இந்திய இதிகாசங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலப்படுத்தும் எரிக் சோப்ரா!
எரிக் சோப்ரா, குத்ரத் சிங் இணைந்து நிறுவியுள்ள itihasology கடந்த மூன்றாண்டுகளில் 45,000 பேர் கொண்ட வலுவான சமூகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
பொது கொள்கை வகுக்கப்படுவதிலும் சட்ட உரிமைகளிலும் வரலாறு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினருக்கும் இது பொருந்தும்.
வரலாற்று ஆய்வாளர்களான ருத் வனிதா, சலீம் கித்வை எழிதிய Same Sex Love in India புத்தகத்தை மேற்கொள் காட்டி 2018-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை என்பது மேற்கத்திய கலாச்சரம் அல்ல என்றும் இந்திய வராற்றுடனும் பலதரப்பட்ட பாரம்பரியத்துடனும் தொடர்புடையதுதான் என்றும் சுட்டிக்காட்டி சட்டம் 377-ஐ ரத்து செய்தது.
எரிக் சோப்ரா
இணை நிறுவனர். இவருக்கு தற்போது 21 வயதாகிறது. Same Sex Love in India புத்தக வாசிப்பும் இவர் வயதை ஒத்தவர்களின் ஆதரவும், இவரது எண்ணத்தை தனித்துவமான விதத்தில் வெளிப்படுத்த உதவியிருக்கிறது.
வளரும் பருவத்தில் கிடைத்த அனுபத்தைப் பற்றி எரிக் கூறும்போது,
“நான் ஹைஸ்கூலிலும் கல்லூரியிலும் படித்தபோது, எல்ஜிபிடிக்யூ+ (queer people) சமூகத்தினர் பலர் எனக்கு அறிமுகமானார்கள். இவர்களுடன் பேசும்போது நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். தவறான படிப்பினைகளை மாற்றிக்கொண்டேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்கினோம். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு அன்பு காட்டினார்கள். எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுவதில்லை,” என்கிறார்.
மக்கள் அவர்களது வரலாற்றைப் புரிந்துகொள்வதில்லை. இந்தப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை. இது அவரவர் அணுகுமுறை சார்ந்தது; சிக்கலானது; மாறும்தன்மை கொண்டது என்பதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இவற்றை எரிக் கவனித்தார்.
இந்தப் புரிதல் காரணமாக itihasology என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2019-ம் ஆண்டு தொடங்கினார். வரலாறு தொடர்புடைய உரையாடல்களை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம். பாலுணர்வு மற்றும் பாலினம், கலை மற்றும் கட்டிடக்கலை, ஃபேஷன் மற்றும் சினிமா, உணர்ச்சிப்பூர்வமான வரலாறு போன்ற வரலாற்றுப் பிரிவுகள் இதில் அடங்கும்.
“அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பகுதியை நாங்கள் உருவாக்க விரும்பினோம். இதில் எல்லோரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கானது அல்ல, எல்லோருக்குமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம்,” என்கிறார் எரிக்.
எரிக் பலகட்டமாக பரிசோதனைகள் மேற்கொண்டார். இணை நிறுவனர் குத்ரத் சிங் மற்றும் குழுவினர் உதவியுடன் கடந்த மூன்றாண்டுகளில் 45,000 பேர் கொண்ட வலுவான சமூகமாக itihasology வளர்ச்சியடைந்திருக்கிறது.
இக்குழுவினர் சமூக வலைதள செயல்பாடுகளுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஹெரிடேஜ் வாக், மியூசியம் வாக் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கின்றனர். வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோருடன் இணைந்து அமர்வுகள் ஏற்பாடு செய்கிறார்கள். மேலும் ’the itihasology Journal’ என்கிற டிஜிட்டல் பத்திரிக்கையையும் வெளியிடுகிறார்கள். இந்த பத்திரிக்கை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுகிறது.

“வெவ்வேறு பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் குழுவாக இணைந்திருக்கிறோம். பண்டைய காலம் மற்றும் மத்திய காலகட்டங்களில் எனக்கு ஆர்வமுண்டு. குறிப்பாக பாலுணர்வு, கலை போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். குத்ரத் நவீன இந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரிவில் ஆர்வம் இருப்பதால் எங்களால் விரிவாக ஆராய முடிகிறது,” என்று குழுவினர் பற்றி விவரித்தார் எரிக்.
ஒவ்வொரு பதிவும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பதிவிடப்படுகிறது. 350 வார்த்தைகளுக்கும் இருக்குமாறு உள்ளடக்கத்தை உருவாக்கியிருக்கிறோம். இதில், கலைப்படைப்புகள் இடம்பெற்றிருக்கும். கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள விரும்புவோருக்காக தொடர்புடைய ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஃபேஷன் டிசைனர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், புத்தக வாசகர்கள் போன்றோர் itihasology ஆக்டிவ் ஃபாலோயர்ஸ்.
“பதிப்பகங்களுடன் இணைந்து செயல்படும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். உரையாடல்கள் ஏற்பாடு செய்கிறோம். இதில் புதிதாக வெளியிடப்படும் வரலாற்று புத்தகங்கள் சிறப்பு கவனம் பெறுகிறது,” என்கிறார்.
“எப்படி உங்களிடம் குறையாமல் வரலாறு இருந்துகொண்டே இருக்கிறது?” என ஃபாலோயர் ஒருவர் கேட்டதை எரிக் நினைவுகூர்ந்தார்.
“இந்திய வரலாறு என்பது 1947-ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதாகவும் அதற்கு பிறகு நடந்தவை அனைத்தும் அரசியல் அறிவியல் பிரிவில் கற்றுக்கொடுக்கப்படும் என்றும் பலர் நினைக்கிறார்கள். இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது,” என்கிறார்.
வரலாறு என்பதற்கு முடிவே இல்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணியிலும்கூட அது தாக்கத்தை ஏற்படுத்தும். வரலாற்றில் எல்ஜிபிடிக்யூ+ சமூகம் பற்றிய விவரங்கள் தவிர்க்கப்படுகிறது என்றும் அவற்றை இணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் எரிக் கோரிக்கை வைக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: திவ்யதர்ஷன் சி | தமிழில்: ஸ்ரீவித்யா