்த நிறுவனம் பயன்படுத்தும் வசதிகள் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறார்கள் ஐஃப்ளைசாட் நிறுவனத்தினர். இதன் வாழ்நாள் இலவச திட்டம், ஆன்லைனில் பத்து வாடிக்கையாளர்கள் வரை சாட் செய்ய அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள தனித்தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்த ஓராண்டில் ஐஃப்ளைசாட் ஐந்து மடங்கு வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த தளத்தை பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்திலிருந்து முப்பதாயிரம் என வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பத்து மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் குழுவிலுள்ள ஆட்களின் எண்ணிக்கையும் மூன்றிலிருந்து ஏழாக உயர்ந்திருக்கிறது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி இதுவரை சீரான வேகத்தில்தான் இருக்கிறது. இப்போது இந்த குழு தங்கள் தளத்தை மேலும் செம்மைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. கூடிய விரைவில் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார்கள்.