வாழ்நாள் முழுதும் கரென்ட் இல்லாமல் வாழும் 79 வயது பாட்டி!
இந்தியாவில் கோடை தொடங்கியுள்ள நிலையில், ஒரு நிமிடம் கூட பேன் இல்லாமல் இருக்கமுடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் ஏசி இருந்தால் இன்னும் பெட்டர் தான் என்று நாம் அதற்கே பொலம்பிக்கொண்டு நாட்களை தள்ளிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு பாட்டி 79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமலே காலத்தை ஒட்டியுள்ளார் என்றால் அச்சச்சோ நம்பவா முடிகிறது...
79 வயதாகும் புனேவை சேர்ந்த Dr.ஹேமா சானே, புத்வார் பெத் என்ற இடத்தில் வீட்டில் மின்சார இணைப்பின்றி வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பேராசிரியை என்பது கூடுதல் தகவல். கரெண்ட் இல்லாமல் ஏன் வாழ்றீங்க என்று கேட்டால்? இயற்கை மீதான ஆர்வம் தான் என்கிறார் இந்த பாட்டி.
“உணவு, உடை மற்றும் வீடு மட்டும் தான் ஒருத்தருக்கு அத்தியாவசியத் தேவை. முன்னாடிலாம் கரெண்ட் இல்லாம தானே இருந்தோம். இதலாம இப்ப வந்ததுதானே? நான் அப்படியே இருந்துட்டு போறேன்...” என்கிறார் பதிலடியாக.
Dr.ஹேமாவுக்கு துணையாக அவரது வீட்டில் நாய், பூனை, கீரி மற்றும் பல பறவைகள் வாழ்கின்றன. ”இது என் வீடு இல்ல... இது இந்த செல்லப்பிராணிகளோடது. நான் அவங்க வீட்டில் இருக்கேன். அதுங்கள பாத்துக்குட்டு...” என்கிறார் ஹேமா.
“என்ன எல்லாரும் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படியே இருந்துட்டு போறேன். இது என் வாழ்க்கை, என் இஷ்டம் போல வாழறேன், அவ்வளவுதான்...” என்கிறார் அசால்ட்டாக.
டாக்டர்.ஹேமா பாட்டனி துறையில் பி.எச்.டி முடித்து புனே கர்வாரி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். புனேவில் உள்ள புத்வார் பெத் என்னும் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார். அவர் வீட்டைச் சுற்றி மரங்கள், அற்புதமான பறவைகளின் ஓசையுடன் அந்த இடமே ரம்மியமாக இருக்கிறது. எண்ணெய் விளக்கேற்றி எரியும் வெளிச்சத்தில் ஹேமாவின் வீடு ஜொலிக்கிறது.
இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் ஹேமா. ஏன் இன்னும் கூட அவர் புக் எழுதிக் கொண்டிருக்கிறாராம். மரங்கள், செடிகள், பறவைகள் பற்றி அவருக்கு தெரியாதவையே இல்லை என்றளவு அதில் ஆழ்ந்த அறிவுள்ளவர் ஹேமா பாட்டி. எல்லாம் சரி, இவ்வளவு வசதி இருந்தும் ஏன் நீங்க மின்சார வசதி எடுத்துக்கல எனக் கேட்டால்,
“எனக்கு கரென்ட் தேவையே இருந்ததில்லை. எல்லாரும் நீங்க எப்படி கரென்ட் இல்லாம வாழ்றீங்கனு கேப்பாங்க, அதுக்கு நான் நீங்க எப்படி கரென்டோட வாழ்றீங்கனு திரும்ப கேப்பேன்,” என்கிறார்.
இந்த பறவைகள் என் குடும்பம், என் நண்பர்கள். என்னைச்சுத்தி எப்போதும் இருக்கும். இந்த வீட்டை விற்றுடுங்க நல்ல விலைக்கு போகும் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் என் மரங்களையும், பறவைகளையும் யார் பராமறிப்பார்கள்? அதனால் அவற்றை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்கிறார். இறுதியாக அவர் சொல்வதெல்லாம்,
“என்னை முட்டாள் என்று சொல்பவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் புத்தர் கூறியது போல், அவரவர்கள் வாழ்வின் வழியை அவரவர் தேடிக்கொள்ள வேண்டும்.”
தகவல்கள் உதவி: ANI | தமிழில்: இந்துஜா ரகுனாதன்