Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

37 வருட சாதனை முறியடிப்பு: தனது ரோல் மாடலை தாண்டி இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான 17 வயது குகேஷ்!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷ், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

37 வருட சாதனை முறியடிப்பு: தனது ரோல் மாடலை தாண்டி இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான 17 வயது குகேஷ்!

Saturday August 05, 2023 , 4 min Read

செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 37 ஆண்டுகளாகத் தக்க வைத்திருந்த இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற இடத்தை, மிகக் குறுகிய காலத்தில் அபாரமாக விளையாடி, தனது திறமையால் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான குகேஷ்.

அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பையின் 2ஆவது சுற்றுப் போட்டியில் இஸ்கந்தரோவை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Gukesh

யார் இந்த குகேஷ்?

2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். குகேஷின் அப்பா ரஜினிகாந்த், அம்மா பத்மா இருவரும் மருத்துவர்கள். வீட்டில் செஸ் விளையாடுவதை வழக்கமாகக்கொண்ட பெற்றோரைப் பார்த்த குகேஷ், தானும் செஸ் விளையாட ஆசைப்பட்டுள்ளார். வீட்டில் நடக்கும் போட்டியில் அப்பாவை வெல்ல வேண்டும் என செஸ் விளையாடத் தொடங்கிய குகேஷ், ஒருசில ஆண்டுகளிலேயே ரேட்டிங் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு செஸ்ஸில் கலக்கினார்.

தற்போது 17 வயதாகும் குகேஷ், தனது 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

பள்ளி ஆசிரியர் போட்ட விதை

குகேஷுக்குள் இருந்த சதுரங்க திறமையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த பாஸ்கர்தான். செஸ் மீது குகேஷுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு, அவருக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார் பாஸ்கர். அதனாலேயே, குகேஷின் முதல் செஸ் கோச் ஆக பாஸ்கரைத்தான் குறிப்பிடுகிறார்கள்.

Gukesh

இது குறித்து குகேஷின் தந்தையும், காது மூக்குத் தொண்டை மருத்துவருமான ரஜினிகாந்த் கூறுகையில்,

“குகேஷுக்கு என பிரத்யேகமாக வார இறுதிநாட்களில் சில செஸ் விளையாட்டுப் பயிற்சிகளை வீட்டுப்பாடமாக அளிப்பார் அவரது கோச் பாஸ்கர். அவற்றை வெகு சுலபமாகவும், விரைவாகவும் குகேஷ் செய்து முடித்ததற்காக, அவனை ஊக்குவிக்கும் விதமாக பேனாவை பரிசாக அளிப்பார் பாஸ்கர். ஒவ்வொரு முறை குகேஷ் பேனாவை பரிசாக பெறும் போதும், அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவைதான் குகேஷின் செஸ் திறமைக்கு முதன்முதலில் கிடைத்த பரிசுகள் ஆகும்,” என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவயது முதலே தினமும் 6-8 மணி நேரங்கள் வரை குகேஷ் செஸ் விளையாட பயிற்சி எடுத்துக் கொள்வாராம். பள்ளிப் படிப்பு பாதிக்காத வகையில், மாலையில் மற்றும் இரவு நேரங்களில் செஸ் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

வெற்றி மீது வெற்றி

முதன் முறையாக 2015ம் ஆண்டு ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்பின் 9 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் போட்டியிட்டு வென்றார். 2018ம் ஆண்டு உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் வெவ்வேறு பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான இவர், கடந்த 2019ம் ஆண்டு இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். குகேஷ்; சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பிறகு உலகின் மிக இளம் வயது கிராண்ட்மாஸ்டராகக் கூடிய வாய்ப்பை வயதில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலவளவினால் இழந்தார்.

சாதனை நாயகன்

ஜனவரி 15, 2019 அன்று 12 வயது, 7 மாதங்கள், 17 நாட்கள் ஆன நிலையில், டெல்லியில் நடைபெற்ற 17வது டெல்லி சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் சக வீரர் டி கே சர்மாவைத் தோல்வியுறச் செய்து உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார். தற்போதைய நிலையில் இந்தியாவின் மிக இளவயது கிராண்ட்மாஸ்டராக உள்ளார். 12 வருடம் 10 மாதம் வயதுடையபோது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தாவின் சாதனையை, மூன்று மாதங்கள் முன்னதாகவே வென்று அசத்தினார் குகேஷ்.

Gukesh

16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில்சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார்.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் நடந்து வரும் செஸ் உலக கோப்பை (2023) தொடரில், 2வது சுற்றுப் போட்டியில் அஜர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்தரோவை வீழ்த்தினார் குகேஷ்.

குகேஷ் 44 நகர்த்தல்களில் இஸ்கந்தரோவை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவரது லைவ் ரேட்டிங் மேலும் உயர்ந்தது. அவரது சமீபத்திய 2.5 மதிப்பீடு புள்ளிகள் அவரது நேரடி மதிப்பீட்டை 2755.9 ஆக உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறினார் குகேஷ்.

நம்பர் ஒன் வீரர்

இதனால், இந்திய தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் 2754.0 வாக இருந்த விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் விளைவாக, குகேஷ் இப்போது உலக தரவரிசையில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 5 முறை உலக சாம்பியனான ஆனந்தை 10வது இடத்திற்கு தள்ளியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை மூலம், இந்திய தரவரிசைப் பட்டியலில் 37 ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, உலகிலேயே ஃபிடே ரேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்தில் உள்ள இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

காத்திருக்கும் அடுத்த சவால்

5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த், 1986ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். இதுவரை அவரது இடத்தை யாரும் பிடிக்க இயலாமல் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இந்திய செஸ் வரலாற்றில் புதியதோர் சாதனையைப் படைத்துள்ளார் குகேஷ்.

Gukesh with Anand

ஆனால், இந்த தரவரிசைப் பட்டியல் நிரந்தரமல்ல. வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்த உயரத்தை குகேஷ் அடைந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

இளம் செஸ் வீரரான குகேஷை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.
Gukesh
உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன. உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது,” என அவர் பாராட்டியுள்ளார்.

சமூகவலைதளங்களிலும் குகேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ரோல் மாடல்

குகேஷ் தனது ரோல் மாடலாக விஸ்வநாதன் ஆனந்த்தைத் தான் வைத்துள்ளார். இப்போது தனது ரோல் மாடலையே பின்னுக்குத் தள்ளி, தன் திறமையால் முதலிடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.